'தொழில்முனைவோரால் மட்டுமே உலகை மாற்ற முடியும்'- ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
ஸ்ரீதர் வேம்பு, 24 ஆண்டுகளாக உலகின் மிகப் பிரபலமான மென்பொருள் மற்று சி.ஆர்.எம் நிறுவனமான ஜோஹோ கார்ப் (Zoho Corp) நிறுவனத்தை நடத்தி வருகிறார். சுயமாக நிதித் திரட்டிக்கொண்டது மற்றும் லாபம் ஈட்டும் நிறுவனமாக இது விளங்குகிறது. இதன் வருவாய் தொடர்பாக பல்வேறு யூகங்கள் இருந்தாலும், 2010 ல் ஜோஹோ 100 மில்லியன் டாலரை கடந்தது என்று சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். சந்தை வளர்ச்சிக்கு ஏற்ப தற்போதைய வருவாயை கணக்கிட்டுக்கொள்ளலாம் என்கிறார்.
ஜோஹோ அமெரிக்காவில் தனியார் நிறுவனமாகும். அது தனது நிதி முடிவுகளை வெளியிட வேண்டியதில்லை. இருப்பினும், அதன் வருவாய் 500 மில்லியன் டாலர் அளவில் இருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், நிறுவனத்திற்காக ஸ்ரீதர் வேம்பு வைத்துள்ள திட்டங்கள் முன் இந்த எண்ணிக்கை ஒன்றும் இல்லை.
சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தை போட்டியாளர் என கருதும் நிறுவனம் அமெரிக்காவின் மையப் பகுதி மற்றும் மெக்சிகோவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. சிக்கனத்திற்காக அறியப்படும் இதன் நிறுவனர் நிறுவனத்திற்காக சமூக நோக்கிலான திட்டங்களையும் வகுத்திருக்கிறார். நெல்லையில் உணவு உற்பத்தி செய்து, சென்னையில் உள்ள ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்குகிறது. சிறிய நகரங்களைச்சேர்ந்த பட்டதாரிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களில் சிறந்தவர்களை பணிக்கு அமர்த்திக்கொள்கிறது.
எளிமையான மனிதரான ஸ்ரீதர் வேம்பு பழைய டொயோட்டா காரை தான் பயன்படுத்துகிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் உடை உடுத்துபவர், இந்திய தத்துவ ஞானத்தை விரும்பிp படிக்கிறார். நகரில் விரைவாக பயணம் செய்ய உள்ளூர் ரெயில் அல்லது மெட்ரோவில் செல்வதே சிறந்த வழி என்கிறார்.
அண்மையில், அமெரிக்காவின் பே ஏரியாவில் உள்ள ஜோஹோ நிறுவன தலைமையகத்தில், யுவர் ஸ்டோரி ஸ்ரீதர் வேம்புவை சந்தித்து பேசிய போது, நிறுவனத்தை உருவாக்குவதற்கு பதில் பங்குதாரர்களுக்கான வளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் வி.சி நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டும் ஆர்வத்தை தொழில்முனைவோர் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட மனம் திறந்து பேசினார். எதிர்வர இருக்கும் தேக்க நிலை தொடர்பாகவும், ஸ்டார்ட் அப்கள் இந்தியாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அவர் பேசினார்.
யுவர்ஸ்டோரி: ஃபிளிப்கார்ட் மற்றும் இதர நிறுவனங்கள் வாங்கப்பட்டதை நாம் கொண்டாடினாலும், ஸ்டார்ட் அப் ஊழியர்களில் பலர் செல்வந்தராவதில்லை. இந்தியாவின் ஸ்டார்ட் அப் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஸ்ரீதர் வேம்பு: மூலதனம் என்பது விநோதமானது. இந்தியாவில் நீங்கள் டீக்கடை வைத்திருப்பவர் என்றால், பணத்தை சரியாக கையாள அறிந்திருப்பீர்கள். தொழில்முனைவோராக இருப்பது எளிதல்ல என நினைவில் கொள்ளுங்கள். புகழை கொண்டாடுவதற்கு முன், நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்.
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு தொழில்முனைவோர் எனில், கடினமான கேள்விகளை எதிர்கொள்ள நீங்கள் தயாரா? உலகம் உங்களுக்கு பாராமுகம் காட்டினால். உங்கள் வர்த்தகம் பற்றி கடினமான கேள்விகளை எழுப்புகிறவர்களை உங்களால் கையாள முடியுமா?
