ஜோமாட்டோ, ஸ்விக்கி, ஓலா நிறுவனங்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு!
செயலி அடிப்படையிலான தொழிலாளர்களை 'தொழிலாளர்கள்' என அறிவிக்க அல்லது அங்கீகரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென உச்ச நீதிமன்றத்தின் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செயலி அடிப்படையிலான தொழிலாளர்களை 'தொழிலாளர்கள்' என அறிவிக்க அல்லது அங்கீகரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதில் ஸ்விக்கி, ஜோமாட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. இதேபோல், டாக்ஸி, ஆட்டோ போன்ற போக்குவரத்து சேவைகளில் ஊபர், ஓலா நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை தொழிலாளர்கள் என அங்கீகரிக்க வேண்டுமென ஆப்-அடிப்படையிலான டெலிவரி நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப் மூலமாக டெலிவரி மற்றும் ஓட்டுநர் பணிகளில் ஈடுபடுபவர்களுக்காக செயலி அடிப்படையிலான போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பு (IFAT) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு டெலிவரி மற்றும் ஓட்டுநர்களாக பணியாற்றும் நபர்களுக்கு சட்டப்பூர்வ சலுகைகள், சமூகப் பாதுகாப்பு உரிமைகள் ஆகியவை கிடைக்க போராடி வருகிறது.
செயலி அடிப்படையிலான போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பு (IFAT) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று மத்திய அரசு அமைச்சகங்களைத் தவிர, ஜோமாட்டோ, பண்டல் டெக்னாலஜிஸ் (ஸ்விக்கி), ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் (ஓலா), மற்றும் உபெர் இந்தியா சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜோமாட்டோ நிறுவனம் பங்குச்சந்தைக்கு தெரிவித்துள்ள அறிவிப்பின் படி,
ஆப் அடிப்படையிலான தொழிலாளர்களை 'தொழிலாளர்கள்' என்று அறிவிக்க அல்லது அங்கீகரிக்க அல்லது சமூக பாதுகாப்பு சட்டங்களின் கீழ் 'அமைப்புசாரா தொழிலாளர்கள்' அல்லது 'கூலித் தொழிலாளர்கள்' என அங்கீகரிக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த மனுவில், IFAT அமைப்பானது ஆப் அடிப்படையிலான தொழிலாளர்களுக்கான செயல்பாட்டுத் திட்டங்களை வகுக்கவும், செயலி அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு COVID-19 தொற்றுநோய் தொடர்பான நிவாரணத்திற்கான வழிகளை வகுக்கவும் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், ரிட் மனுவில், ‘கிக் (gig workers) அல்லது பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு’ அமைப்புசாரா துறை, கிக் தொழிலாளர்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் பணியாளர்களை அவர்களின் காப்பீடு மற்றும் உடல்நலம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020ன் கீழ் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என கோரியுள்ளது.
2020ம் ஆண்டு செப்டம்பர் வரை ஜோமாட்டோ நிறுவனத்தில் மாதம் 3 லட்சத்திற்கும் அதிகமான டெலிவரி பார்ட்னர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் IPO-வின் படி பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952 இன் அடிப்படையில் Zomatoவின் டெலிவரி பார்ட்னர்கள் யாரும் பணியாளர்கள் அல்ல எனக்குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
“எங்கள் டெலிவரி பார்ட்னர்களை பணியாளராக கருதப்படும் எந்த விளக்கமும், எங்களுடைய செலவுகளைஅதிகரிக்கலாம், மேலும், வணிகம், இயக்க மாதிரிகள், பணப்புழக்கம், நிதி நிலைமை, செயல்பாடுகள் ஆகியவற்றை மோசமாக பாதிக்கலாம்,” என பங்குதாரர்களை ஜோமாட்டோ நிறுவனம் எச்சரித்துள்ளது.
அரசாங்கம் தற்போதுள்ள மத்திய தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக ஊதிய குறியீடு 2019, சமூகப் பாதுகாப்பு, 2020, தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் சட்டம், 2020 மற்றும் தொழில்துறை உறவுகள் குறியீடு 2020 ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது.
சமூகப் பாதுகாப்புச் குறீயிடு 2020, ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்குவதில் சீரான தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 இன் படி,
'பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள்' அல்லது 'கிக் தொழிலாளர்கள்', சவாரி-பகிர்வு சேவைகள், உணவு மற்றும் மளிகை விநியோக சேவைகள், லாஜிஸ்டிக் சேவைகள், ஆன்லைன் சந்தைகள் மற்றும் சரக்குகளின் மொத்த அல்லது சில்லறை விற்பனைக்கான சரக்கு தளங்களில் பணியாளர்களாக இருக்கலாம். மற்றும் சேவைகள், தொழில்முறை சேவை வழங்குநர்கள், சுகாதாரம், பயணம் மற்றும் விருந்தோம்பல் மற்றும் உள்ளடக்கம் மற்றும் ஊடக சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
சமூக பாதுகாப்பு குறியீடு 2020-யின் கீழ் தொழிலாளர்கள் e-shram portal தளத்தில் பதிவு செய்து கொள்வதன் மூலமாக ஆயுள் மற்றும் ஊனமுற்றோர் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் மகப்பேறு நலன்கள், முதியோர் பாதுகாப்பு போன்ற பலன்களைப் பெற முடியும்.
மத்திய அரசின் இந்தத் திட்டங்களுக்கு டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்கள் நிதி பங்களிப்பை அளிக்க வேண்டி வரும். அப்படி திரட்டப்படும் நிதியானது அமைப்பு சாரா தொழிலாளர்கள், கிக் தொழிலாளர்கள் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் ஆகியோரின் நலன் மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு பங்களிப்பாக அமையும். எனவே தான் சமூக பாதுகாப்பு குறியீடு 2020-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்துவதற்காக IFAT அமைப்பு காத்துக்கொண்டிருக்கிறது.
ஆங்கில கட்டுரையாளர் - குணால் தல்கேரி | தமிழில் - கனிமொழி