இயந்திர கருவிகள் வணிகம் தொடங்கி 400 ஊழியர்களுடன்; 82 கோடி வருவாய் ஈட்டும் விவசாயி மகன்!
வாடகைக்கு எடுக்கப்பட்ட ஷெட் ஒன்றில் ஒரே ஒரு ஊழியரை நியமித்து வணிகத்தை தொடங்கிய சுனில் கிர்தக் இன்று 400 ஊழியர்களுடன் முன்னணி நிறுவனங்களுக்கு சேவையளித்து வருகிறார்.
ஔரங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் கிர்தக். இவர் வேலை நிமித்தமாக மிகப்பெரிய தொழிற்சாலைகளுக்கு செல்வார். அவ்வாறு செல்லும்போதெல்லாம் உலகத் தரம் வாய்ந்த ஒரு தொழிற்சாலையை சொந்தமாக உருவாக்கவேண்டும் என்று கனவு காண்பார்.
ஷெட் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டு பல நாட்கள் யாருக்கும் வாடகைக்குக் கொடுக்கப்படாமல் இருந்தது. அந்த ஷெட்டில் சுனில் 2004-ம் ஆண்டு Tool Tech Toolings நிறுவினார்.
இன்று இந்நிறுவனம் 400 ஊழியர்களை பணியமர்த்தி பெருந்தொற்று காலத்திலும் 82 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
இந்நிறுவனம் சிஎன்சி மற்றும் விஎம்சி, ஃபோர்ஜிங், ஆட்டோமொபைல் துறைக்கான எலக்ட்ரிக்கல் அசெம்பிளி, ஃபிக்சர்ஸ் தயாரிப்பு, கேஜ் (Gauge), குறிப்பிட்ட தேவைக்காக வடிவமைக்கப்படும் இயந்திரங்கள், ரோபோடிக் ஆட்டோமேஷன் போன்றவற்றைத் தயாரிக்கிறது.
பஜாஜ் ஆட்டோ, ஹோண்டா, யமஹா, டிவிஎஸ், ஃபோர்க்ஸ்வேகன், ஸ்கோடா, ராயல் என்ஃபீல்ட், சீமன்ஸ் என ஆட்டோமொபைல் துறையின் முன்னணி பிராண்டுகளுக்கு இந்நிறுவனம் சேவையளிக்கிறது.
தொழில்முனைவின் தொடக்கம்
44 வயதாகும் சுனில், நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நன்றாக படித்தால் மட்டுமே வாழ்க்கையை சிறப்பாக வாழமுடியும் என்று இவரது அப்பா எப்போதும் சொல்வதுண்டு.
ஔரங்காபாத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் பொறியியல் படிப்பையும் எம்பிஏ ஃபைனாஸும் படித்தார். வழக்கமான அலுவலக வேலைகளில் இவருக்கு திருப்தி ஏற்படவில்லை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்முனைவு முயற்சியைத் தொடங்கும் எண்ணம் தோன்றியது. 2002-ம் ஆண்டு நான்கு நண்பர்களுடன் இணைந்து இயந்திர வணிகத்தைத் தொடங்கினார். ஆனால் பார்ட்னர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வணிக முயற்சி நிறுத்தப்பட்டது.
”அந்த சமயத்தில் என் மனைவி கர்ப்பமாக இருந்தார். மனமுடைந்து போயிருந்த என்னிடம் என் மனைவி பேசினார். அவர் பிரசவத்திற்காக பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டு கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகே வீடு திரும்புவார் என்பதால் கவனம் சிதறாமல் முழு ஈடுபாட்டுடன் புதிய வணிக முயற்சியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்,” என்று சுனில் விவரித்தார்.
ஆறுதலான இந்த வார்த்தைகள் சுனிலுக்கு உற்சாகமளித்துள்ளது. பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலகிய நிலையில் அங்கிருந்த ஒரு லேத் மிஷினையும் ட்ரில்லிங் மிஷனையும் வாங்கிக்கொண்டார்.
“அந்த இயந்திரங்களை ஆட்டோவில் கொண்டு வந்தேன். ஔரங்காபாத்தில் உள்ள சிகல்தானா தொழிற்பேட்டையில் 6,800 ரூபாயில் ஷெட் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இயந்திரங்களை அங்கு இறக்கினேன். ஒரு வேலையாளை பணியமர்த்தினேன்,” என்று ஆரம்ப நாட்களை நினைவுகூர்ந்தார்.
சில நாட்களில் முதல் ஆர்டர் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு 50,000 ரூபாய்.
“50 சதவீத தொகையை முன்பணமாக செலுத்துவது அப்போது வழக்கமாக இருந்தது. அதைக் கொண்டு பொருட்களை வாங்கி ஆர்டர் தேவையைப் பூர்த்தி செய்தேன். டிசைனர், பொறியாளர், அக்கவுன்டன்ட் என அனைத்து வேலைகளையும் நானே செய்தேன்,” என்கிறார் புன்னகையுடன்.