ஆனால், ஸ்டார்ட் அப்கள் வர்த்தகத்தை உருவாக்க கற்றுக்கொள்வதற்கு முன்னரே நாம் ஸ்டார்ட் அப்களை புகழத்துவங்கி விட்டோம். இந்தியாவில் மட்டும் தான் நீங்கள் வர்த்தகம் செய்கிறீர்கள் எனில், பி2பி பிரிவில் இது மிகவும் சிறிய பொருளாதாரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அளிக்கும் வர்த்தக மதிப்பை வெகு சில வர்த்தக நிறுவனங்களே சார்ந்திருக்க தயாராக உள்ளன.
இந்தியர்கள் உருவாக்கியது என சொல்லக்கூடிய எவற்றை எல்லாம் நாம் உருவாக்கி இருக்கிறோம் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். எம்.ஆர்.ஐ எந்திரங்கள், காமிராக்கள், செல்போன்கள், புல்லட் ரெயில்கள் ஆகியவற்றை நாம் உருவாக்கவில்லை. மொத்தத் தீர்வுகளுக்கு நாம் இன்னமும் மற்ற நாடுகளை சார்ந்திருக்கிறோம். இந்தப் பொருட்கள் சிலவற்றுக்கு நம்முடைய ஐ.டி நிறுவனங்கள் மென்பொருள் சேவை அளித்தாலும், தேசத்தை உருவாக்கும் கருத்தாக்கத்தில் நான் ஆர்வம் கொண்டுள்ளேன். நாம் இதை எவ்வாறு செய்கிறோம் என்பதை கண்டறிய வேண்டும்.
இந்தியாவில் பல விஷயங்கள் முதல் முறையாக செய்யப்படுகின்றன என்பதை அறிவேன். நீங்கள் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் இளைஞர் எனில் இந்த பயணமே பலன் அளிக்கக் கூடியது.
யுவர்ஸ்டோரி: பின்பு ஏன் இந்த பரப்பை விமர்சனம் செய்கிறீர்கள்?
வேம்பு: என் வர்த்தகத்தை உருவாக்க நான் எந்த நிதியும் பெறவில்லை. ஆனால் வர்த்தகத்தை உருவாக்க மூலதனம் திரட்டுவது முக்கியம். எனினும், இந்த அமைப்பு நிதிமயக்காப்பட்டிருப்பதை விமர்சிக்கிறேன். இது உடனடி வெற்றி எனும் மாயை உருவாக்கியுள்ளதால், நீடிக்கக் கூடியது அல்ல. வங்கிகள் கூட அளவிடக்கூடிய அம்சங்கள் இல்லாமல் கடன் அளிக்கின்றன.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வங்கி அமைப்பில் இருந்து வாராக்கடனை இழுப்பது தான். இதற்காக இந்தியாவை குறை சொல்ல மாட்டேன். உலக அளவில் இது நடக்கிறது. 2008 நிதி நெருக்கடியை நாம் மறந்துவிட்டோம் என நினைக்கிறேன். மீண்டும் ஒரு நெருக்கடி வர இருக்கிறது. ஒரு மாதத்தில் பல யூனிகார்ன்கள் உருவாக்கப்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும் 150 இருக்கின்றன.
ஆனால் பல வர்த்தகத்தில் நிலையான தன்மை கொண்டிருக்கவில்லை அல்லது நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாதவை. வி.சி.க்கள் மற்றும் நிறுவனர்கள் பலன் அடைய மட்டுமே இவை உதவும்.
நிதி என்பது மயக்கக் கூடிய மனைவி. பல ஸ்டார்ட் அப்கள் அதனிடம் மயங்கி உள்ளன. இது போதை போல, இந்த மோகம் நோயாளியை அழித்துவிடும்.
மத்திய வங்கிகளும் இதற்கு பொறுப்பு. இவர்கள் உருவாக்கும் குமிழ் உடையப்போகிறது என்பதை அறிந்த10,000 பேரில் நானும் ஒருவன். இந்த நெருக்கடி தவிர்க்க இயலாதது. இந்தியாவில் டாலர் நிறைந்திருக்கிறது. நாம் அதை அள்ளியிருக்கிறோம். நெருக்கடி தாக்கும் போது ஸ்டார்ட் அப் துறை தான் பெரிய அளவில் பாதிக்கப்படும். வலுவான வர்த்தக அடிப்படை உள்ளவை மட்டுமே தாக்குப்பிடிக்கும். குறுகிய கால பணமாக்கலில் நாம் வாழ்கிறோம்.
