காதலர்தினம் அன்று சிங்கிள்களுக்கு குவிந்த ஆஃபர்கள்...!
காதலர் தினத்தை முன்னிட்டு உணவகங்கள், துணிக் கடைகள் என பலர் தள்ளுபடிகளை அறிவித்திருந்தனர். ஒரு சிறப்பு நாளன்று தள்ளுபடிகளை அறிவிப்பது எப்பொழுதும் நடப்பது தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் காதலர் தினம் அன்று காதலர்களுக்கு தள்ளுபடிகளை அளிக்காமல் ஜோடி இன்றி சிங்கிளாக இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு ஆஃபர்களை அறிவித்ததே இங்கு கவனிக்க வேண்டியது.
’முரட்டு சிங்கிள் ஆஃபர்’ என்று முகநூல் முழுவதும் நேற்று டிரெண்ட் செய்யப்பட்டது.
அந்த வகையில் நேற்று டிரெண்டான ஆஃபர்கள் மற்றும் குவிந்த முரட்டு சிங்கிள்களை பார்ப்போம்:
மெட்ராசி பிரியாணி:
ஆழ்வார்ப்பேட்டை மற்றும் கேளம்பாக்கத்தில் உள்ள ’மெட்ராசி பிரியாணி’ நேற்று முரட்டு சிங்கிள்களுக்கு மட்டும் இலவச பிரியாணி வழங்கியுள்ளது. மதியம் 3-4 மணிக்குள் வரும் சிங்கிள்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கியுள்ளனர் இவர்கள்.
தொப்பி வாப்பா பிரியாணி:
மடிப்பாக்கத்தில் உள்ள மற்றொரு பிரயாணி கடையான ’தொப்பி வாப்பா பிரியாணி’ கடையும் சிங்கிள்களுக்கு சலுகை அளித்தது. அதாவது நேற்று பிரியாணி வாங்கும் அனைத்து சிங்கிள்களுக்கும் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது.
பிரியாணி என்றால் கூட்டம் அலைமோதும், அதிலும் இலவச பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும்? நேற்று இரு கடைகளிலும் சிங்கிள்கள் கூட்டமாக திரண்டுவிட்டனர்.
சாய்காந்த்:
’முரட்டு சிங்கிளும் முக்கா டம்பளர் டீயும்...’ என அதிரடி சலுகையை இணையதளத்தில் டிரண்ட் செய்தது சாய்காந்த்.
ஜோடிகள் இல்லாத சிங்கிள்கள் பெரும்பாலும் இருப்பது டீக்கடையில் தான். அதனை முன்னிட்டு துறைப்பாக்கம் மற்றும் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சாய்காந்த் 3 மணியில் இருந்து 5 மணிவரை நேற்று இலவச டீக்களை வழங்கியது.
பைக்ஸ் & பர்கர்:
கொளத்தூர் மற்றும் அண்ணா நகரில் உள்ள ’பைக்ஸ் & பர்கர்’ உணவகம் நேற்று தினத்தை முரட்டு சிங்கிள் டே என்று அறிவித்து ஒரு பர்கர் வாங்கினால் மற்றொரு பர்கரை இலவசமாக அறிவித்தது.
தி வே இன்–கஃபே:
டி நகரில் உள்ள ’தி வே இன்–கஃபே’ பிப்ரவரி 14 முதல் 21 வரை சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. வரும் ஒவ்வொருவருக்கும் ஆர்டர் செய்யும் ஸ்டார்ட்டர்களுக்கு ஒரு டிரிங்க்கை இலவசமாக வழங்குகிறது.
தலப்பாக்கட்டி பிரயாணி:
அனைத்து சலுகைகளையும் தாண்டி சிக்கன் போக்கே என அறிமுகப்படுத்தியது தலப்பாக்கட்டி. சிறப்பு நாளுக்கோ அல்லது வாழ்த்து தெரிவிக்கவோ பூங்கொத்துகளை வழங்குவது வழக்கம். அதை தகர்த்தெறியும் வகையில் சிக்கனால் ஆன போக்கேவை நேற்று விநியோகம் செய்தது தலப்பாக்கட்டி. பூ பிடிக்காதவர்கள் இருப்பார், சிக்கன் பிடிக்காதவர்கள் எவரேனும் இருப்பாரா?
மற்ற காதலர் தினம் போல் இல்லாமல் இந்த வருடம் காதல் ஜோடிகளுக்கு மட்டுமின்றி தனியாக இருக்கும் ஆண் பெண்களையும் கொண்டாடவிட்டனர் இந்த நிறுவனங்கள். ஜோடி இல்லை என்று ஏங்கும் காதலர்தினம் இனி இல்லை.
உணவை விட சிறந்த ஜோடி எது...?