அடுத்தடுத்து இரண்டு ஆர்டர்கள் கிடைத்தன. அதன் பிறகு ஆர்டர் எதுவும் வரவில்லை. சுனிலின் நண்பர் ஒருவர் குழந்தைகளுக்கான மருத்துவமனை அமைத்து வந்தார். அதற்காக படுக்கை, சலைன் ஸ்டேண்ட், இதர ஃபர்னிச்சர் போன்றவை தேவைப்பட்டது.
”வேறு ஆர்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் வருமானத்திற்காக இந்த வேலையை ஒப்புக்கொண்டேன்,” என்கிறார்.
படிப்படியாக வேலையாட்கள் எண்ணிக்கையை அதிகரித்து ஃபிக்சர்ஸ், கேஜ், ஹைட்ராலிக், சிறப்பான பயன்பாட்டிற்கான இயந்திரங்கள் போன்றவற்றை இணைத்துக்கொண்டார். வணிகம் விரிவடைய ஆரம்பித்தது.
தொழில் புரட்சி 4.0
சுனில் அடுத்தகட்டமாக மின்னணு பாகங்கள் தயாரிப்புப் பணிகளுடன் விரிவடைய நிலம் வாங்கினார். மிகப்பெரிய நிறுவனம் ஒன்றிற்கு சேவையளித்துள்ளார். பணத்தைக் கொடுக்க 45 நாட்கள் அவகாசம் இருந்தபோதும் சுனிலுக்கு உதவுவதற்காக 15 நாட்களிலேயே தொகையைக் கொடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் வரை இதேபோல் இந்நிறுவனம் உதவியுள்ளது.
Siemens நிறுவனத்திற்காக மற்றுமொரு தொழிற்சாலை தொடங்கப்பட்டு, மின்னணு தொழிற்சாலையும் இணைக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு Kalyani, Yamaha போன்ற நிறுவனங்களுக்காக ஃபோர்ஜிங் செயல்பாடுகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
”ஔரங்காபாத்தில் 200 ரூபாய் மதிப்புடைய ஆர்டர் தேவையைப் பூர்த்தி செய்யத் தொடங்கினோம். இன்று 5 சதவீத ஆர்டர் மட்டுமே மகாராஷ்டிராவில் இருந்து கிடைக்கிறது. 95% ஆர்டர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்படுகின்றன,” என்கிறார் சுனில்.
Tool Tech Toolings அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இயந்திர கருவி துறையானது முன்னணி நிறுவனங்களின் செயல்பாடுகளுடன் அதிக போட்டி நிறைந்ததாகவே காணப்படுகிறது. இந்தியாவில் இயந்திர கருவி சந்தையானது 2020-2024 ஆண்டுகளிடையே 13 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடைந்து 1.9 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருந்தொற்று சமயத்தில் வணிகம் பாதிக்கப்பட்டபோதும் புதுமையான முயற்சிகளுக்கு வழிவகுத்துள்ளதாக சுனில் குறிப்பிடுகிறார். பெருந்தொற்று சமயத்தில்தான் இவர் கிச்சன் சிங்க் தயாரிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். இந்தத் தயாரிப்பு சிறப்பாக விற்பனையாகி வருகிறது.
ஆர் & டி மையம் அமைப்பதற்காக டெல்லி-மும்பை இண்டஸ்ட்ரியல் காரிடர் பிராஜெக்டில் நிலம் வாங்கியுள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்குள் இது தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுனில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான தேசிய விருது, முதல் தலைமுறை தொழில்முனைவர் விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.
விவசாயப் பின்னணி
சுனில் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள அடாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது அம்மா விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது அப்பா உயர்கல்வி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுனிலுக்கு 6 வயதிருக்கையில் ஔரங்காபாத் பகுதிக்கு மாற்றலாகியுள்ளனர்.
2012-ம் ஆண்டு தங்களது சொந்த கிராமத்துக்குத் திரும்பிய சுனிலின் பெற்றோர் புதுமையான விவசாய முறைகளைப் பின்பற்றி லாபகரமாக விவசாயம் செய்தனர். மற்ற விவசாயிகளும் புதிய விவசாய நுட்பங்களைப் பின்பற்ற சுனிலின் பெற்றோர் உதவி வருகின்றனர்.
”பணத்தை சம்பாதிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்பதை என் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டேன். தொழில் தொடங்கும் ஆரம்ப நாட்களில் இருந்தே பணத்தைப் பற்றி அதிகம் யோசிப்பதால் எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் மிகப்பெரிய பிராண்டாக வளர்ச்சியடையமுடிவதில்லை. அரசாங்க கொள்கைகளும் தவறாகவே வகுக்கப்பட்டுள்ளன. நிலத்திற்குதான் சலுகைகள் கொடுக்கப்படுகிறதே தவிர தொழில்முனைவோருக்கு கொடுக்கப்படுவதில்லை,” என்கிறார் சுனில்.
இரண்டாம் நிலை நகரத்தில் இருந்து சிறியளவில் வணிக முயற்சி ஒன்றைத் தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சேவையளிக்கும் வகையில் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்துள்ள சுனில் பலருக்கு நம்பிக்கையளிக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி டி | தமிழில்: ஸ்ரீவித்யா