யுவர்ஸ்டோரி: இவை உங்கள் பரந்த அனுபவத்தில் அமைந்தவையா? எனில் எச்சரிக்கையா?
வேம்பு: என் வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று நிதி குமிழ்களை பார்த்திருக்கிறேன். பொருளாதாரத்தை நிலைப்படுத்த அமெரிக்கா பணத்தை அச்சிட்டது. ஆனால் இது நீண்ட கால விளைவைக் கொண்டது. தற்போது மூலதனம் பிரயோகப்படுத்தப்படும் விதம் பொருளாதாரத்தை அழிக்கக் கூடியது என எந்த பொருளாதார வல்லுனரும் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. உலகம் மூலதனத்தின் மாயை குறித்து கேள்வி கேட்கப்பட விரும்பாததால், நான் இவற்றில் இருந்து எல்லாம் விலகி நிற்கிறேன்.
2001 ல் இணைய குமிழ், தொலைதொடர்பு குமிழ் வெடித்த போது, நாங்கள் அட்வெண்ட் நிறுவனமாக இருந்தோம், இன்னமும் ஜோஹோவாக மாறவில்லை. 20 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டியிருந்தது. நான் சொல்வதை நம்புங்கள், என் வாழ்க்கையின் மோசமான அனுபவமாக இது அமைந்தது. இதை மீண்டும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.
2000ல் வி.சிகள் நிதி அளிக்க முன்வந்தனர். 100 மில்லியன் டாலர் எனும் மதிப்பீடு அளிக்கப்பட்டது. இந்த மதிப்பீடு என்னை மிரளச்செய்தது. எட்டு குறைவான ஆண்டுகளில் இதை எட்ட முடியாது என நினைத்தேன். இது அவர்கள் எதிர்பார்ப்பு, என்னுடையது அல்ல. இந்த மதிப்பீட்டை அளித்தவர் வாய்ப்பை நான் நிராகரித்தேன். இது குறித்து மகிழ்கிறேன். ஓராண்டு கழித்து 2001 ல், 300 வெண்டர்கள் என்பது 4 ஆக குறைந்தது. தொலைத்தொடர்பு குமிழ் வெடித்தது.
வர்த்தக மாதிரியை மறு உருவாக்கம் செய்து, சீனா மற்றும் ஜப்பானுக்கு மென்பொருளை விற்பனை செய்யத்துவங்கினோம். ஹிட்டாச்சி, ஃபுஜிட்சு, ஹுவேய் போன்ற நிறுவனங்களுடன் செயல்படத் துவங்கினோம். இது வளர்ச்சியை அளித்தது. நான் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தினேன். மதிப்பீடுகள் மற்றும் பிறரது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது பற்றி கவலைப்படாமல், தொழில்நுட்பம் எப்படி உலகை மாற்ற முடியும் என யோசிக்கத்துவங்கினேன்.
ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மற்றவர்கள் மீது தாக்கம் செலுத்த கற்றுக்கொள்ள வேண்டாம், வர்த்தகம் செயல்பட மற்றும் புத்திசாலி ஊழியர்களுடன் செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும்.
யுவர்ஸ்டோரி: தொழில்முனைவோருக்கு உங்கள் ஆலோசனை என்ன?
வேம்பு: இந்தியாவில் பல பிரச்சனைகள் உள்ளன. புத்திசாலி தொழில்நுட்ப நிறுவர்கள் சிறிய நிறுவனங்களில் நிறுவனம் அமைத்து உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளக்கூடாது. தனிநபர்களை அவர்களால் குறைந்த செலவில் பயிற்சி அளிக்க முடியும், இதில் அவர்கள் வெற்றி பெற முடியும் என உறுதி அளிக்கிறேன். இதை ஜோஹோவில் முயற்சி செய்தோம். இது செயல்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளை தேர்வு செய்து பணியாற்ற வையுங்கள். இந்த இளைஞர்களுக்குக் குறைவான தேவைகளே உண்டு. அவர்கள் தங்கள் சொந்த நகரம் அருகே மகிழ்ச்சியாக பணியாற்றுவார்கள். இளம் பட்டதாரிகளுக்கு 3 மாதம் ஊக்கத்தொகை அளித்து பயிற்றுவிக்கும் திட்டத்தை ஜோஹோ செயல்படுத்தி வருகிறது. 3 மாதங்கள் கழித்து வேகமாக கற்றுக்கொள்ளும் 50 சதவீதம் பேருக்கு மேல் பணிக்கு எடுத்துக்கொள்கிறோம்.
