அன்று ரிக்ஷா ஓட்டுநர்: இன்று வெற்றித் தொழில் முனைவோர்: மாற்றி யோசித்து சாதித்த விவசாயி!
ஆண்டுக்கு ரூ.67 லட்சம் வருமானம்!
ஹரியானாவின் யமுனா நகரில் உள்ள டம்லா கிராமத்தைச் சேர்ந்த தரம்பிர் கம்போஜ். 1970 காலகட்டத்தில் இளைஞராக இருந்தபோது அவரின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது.
இதனால், அவரால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. படிப்பை விட்டுவிட்டு தனது குடும்பத்தின் பண்ணை மற்றும் மூலிகைத் தோட்டங்களைக் கவனிக்கத் தொடங்கினார். அவர் கவனித்துவந்த அந்த வேலையில், கிடைத்த வருமானம் குடும்பத் தேவைகளையும், நோய்வாய்ப்பட்ட தாய் மற்றும் சகோதரியின் மருத்துவ சிகிச்சையை கவனிக்கும் அளவுகூட போதவில்லை.
சில ஆண்டுகள் விவசாயம் செய்தாலும் அவரால் தனது நிதி நிலையை மேம்படுத்த முடியவில்லை. யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில்,
“அந்த காலகட்டத்தில் என் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்தார். என் சகோதரி உயிர் பிழைக்க சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. ஆனால் எங்களிடம் பணம் இல்லை. என் மகளும் அந்த நேரத்தில் தான் பிறந்தாள். இதுபோன்ற சூழ்நிலைகளால் எனக்கு அன்றாட வாழ்க்கை நகர்த்துவது கூட கடினமாக இருந்தது," என்று நிலையை விளக்குகிறார்.
இப்படி ஒரு காலத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்த தரம்பிர் கம்போஜ் தற்போது தனது கண்டுபிடிப்பு இயந்திரத்தை 15 நாடுகளுக்கு விற்று ஆண்டுக்கு ரூ.67 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார்.
தரம்பிர் கம்போஜ், 1980 காலகட்டத்தில் ஒருமுறை வேலை தேடுவதற்காக டெல்லி சென்றுள்ளார். பட்டப்படிப்பு இல்லாததால் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. உணவுக்காக அங்கு கிடைத்த வேலைகளை பார்க்கத் தொடங்கினார். ரிக்ஸா ஓட்டத் தொடங்கினார்.
அங்கு இருந்த சமயத்தில் டெல்லி மக்கள் பழங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதை கவனித்துள்ளார். அந்த பழங்கள் அவரின் ஊரில் அதிக எண்ணிக்கையில் விளையக்கூடியவை. மேலும், பல நேரங்களில் அந்த பழங்களுக்கு விலை இல்லை எனக் கூறி சாலையில் வீசுவதும் அவருக்கு நியாபகம் வந்துள்ளது.
இவை ஏன் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படுகின்றன என்று தேடியவருக்கு அந்தப் பழப் பொருட்களை கொண்டு ஜாம், புட்டிங் போன்ற போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுவதை அறிந்துகொண்டார். நாளாக நாளாக பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் சந்தையை புரிந்துகொள்ள தொடங்கினார். இடையில் ஏற்பட்ட விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தவர், தனது கிராமத்திற்கே திரும்பிச் சென்று விவசாயம் செய்துவந்தார்.
விவசாயம் செய்தாலும், அவரின் எண்ணம் டெல்லியில் அவர் கண்ட பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்த தொழிலில் தான் இருந்தது. இதனால் விவசாயத்தை பார்த்துக்கொண்டே அது தொடர்பான ஆராய்ச்சியைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக, அவர் இயற்கை விவசாயம் தொடர்பான பல சோதனைகளையும் நடத்தினார்.
பின்னர் தனது நிலத்தில் ஒரு சிறிய விவசாய ஆய்வகத்தை அமைத்தார். காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் பிற விவசாய முறைகளில் அவரது புதுமையான பணி அவருக்கு பல பாராட்டுகளைப் பெற்றுகொடுத்தது.
குறிப்பாக தனது வயல்களில் விலை உயர்ந்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிற அரிய பழங்களை விவசாயம் செய்தது அவருக்கு மேலும் அங்கீகாரத்தைத் தேடி கொடுத்தது. இந்த அங்கீகாரம் 2004-ல், ஹரியானா தோட்டக்கலைத் துறை மூலம் ராஜஸ்தானுக்குச் செல்லும் வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்தது.
இந்த பயணத்தின் போது கற்றாழை மற்றும் அதன் மருத்துவ மதிப்புள்ள பொருட்களை குறித்து தெரிந்துகொண்டவர் தனது கிராமத்திற்குத் திரும்பிய பிறகு, அலோ வேரா ஜெல் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஒரு இலாபகரமான முயற்சியாக சந்தைப்படுத்துவதற்கான வழிகளைத் தேடத் தொடங்கினார்.
இந்த காலகட்டத்தில் ஒரு வங்கி மேலாளர் மூலமாக உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை கற்றுக்கொண்டவர், அதனை வாங்கத் தீர்மானித்தார். ஆனால் அந்த இயந்திரத்தின் விலை மலைக்க வைத்தது. ரூ.5 லட்சம் இருந்தது அதன் விலை.
இந்த விலை அவரை மாற்றி யோசிக்க வைத்தது. அந்த இயந்திரத்தை அவரே தயாரிக்க முடிவெடுத்தார். எட்டு மாதங்களுக்கு பிறகு ரூ.25 ஆயிரம் முதலீட்டில் இறுதியாக அந்த இயந்திரத்தை அவரே தயாரித்தார்.
அவர் கண்டுபிடித்த அந்த இயந்திரம் பல செயல்திறன்களைக் கொண்டிருந்ததால் விரைவில் நல்ல வரவேற்பையும் பெற்றது. தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை மூலம் தனது இயந்திரத்திற்கான காப்புரிமையும் பெற்றார். இந்த இயந்திரங்களை இந்தியா மட்டுமில்லாமல், அமெரிக்கா, இத்தாலி, நேபாளம், ஆஸ்திரேலியா, கென்யா, நைஜீரியா, ஜிம்பாப்வே, உகாண்டா உள்ளிட்ட 15 நாடுகளில் தற்போது விற்று வருகிறார்.
தற்போது ஆண்டுக்கு அவர் ஈட்டி வரும் வருமானம் மட்டும் ரூ.67 லட்சம். அன்று கந்தல் துணியை உடுத்திக்கொண்டு டெல்லியில் சுற்றித்திரிந்தவர் இன்று நம்பிக்கைக்குரிய தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: மலையரசு