Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

80s கிட்ஸ், 90s கிட்ஸ், 2K கிட்ஸ் யார் யார்? - ‘மில்லினியல்ஸ்’ யாருனும் தெரிஞ்சுக்கங்க!

‘1996, 1997, 1998, 1999 ஆண்டுகளில் பிறந்தவர்கள் 90ஸ் கிட்ஸ்தானே... அவர்களை எப்படி 2கே கிட்ஸ் என்று சொல்லலாம்? இது போன்ற சந்தேகங்களுக்கான விரிவான விளக்கம் இக்கட்டுரையில்.

80s கிட்ஸ், 90s கிட்ஸ், 2K கிட்ஸ் யார் யார்? - ‘மில்லினியல்ஸ்’ யாருனும் தெரிஞ்சுக்கங்க!

Saturday December 03, 2022 , 4 min Read

யாரெல்லாம் 80s கிட்ஸ், 90s கிட்ஸ், 2K கிட்ஸ்?

“நான் 1982-ல் பிறந்தேன். நான் 80ஸ் கிட்ஸா, 90ஸ் கிட்ஸா?”

“நான் 1996-ல் பிறந்தேன். நான் 90ஸ் கிட்ஸா, 2கே கிட்ஸா?”

பிறந்த ஆண்டின் அடிப்படையில் ‘நாம எந்த க்ரூப்பு’ என பலருக்கும் இப்படி அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல சந்தேகங்கள் அவ்வப்போது எழுவது உண்டு. ரொம்ப குழப்பிக்கொள்ள வேண்டாம்.

> 1975 - 1985 காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ‘80s கிட்ஸ்’

> 1986-1996 காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ‘90s கிட்ஸ்’

> 1996-2005 காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ‘2கே கிட்ஸ்’

அதாவது, ஒரு பத்தாண்டின் பிந்தையப் பகுதியும், அடுத்த பத்தாண்டின் முந்தையப் பகுதியும் சேர்த்துதான் எந்த பத்தாண்டு கிட்ஸ் எனப் பொதுவாக வரையறுக்கப்படுகிறது.

‘1996, 1997, 1998, 1999 ஆண்டுகளில் பிறந்தவர்கள் 90ஸ் கிட்ஸ்தானே... அவர்களை எப்படி 2கே கிட்ஸ் என்று சொல்லலாம்?’ என்று சிலர் வெகுண்டெழலாம்.

Generation kids

முதலில் கிட்ஸ் என்பதற்கு பசங்க என்று பொருள் கொள்ளலாம். 1996-ல் பிறந்த ஒருவர் நிச்சயம் 90ஸ் கிட்ஸ் அல்ல. ஏனெனில், அவர் 1996-ல் இருந்து 1999 வரை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு வயதுதான் இருக்கும். அப்போது அவங்க ‘பசங்க’ கிடையாது. ‘குழந்தை’.

அவர் 2000, 2001-ல்தான் ‘பசங்க’ எனும் ஸ்டேஜுக்கு வருவார். எனவேதான், அவர் 2கே கிட் ஆக ஆகக் கருதப்படுகிறார், அழைக்கப்படுகிறார். இதுதான் 70, 80-களில் பிற்பகுதியில் பிறந்தவர்களுக்கும் பொருந்தும். 86, 87, 88, 89-ல் பிறந்தவர்கள் ‘90ஸ் கிட்ஸ்’ ஆவதும் இப்படித்தான்.

அப்போ யாரெல்லாம் மில்லினியல்ஸ்?

இந்த கிட்ஸ் வகையறாக்களைப் பற்றி பேசும்போது, நம்மில் பலரும் ‘மில்லினியல்ஸ்’ எனும் டேர்மை கடந்து வந்திருப்போம். மில்லினியல்ஸ் (Millennials) என்ற வகைக்குள் வருவர்கள் 2000-க்கு முந்தைய இருபதாண்டுகளில் பிறந்தவர்கள். குறிப்பாக, 1981-ல் இருந்து 1996 வரையிலான காலத்தில் பிறந்தவர்கள்தான் இப்படி அழைக்கப்படுகிறார்கள்.

ஜெனரேஷன் வகையில் இப்படி தனித்தனி பெயரிட்டு அழைப்பதும் வழக்கத்தில் உள்ளது. அதன்படி, 1946 - 1964 காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ‘பேபி பூமர்ஸ்’ (Baby boomers), 1965 - 1980 காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் எக்ஸ்’ (Gen X), 1997 - 2012 காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் இஸட்’ (Gen Z) என்று அழைக்கப்படுவர்.

சூழலும் தாக்கமும்

நம் குழந்தைப் பருவத்தில் பெரும் தாக்கத்தைத் தரக்கூடியவை நாம் வாழும் சூழல். சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஒப்பிடப்படுவது, 90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்தான். இந்த இரு தரப்பின் வாழ்க்கைச் சூழலில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.

நைன்ட்டீஸ் கிட்ஸ்களுக்கு கேபிள் டிவி என்று கூட சொல்லத் தெரியாது. அவர்கள் சன் டிவி என்பார்கள். ஆனால், 2கே கிட்ஸ்களுக்கு ஸ்மார்ட்ஃபோனில் ஓடிடி பார்க்கும் வசதி கிடைத்திருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் மிகப் பெரிய பாய்ச்சல் இந்த இரு பத்தாண்டுகளில்தான் அதிகம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் குழந்தைப் பருவத்தின் வாழ்க்கை முறை என்பதே முற்றிலும் மாறுபட்டது ஆகிவிட்டது.

