மாற்றுத் திறனாளிகளின் காதல் களம்: டேட்டிங் ஆப்-களில் சில அனுபவங்கள்!
ஒருவருக்குப் பொருத்தமான காதலரைக் கண்டறிவதே கடினமான காலகட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு சில டேட்டிங் தளங்கள் காதல் படிக்கட்டுகளாகத் திகழ்வது எப்படி?
தற்போதையச் சூழலில் பலரும் தங்களுக்குப் பொருத்தமான காதலரையோ இணையரையோ கண்டறிந்து காதல் வளர்க்கப் பயன்படுத்தும் வழிகளில் ஆன்லைன் டேட்டிங் வலைதளங்களை நாடுவது முதன்மை வகிக்கிறது. ஆனால், ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருக்கும்போது, அவருக்குக் காதல் உறவை உருவாக்குதும் மேம்படுத்துவதும் மிகுந்த சவால் நிறைந்தது என்பதை விவரிக்கத் தேவையில்லை. குறிப்பாக, பாகுபாடு காட்டப்படுவதும், அதனால் ஏற்படுகின்ற வலியின் வடுக்களும் ஏராளம்.
போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த 30 வயது அனிஷா பானு முல்தானி, ஆறு ஆண்டுகால சிங்கிள் விரததுக்குப் பிறகு தனது வாழ்வின் சிறப்புத் தோழர் ஒருவரை சந்திக்க முடிவு செய்கிறார். காதல் நம்மைத் தேடிவரும் எனக் காத்திருக்காமல், ஆன்லைன் டேட்டிங் தளத்தை நாடுகிறார். அதன்மூலம் தனக்குப் பொருத்தமான கரானா இம்ரான் என்பவரைக் கண்டறிகிறார். குஜராத்தின் ஜுனாகத் பகுதியைச் சேர்ந்த கரானா இம்ரான் ஒரு அக்கவுன்டன்ட். அவரும் போலியோ பாதிப்புக்கு உள்ளானவர். இரு மனமும் இணைகிறது. 2017இல் திருமணம் நடக்கிறது.
மக்கள் தங்களுக்குப் பொருத்தமான இணையரை ஆன்லைன் டேட்டிங் ஆப்-களில் தேடும் காலகட்டத்தில், நிராகரிப்பு அச்சம்தான் எவரும் எதிர்கொள்ளக் கூடியதும், கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடியதுமான எதிர்மறை உணர்வு. பிறருக்குப் பிடித்தவராக நன்றாக இல்லையோ என்ற சந்தேகத்துடன், அச்ச உணர்வுக்கு ஆளாகக் கூடிய வகையில் நிராகரிப்பு தரும் மோசமான விளைவுகள் அதிகம். இந்த நிராகரிப்பு அச்ச உணர்வு அனைவருக்குமே பொதுவானதாக இருக்கும் சூழலில், மாற்றுத் திறனாளிகள் இதுபோன்ற பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வார்கள் என்று நம்மில் பலரும் என்றைக்காவது யோசித்திருக்கிறோமா?