தனது புத்தகம் ஒன்றில் வலி பற்றி பேசும் அருண் ஷோரியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். வலி எப்போதும் உள்ளது, அவதிப்படுவது தேர்வுக்கு உரியது’ என்கிறார். நான் கற்றுக்கொண்ட தாக்கம் மிகுந்த விஷயம் இது.
உறுதியுடன் நிற்க ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். நான் வாழ்க்கையை நயமாக எதிர்கொள்ள கற்றுக்கொண்டிருக்கிறேன். அதையே ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் அல்லது மற்றவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
என்னைப்பொறுத்தவரை நிறுவனம் என்பது மதம். பணம் எனக்கு திருப்தி அளிப்பதில்லை. என் வர்த்தகம், பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் வழியை எனக்கு அளித்திருக்கிறது. வர்த்தகம் என்பது தனியார் மூலமான பொதுச்சேவையாகும்.
பல தொழில்முனைவோர்கள் உலகம் தங்களைப்பற்றியது என நினைக்கின்றனர். அவர்கள் நிறுவனங்களை உருவாக்க விரும்பவில்லை. அஜீம் பிரேம்ஜி மற்றும் டாடா குழும செயல்பாடுகளை முன்மாதிரியாக பார்க்கிறேன். நிறுவனங்கள் மற்றும் மக்களை பண்டகமாக பார்க்கும் நிதிமயமாக்கலை எதிர்க்கிறேன்.
நிறுவனர்கள் தாங்கள் திரட்டும் நிதி மூலம் பல சமூக விளைவுகளை உண்டாக்குகின்றனர் என புரிந்து கொள்ள வேண்டும். நீண்ட கால நோக்கில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் இருந்து நிறுவனர்கள் நிதி திரட்டும் போது, நிறுவனர்கள் நிறுவனத்தை உருவாக்கவில்லை. பங்குதாரர்களுக்கு வளத்தை உருவாக்குகின்றனர். ஊழியர்கள் நிலை என்ன? ஜோஹோ நிறுவனத்தை நான் விற்பது பற்றி யோசித்துப்பாருங்கள். ஒரு குழுவாக, நாங்கள் நம்பியதை உருவாக்கிய ஊழியர்கள் நிலை என்ன ஆகும்.
இறுதியாக நிதி நெருக்கடிக்கு வருவோம். அனைத்து சமூக உறவுகளையும் பாதிக்கக் கூடிய நிதி கொள்கைகளை மத்திய வங்கிகள் உருவாக்கியுள்ளன. இந்தியா நுகர்வோர் வளர்ச்சியின் மத்தியில் உள்ளது, இது அமெரிக்கா போல நுகர்வுதன்மையை உருவாக்கும். அதன் பிறகு, வாழ்க்கையை மாற்றும் வர்த்தகத்தை உருவாக்குவதற்கு பதிலாக, நம்முடைய நேரத்தை எப்படி செலவிடுகிறோம் என்பதை பணம் தீர்மானிக்கும். நாம் தார்மீக பரிமானங்களை மறந்துவிட்டோம் என நினைக்கிறேன்.
தற்போதைய தலைமுறை, குறிப்பாக 2000 க்கு பிறகு பிறந்த தலைமுறை நிதி தேக்கநிலையில் விளைவுகளை பார்க்க வில்லை என எச்சரிக்க விரும்புகிறேன். எனவே இந்தியா மட்டும் அல்ல, வேறு எந்த நாடும் தனது மக்களை அந்நியமாக்கக் கூடாது. வாழ்க்கையில் தவற விடப்போகிறோம் என்ற உணர்வில் இளைஞர்கள் மேலோட்டமான தன்மை பெறுகின்றனர். எனவே மகத்தான உறவுகளை உருவாக்க வேண்டிய தருணம் இது.
சிறிய நகரங்களுக்குச் சென்று வர்த்தகத்தை துவக்குங்கள், உள்ளூர் பொருளாதாரத்தை வளரச்செய்யவும். பொதுவான இலக்கை நோக்கி பணியாற்றக்கூடியவர்களுடன் வலுவான மதிப்பு சார்ந்த உறவை உருவாக்குங்கள். வர்த்தகத்தின் என் 30 ஆண்டுகளில், ஏற்றத்தாழ்வு அதிகரித்திருப்பதை பார்க்கிறேன். உலகம் மற்றும் அதன் தற்போதைய சூழலை தொழில்முனைவோரால் மட்டுமே மாற்ற முடியும்.
ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்; சைபர்சிம்மன்