10 நிமிடங்களில் ஹோம் டெலிவரி: விரைவில் 20 நகரங்களில் ’ஓலா டேஷ்’ அறிமுகம்!
பத்து நிமிடங்களில் டெலிவரி செய்வதாகக் கூறும், ஓலாவின் கடையில் இருந்து வீட்டிற்கு டெலிவரி செய்யும் ஓலா டேஷ் சேவை, 20 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இணைய கால்டாக்சி சேவை நிறுவனமான ஓலா, தனது விரைவு காமர்ஸ் சேவையான 'ஓலா டேஷ்' 'Ola Dash' சேவையை அடுத்த ஆறு மாதங்களில் 20 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. வேர்ஹவுஸ் கடைகள் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஓலா ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை, பெங்களூரு, மும்பை, தில்லி. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட 9 நகரங்களில் தனது 'ஸ்டோர் டூ டோர்' சேவை வாயிலாக பத்து நிமிடங்களுக்குள் டெலிவரி செய்வதாகக் கூறுகிறது. 200 வேர்ஹவுஸ் கடைகள் மூலம், 2500 இருப்பு பொருட்களை வழங்குகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆர்டர் அளவை நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்திற்கு மேல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்னேக்ஸ், குளிர்பானமங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படுகின்றன.
“கடந்த பத்தாண்டுகளாக தேவைக்கேற்ற போக்குவரத்து வர்த்தகத்தில் ஓலா முன்னணியில் இருக்கிறது. எங்களுடைய மேம்பட்ட புவிசார் அடையாள நுட்பம், வாடிக்கையாளர்களைப் பெறுவதில் குறைந்த செலவு ஆகியவை இணைந்து, அனைவருக்கும் போக்குவரத்து வழங்க சாதகமான நிலையை அளிக்கிறது,” என ஓலா முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி அன்சுல் கந்தல்வேல் தெரிவித்துள்ளார்.
“தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் சேவையை தினசரி வசதிகளுக்காக வாடிக்கையாளர்கள் நாடும் நிலையில் எங்கள் விரைவு காமர்ஸ் சேவை, வாடிக்கையாளர்களுடான தொடர்பில் முக்கியமாக திகழ்கிறது. அடுத்த சில மாதங்களில் எங்களுடையை சேவையை இன்னும் விரிவாக்குவோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓலா டேஷ், போக்குவரத்து துவங்கி, ஓலா உணவு வரை விரிவு பெற்றுள்ள போக்குவரத்து சார்ந்த சேவையில் இப்போது விரைவு காமர்ஸையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவில் ஏற்கனவே உள்ள ஜெப்டோ, டன்சோ, ஸ்விக்கி, ஜொமேட்டோ ஆதரவு பெற்ற பிலின்கிட் ஆகிய சேவைகளுடன் ஓலா போட்டியிடுகிறது.
ஆங்கிலத்தில்: ஐஸ்வர்யா லட்சுமி | தமிழில்: சைபர் சிம்மன்