மாற்றுத் திறனாளிகள் தங்களது நிலை காரணமாக அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளால் மனத்தில் ஆறாத வடுக்களைச் சுமக்க வேண்டியதாக இருக்கிறது. அவர்கள் சமூகத்தில் மக்களுடன் பழகுவது, நட்பு வட்டத்தை விரிவாக்குவது, உறவுகளை உருவாக்கிக் கொள்வதில் ஈடுபட முற்பட்டால், அந்தக் காயங்களும் வலிகளும் மென்மேலும் கூடும் வகையிலான சம்பவங்கள் அரங்கேறலாம் என்பதே யதார்த்தமான நிஜம்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த இடங்களை உருவாக்கும் முன்முயற்சிகளுள் ஒன்றான RampMyCity-யின் முன்னோடியான பெங்களூரைச் சேர்ந்த ப்ரனீத் காந்தேவால் கூறியது:
"மக்கள் தங்களது மனப்பூர்வமாகவும் உளபூர்வமாகவும் இணைந்திருக்க வேண்டும் என்றே எப்போதும் சொல்கிறார்கள். ஆனால், அவர்களது பார்வை என்பது உடல் ரீதியானதைத் தாண்டிச் செல்வது இல்லை என்பதை நம் சமூகத்தின் இயல்பு நிலை. மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிகளையும், அவர்களது புறச்சூழலையும் தாண்டி, அவர்களின் அகம் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய ஓர் ஆளுமையை யாருமே கவனிப்பது இல்லை. மாற்றுத் திறனாளி ஒருவருடன் காதல் பயணம் மேற்கொண்டால், அவருடன் நடனமாட முடியாது, பயணிக்க முடியாது அல்லது அவருடன் மகிழ்வாக நேரத்தைக் களித்திட முடியாது என்றே பலரும் யோசிக்கிறார்கள்."
ஆன்லைன் டேட்டிங்கும் மாற்றுத் திறனாளிகளும்
ஆன்லைன் டேட்டிங்கில் மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரையில், ஒருவர் தன்னைப் பற்றி வெளிப்படையாக டேட்டிங் தளத்தில் பகிரவேண்டும் என்ற அடிப்படை விதியைக் கடைபிடித்தல் அவசியம். அதேபோல், தங்களைப் பற்றிய மேன்மையான விஷயங்கள் அனைத்தையும் பட்டியலிட வேண்டியதும் இங்கே அவசியம். மேலும், டேட்டிங்கை தீர்மானிப்பதே கூட பல்வேறு தீர்க்கப்படாத அனுபவங்களைத் தரலாம். இவை அனைத்துமே மாற்றுத் திறனாளிகள் என்று வரும்போது இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுவது கவனத்துக்குரியது.
சச்சின் சாமரியா (28) தன் ஆன்லைன் டேட்டிங் தள அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தன் பதின்ம வயதில் விபத்தில் சிக்கிய சச்சின் நெஞ்சின் இடப்பக்கத்தில் முடக்கப் பிரச்னை உண்டானது. எனினும், தொடர் சிகிச்சையாலும் தெரபி மூலமாகவும் அவரது கைகள் லேசாக இயங்கத் தொடங்கின. தற்போது அவர் பொருளாதார அடிப்படையிலும் சுதந்திரமானவராக இருக்கிறார். அவர் கூறியது:
"என்னுடைய குறைபாடுகள் குறித்து நான் மிகவும் வெளிப்படையாகவே இருப்பேன். ஆரம்பத்திலேயே என் குறைபாடுகள் பற்றி நடந்தது என்ன என்பதை முழுமையாகச் சொல்லிவிடுவேன். என்னிடம் பழகத் தொடங்குபவரிடம் என்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்வதற்கு ஒருபோதும் நான் தயக்கம் காட்டியதோ, கவலைகொண்டதோ இல்லவே இல்லை."
எனினும், நேர்மை எப்போதாவது உரிய பரிசை வழங்கும். பெரும்பாலும் ஒரு சில மெசேஜ்களுடனே உரையாடல்கள் நிறைவடைந்துவிடும்; பல நேரங்களில் சொல்லாமல் கொள்ளாமல் உரையாடல்கள் துண்டிக்கப்படுவதும் உண்டு. அப்போதெல்லாம், தன்னிடம் உரையாடும் பெண் வேறு எதையோ எதிர்பார்க்கிறார் என்றும், ஒரு மாற்றுத் திறனாளியிடம் உரையாடுவதில் ஏதோ தயக்கம் இருக்கலாம் என்றும் தான் நினைத்துக்கொண்டு தன்னைத் தானே தேற்றிக்கொள்வதாகச் சொல்கிறார் சச்சின்.
