பத்ம விருதுகள் 2022: பத்ம ஸ்ரீ விருது வென்ற 7 தமிழர்கள் யார் யார்?
2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி முதல் சமூக சேவகர் தாமோதரன் வரை தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் மற்றும் தற்போது புதுச்சேரியில் வசித்து வரும் தவில் கலைஞர் ஒருவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி முதல் சமூக சேவகர் தாமோதரன் வரை தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்ம ஸ்ரீ விருதும் ஒன்று. கலை, சமூகப்பணி, பொதுநலன், அறிவியல், பொறியியல், வர்த்தகம், விளையாட்டு, குடிமைப் பணிகள், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி என பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மொத்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 34 பேர் பெண்கள், 13 பேருக்கு அவர்களது இறப்பிற்கு பிறகு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும் பத்ம பூஷண் 17 பேருக்கும் பத்ம ஸ்ரீ 107 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது:
கலை பிரிவின் கீழ் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, எஸ்.பல்லேஷ் பஜந்திரி, சதிர் நடனக் கலைஞர் ஆர்.முத்து கண்ணம்மாள், நாதஸ்வர கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம் மற்றும் கல்வி பிரிவின் கீழ் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கும், மருத்துவ பிரிவின் கீழ் டாக்டர் வீராச்சாமி சேஷய்யாவிற்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது. சிறந்த சமூக சேவைக்கான பத்ம ஸ்ரீ எஸ்.தாமோதரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசை கலைஞரான கொங்கம்பட்டு ஏ.வி.முருகையன் என்பவருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1. சிற்பி பாலசுப்பிரமணியம்:
புகழ் பெற்ற தமிழ் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் அறிஞர் என பன்முக தன்மை கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு கிராமத்து நதி’ என்ற கவிதை நூலிற்காகவும், “லலிதாம்பிகா அந்தர்ஜனம்” என்ற மலையாள நூலை தமிழில் ‘அக்னி சாட்சி’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்ததற்காகவும் இரு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
அதுமட்டுமல்லாது பாரதிதாசன் விருது, தமிழ்நாடு அரசு விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இவரது கவிதைகள் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி என பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.
2. செளகார் ஜானகி:
தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர் செளகார் ஜானகி. இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 18 வயதில் நடிக்க ஆரம்பித்த செளகார் ஜானகி, இன்று தனது 91 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஜானகி 1950 இல் ‘சவுகாரு’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அவருக்கு ‘சௌகார்’ என்ற பெயரும் டைத்தது.
தற்போது செளகார் ஜானகியின் நடிப்பை கெளரவிக்கும் விதமாக அவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 1984ம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, மகாநதி சாவித்திரி விருது, நடிகர் திலகம் சிவாஜி வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்ஜிஆர் விருது, தமிழக அரசின் புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது மற்றும் 2015ம் ஆண்டு கர்நாடக அரசின் ராஜ்யோத்சவா விருது என பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
3. எஸ்.தாமோதரன்:
கிராமாலயா என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி, அதன் மூலமாக மேம்பாட்டுக்காக உழைத்து வரும் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு சிறந்த சமூக பணிக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
4. முத்து கண்ணம்மாள்:
திருச்சி விராலிமலையைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மாள் பழங்கால நடனமாக சதிர் நடனக் கலைஞர். ஒழிக்கப்பட்ட தேவதாசி மரபின் கடைசி வாரிசான முத்துக்கண்ணம்மாள், அரை நூற்றாண்டுக்கும் மேலாக சதிர் நடனத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
5. ஏ.கே.சி. நடராஜன்:
திருச்சியைச் சேர்ந்த 90 வயதான கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி நடராஜன், 2008ம் ஆண்டு சென்னை மியூஸிக் அகாடமியில் சங்கீத கலாநிதி என்ற பட்டம் பெற்றவர். தலை சிறந்த நாதஸ்வர கலைஞரான ஏ.கே.சி. நடராஜனுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மகுடம் பத்ம ஸ்ரீ விருது.
6. மருத்துவர் வீராச்சாமி சேஷய்யா:
சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் வீராச்சாமி சேஷய்யாவுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
7. புதுவை தவில் கலைஞருக்கு விருது:
புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக்கலைஞர் ஏ.வி. முருகையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மடுகரை அடுத்த விழுப்புரம் கொங்கம்பட்டுவைச் சேர்ந்தவர் முருகையன், வளைப்பட்டி பத்ம ஸ்ரீ சுப்ரமணியத்திடம் தவில் கலையை கற்றுக்கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார். விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
பல்லேஷ் பஜந்திரி:
கஜல் பாடகர், செனாய் இசைக் கலைஞர் என கலை உலகில் சிறந்து விளங்கும் பல்லேஷ் பஜந்திரிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை பூர்வீக கொண்டவராக இருந்தாலும் பல்லேஷ் பஜந்திரி தமிழத்தின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட மாநிலங்களின் கலைக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.