தெருக்களில் கில்லி, கிரிக்கெட், கோலி, கண்ணாமூச்சி, நொண்டி என விளையாடிக் கொண்டிருந்தவர்கள் நைன்ட்டீஸ் கிட்ஸ் என்றால், 2கே கிட்ஸ்களோ பெரும்பாலும் மொபைலில்தான் விளையாட்டுகளை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் தனியாகவே விளையாடுகிறார்கள்.

தொழில்நுட்ப வசதிகள் இல்லாதது நைன்ட்டீஸ் கிட்ஸ்களுக்கு இழப்பு என்று பார்த்தால், நண்பர்களுடன் தெருக்களில் விளையாடும் இயற்கைச் சூழலுடன் கூடிய அனுபவம் கிடைக்காதது 2கே கிட்ஸின் இழப்பு. இப்படி இரு தரப்புமே கற்றவை, பெற்றவை, இழந்தவை முதலானவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.
90’s kids generation

அதேபோல், காலமும் வாழ்வியல் சூழலும் குழந்தைப் பருவத்தில் குணாதிசயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது, பிற்காலத்தில் சமூகத்தை அணுகும் முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். உதாரணமாக, 80ஸ், 90ஸ் கிட்ஸில் பலருக்கும் எதுவுமே கிடைத்துவிடாது என்பதால், ஒன்றின் மீதான வேல்யூ புரிந்து செயல்படுவர். ஆனால், இன்று 2கே கிட்ஸ் பலருக்கும் எல்லாமே எளிதில் கிடைத்து விடுவதான் எதன் வேல்யூவும் தெரிவதில்லை.

அதேநேரத்தில், ‘அந்தந்த நொடியில் வாழ்தல்’ என்பதை துளியும் பின்பற்றாத 80ஸ், 90ஸ் கிட்ஸ், எதிர்காலத்தை நினைத்து நினைத்தே எல்லாவற்றையும் கவனத்துடன் அணுகி, நிகழ்காலத்தை எஞ்சாய் செய்வதை மிஸ் பண்ணியிருப்பார்கள். அந்தத் தவறான அணுகுமுறையை 2கே கிட்ஸ் பெரும்பாலும் பின்பற்றுவது இல்லை என்பது பாசிட்டிவான அம்சம்தான்.

2கே கிட்ஸ் பலரும் இந்த நொடியை எப்படி ரசித்து ருசித்து அனுபவித்து வாழ்வது என்பதில் கவனம் செலுத்துவதில் கில்லியாக இருக்கிறார்கள். இதேபோல், காதல் வாழ்க்கையிலும் 2கே கிட்ஸ் அணுகுமுறை என்பது வேற லெவலில் இருக்கிறது.

Millenials

வேலையில் எப்படி?

2கே கிட்ஸிடம் வேலை வாங்குவதே தனி கலைதான். நெளிவு சுளிவுடன் கூடிய அந்தக் கலையில் தேர்ந்தவராக ஆகாத எந்த உயர் பொறுப்பில் உள்ளவர்களாலும் அவர்களிடம் எளிதில் உருப்படியாக வேலை வாங்க முடியாது.

உதாரணமாக, 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்கள் வேலைகளுக்குப் போக ஆரம்பித்த பிறகு, அவர்களில் பலருக்கும் பொறுப்பு என்பது மேலோங்கியிருந்தது. பொறுப்பை விட, வேலையில் பயம் அதிகம் இருந்தது. உயர் பொறுப்பில் இருப்பவர் ஒரு அசைன்மென்ட் தருகிறார் என்றால், அதை இரவு பகல் பாராமல் உழைத்து அதை டெட்லைனுக்குள் முடித்துக் கொடுப்பதையே அவர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள். அதையும் தாண்டி அந்த வேலையை சரியான நேரத்தில் முடிக்காமல் போய்விட்டால் பதற்றத்தில் நடுங்கிவிடுவார்கள்.

அதேபோல், 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களிடம் அசைன்மென்ட் கொடுத்து வேலை வாங்கும் அணுகுமுறையும் வேறு மாதிரியாக இருக்கும். குறித்த நேரத்தில் அந்த வேலை முடிக்கப்படவில்லை எனில், அந்த வேலையைக் கொடுத்த உயரதிகாரியே அந்த வேலையை செய்து முடித்துவிடுவார். இதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்படும் கடுமையான தண்டனை.

அந்த 80ஸ், 90ஸ் கிட்ஸ் குற்ற உணர்வில் மன அழுத்தத்தின் உச்சத்திற்கே போய்விடுவார்கள். ஆனால், அதே அணுகுமுறையை 2கே கிட்ஸிடம் காட்டினால் துளியும் எடுபடாது.

“நீங்க டெட்லைனுக்குள்ள அந்த வேலையை முடிக்கலை. சோ, அதை நான் செஞ்சிட்டேன்...” என்று எந்த டீம் லீடர் சொன்னால்...
“அட... சூப்பர் பாஸ்... பின்னிட்டீங்க. தேங்க்ஸ்...” என்று கூலாக சொல்லிவிட்டு இடத்தை காலி செய்துவிடுவார்கள் 2கே கிட்ஸ்.

ஆக, இப்படி வாழ்க்கைமுறை முதல் பணியிடம் வரை எல்லாவற்றிலும் வெவ்வேறு ஜெனரேஷனை சேர்ந்தவர்கள் வெவ்வேறாக இருக்கிறார்கள் என்பதே இந்த 80s கிட்ஸ், 90s கிட்ஸ், 2K மற்றும் மில்லினியல்ஸ்’கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.