ஒருவர் தன்னைக் காதலித்து வந்தவராலேயே நிராகரிக்கப்படுவது பெரும் மனத்துயரத்தைத் தரும். இத்தகைய காதல் முறிவு அனுபவம் ஒன்று தனக்கும் உண்டு என்கிறார் பிரதீக். அவரும் ஒரு பெண்ணும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒருநாள் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த கட்டடத்தின் முதல் மாடியில் நின்றுகொண்டு நண்பரிடம் பிரதீக் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி கீழே விருந்தவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையிலும் தண்டுவடத்திலும் பயங்கர காயம் ஏற்பட்ட நிலையில், பிரதீக் உடம்பின் பல பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முடிவில், அவரது இடுப்புக்கு கீழே முழுமையான செயலிழப்பு.
"விபத்து நடந்து ஒரு வருடத்துக்குப் பின் என்னுடனான காதலை என் காதலி முறித்துக் கொண்டார். தன்னிடத்தில் யார் இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுத்திருப்பார்கள் என்று அவர் சொன்னார். நான் மாற்றுத் திறனாளி ஆன நிலையில், வாழ்நாள் முழுவதும் தன்னைச் சார்ந்து வாழக்கூடிய ஒருவருடன் என்னால் வாழ்க்கை நடத்த முடியாது என்று கூறிவிட்டு என் காதலி என்னைப் பிரிந்துவிட்டார்."
இதை நம்மிடம் விவரித்த பிரதீக், டேட்டிங் ஆப்-களைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு தான் எதிர்கொண்ட வெவ்வேறு பிரச்னைகளையும் பகிர்ந்துகொண்டார். அவை:
"என்னிடம் பெண்கள் நிறைய பேர் இப்படிக் கேட்பார்கள்: 'ஓ மை காட், நீங்க இப்போ நல்லா இருக்கீங்களா? இந்தப் பிரச்னை நிரந்தரமானதா? உங்க பக்கத்துல உட்கார்றதுக்கே ஒரு மாதிரியா இருக்கும்... என்னைப் பார்ப்பவங்க என்ன நினைப்பார்கள்? நீங்க படுக்கையில சரியா செயல்படலைன்னா என்ன ஆகும்?'
டேட்டிங் செல்லக் கூடிய மாற்றுத் திறனாளிகள் வழக்கமான கண்ணோட்டத்தை எதிர்கொள்வது, சிறுமைக்கு ஆளாவது, இரக்கத்துக்கு உள்ளாவது எல்லாமே இயல்பாகிவிட்டது."
டேட்டிங் ஆப் அனுபவங்கள்!
இந்தியாவில் 3,48,00,000-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் டேட்டிங் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். Tinder, Truly Madly, Woo, மற்றும் Aisle உள்ளிட்ட ஏராளமான ஆப்-கள் உள்ளன. இந்தச் செயலிகளில் 'சிங்கிள்' என்று சொல்லப்படுவர்கள் மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளும் வலம் வருகின்றனர்.
இதுகுறித்து சச்சின் கூறும்போது, "நான் டிண்டரில் நான்கைந்து ஆண்டுகளாகவே இருக்கிறேன். காஃபி மீட் பெங்கால் போன்ற குழுக்களிலும் இருக்கிறேன். சமீபத்தில் Bumble-ஐ கூட டவுன்லோடு செய்திருக்கிறேன். இதுபோன்ற ஆப்-களுக்குச் சென்று பார்ப்பது என்பது ஒருவித ஆர்வத்தின் காரணமாகத்தான். இதெல்லாம் நிஜ வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்று அறியும் ஆர்வமும் காரணம்," என்கிறார்.
