சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லாவுக்கு 2022 ஆண்டின் பத்ம பூஷன் விருது அறிவிப்பு!
2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சாதனைகளைப் புரிந்ததற்காக தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சாதனைகளைப் புரிந்ததற்காக தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்ம விருதுகளும் ஒன்று. கலை, சமூகப்பணி, பொதுநலன், அறிவியல், பொறியியல், வர்த்தகம், விளையாட்டு, குடிமை பணிகள், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி என பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில், தலைசிறந்தும், அரிய வகையிலும் சேவையாற்றியவர்களுக்கு பத்ம விபூஷன், மிக உயரிய வகையில் தலைசிறந்து சேவையாற்றியவர்களுக்கு பத்ம பூஷன், தத்தமது துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம ஸ்ரீ என 3 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு, பத்ம விபூஷன் விருது நான்கு பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 107 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார், யாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு?
மைக்ராசாப்ட் சிஇஓ சத்ய நாராயண நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சீரம் நிறுவனத் தலைவர் சைரஸ் பூனவல்லா, பாரத் பயோடெக் நிறுவனர்களான டாக்டர் கிருஷ்ணா எல்லா மற்றும் சுசித்ரா எல்லா, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பாட்டச்சார்யா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை:
1972ம் ஆண்டு மதுரையில் பிறந்து சென்னை அசோக் நகரில் வளர்ந்த சுந்தர் பிச்சை, கரக்பூர் ஐஐடியில் உலோக பொறியியலில் பட்டம் பெற்றார். அதன் பின்னர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்த சுந்தர் பிச்சைக்கு, 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
தனது கடின உழைப்பு மற்றும் திறமையினால் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்றார். மொபைல் போன்களின் அரசனான ‘ஆன்ட்ராய்டு’ கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வழிகாட்டுதலின் படி உருவாக்கப்பட்டது.
அதன் பின்னர், 2019ம் ஆண்டு கூகுளின் நிறுவனர்களான லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர் தலைமை வகித்த மாபெரும் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அத்தோடு கூகுள் பைபர், கூகுள் நெஸ்ட், காலிகோ, வெரிலீ, கூகிள் வென்சர்ஸ், எக்ஸ் டெவலப்மென்ட், கேப்பிடல் ஜி ஆகிய 7 நிறுவனங்களுக்கு சுந்தர் பிச்சை தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான தமிழகத்தின் செல்லப்பிள்ளை சுந்தர் பிச்சைக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்துள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சாதனைகளைப் புரிந்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்ய நாதெல்லாவுக்கு பத்ம பூஷன் விருது:
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா, மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதனைத்தொடர்ந்து விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டமேற்படிப்பு முடித்த அவர், சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.
அதன் பின்னர், 1992ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சத்ய நாதெல்லாவின் அர்ப்பணிப்பிற்கு பரிசாக 2014ஆம் ஆண்டு அந்நிறுவத்தின் சிஇஓவாக அறிவிக்கப்பட்டார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சத்ய நாதெல்லாவுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சாதனைகளைப் புரிந்ததற்காக பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்பை அலங்கரித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த இருவருக்கும் மற்றொரு மணி மகுடமாக பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.