ஆன்லைன் டேட்டிங் அனுபவத்தைப் பொறுத்தவரையில், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது. முன்பின் தெரியாத ஒருவரிடம் மெசேஜ் மூலம் உரையாடுவது, புதிய நபர்களைச் சந்திப்பது போன்றவற்றால் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும் அனுபவம்தான் தங்களுக்கும் ஏற்படுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
"சமூகத்தில் மற்ற அனைவரையும் போலவே நானும் வெவ்வேறு விதமான மனிதர்களைச் சந்திப்பதில் விருப்பம் கொண்டிருக்கிறேன். டேட்டிங் மீதும் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் ரிலேஷன்ஷி மேம்பட உதவலாம் என்றும் நம்புகிறேன்," என்கிறார் சச்சின்.
மேலும், பொது இடங்களிலும் தங்களுக்கு ஏற்ற வசதிகள் இல்லாததால் அன்றாடம் பிரச்னைகளை சந்தித்து வருவதாக அவர் கூறுகிறார். குறிப்பாக, பொது இடங்களிலும் உணவகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த கட்டமைப்பு வசதிகள் இல்லாததை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ஆப்-களைப் பயன்படுத்துவோருக்கு எல்லாமே மிகவும் எளிதாக இருக்கிறது. சமூகத்துடன் எளிதாக பிணைந்திருப்பதும், கிளப்-களில் இயல்பாக வலம்வருவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு அங்குப் புதிதல்ல," என்கிறார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான டேட்டிங் ஆப்-கள்
எனினும், எத்தனையோ நிராகரிப்புக் கதைகளுக்கிடையே கச்சிதமான காதலைக் கண்டுகொள்ள உதவும் டேட்டிங் ஆப்-களும் இருக்கின்றன. கல்யாணி கோனா நிறுவிய இன்க்ளோவ் (Inclov) ஆன்லைன் டேட்டிங் தளமானது மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரத்யேக சேவைகளை வழங்குகிறது. அனிஷா தனக்குப் பொருத்தமானவரை சந்தித்ததும் இந்தத் தளத்தின் சந்திப்பு நிகழ்வில்தான்.
தங்களது தளத்தின் தனிச் சிறப்புகளை அடுக்கும் இன்க்ளோவ் இணை நிறுவனர் ஷங்கர் ஸ்ரீனிவாசன், "முதலில் மாற்றுத் திறனாளிகள் சமூகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். சமூகத்தில் பல தடைகள் அவர்களைக் கட்டுப்படுத்துவதை உணர்ந்தோம். எனவே, மாற்றுத் திறனாளிகளில் இயல்பாக பயன்படுத்தக் கூடிய வசதிகளை சந்திப்பு இடங்களில் ஏற்படுத்தினோம். அதாவது சைன் லேங்குவேஜ், இன்ட்ரப்ரெட்டர்ஸ் மற்றும் அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் முதலான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தினோம்" என்கிறார்.
பொது சமூகத்துடன் எந்த வகையிலும் மாற்றுத் திறனாளிகள் வேறுபட்டவர்கள் அல்லர். மனிதர்களைச் சந்தித்து, நண்பர்களை உருவாக்கி, வெளியே ஒரு டேட்டிங் சென்று, உறவை வலுப்படுத்த வேண்டும் என்பதில் அவர்களும் இயல்பான விருப்புடையவர்கள்.
"எனக்குச் சிறப்பு முன்னுரிமை எதுவும் தேவையில்லை. என்மீது யாரும் பச்சாதாபமோ இரக்கமோ காட்டத் தேவையில்லை. எனக்கு சமத்துவ அணுகுமுறை மட்டுமே போதும். இதெல்லாம் அதிகப்படியான விருப்பமா என்ன?"
பிரதீக் எழுப்பும் இந்தக் கேள்வியில் தொக்கி நிற்கும் மாற்றுத் திறனாளிகளின் இயல்பான எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அது:
'எங்களுக்கு வேண்டியதெல்லாம் அனைவரையும் உள்ளடக்கிய உத்வேகம் மட்டுமே!'
- ரோஷினி பாலாஜி & ஸ்ருதி கேதியா | தமிழில்: ப்ரியன்