30 ஆண்டுகளாக கால்நடைகளை மீட்டு பராமரிப்பதற்காக ’பத்மஸ்ரீ’ விருது பெற்றுள்ள சையத்!
வறட்சியால் மோசமாக பாதிக்கப்படும் பகுதியான மரத்வாடாவில் ஷபீர் சையத் நூற்றுக்கணக்கான மாடுகளைப் பாதுகாத்து அவற்றிற்கு தீவனம் வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு கோடைக்காலத்திலும் வறட்சியினால் மிக மோசமாக பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று மஹாராஷ்டிரா. வறட்சியினால் பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டுமல்ல கால்நடைகளும்தான்.
வறட்சி காரணமாக பலர் தங்களது கால்நடைகளை விற்றுவிட்ட நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மரத்வாடா பகுதியின் பீட் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த 58 வயது ஷபீர் சையத் கடந்த முப்பதாண்டுகளாக நூற்றுக்கணக்கான மாடுகளைப் பாதுகாத்து வருகிறார். இவர் உதவ முன்வராமல் போயிருந்தால் இந்த மாடுகள் உணவும் நீரும் இன்றி இறந்துபோயிருக்கக்கூடும்.
சையத் மாடுகளின் நலனில் பங்களித்ததை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கடந்த ஆண்டு நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மஸ்ரீ விருதினை இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார்.
சையத் குடும்பத்தில் 13 பேர். இவர்கள் அனைவரும் இரண்டு அறை கொண்ட வீட்டில் வசித்து வருகின்றனர். கால்நடை பராமரிப்பில் இவர்களும் சையத்திற்கு உதவுகின்றனர். இவரது குடும்பத்தினர் மாடுகளுக்காக தங்களது சொந்த நிலத்தில் உணவு வளர்த்து நூற்றுக்கும் அதிகமான மாடுகளை பராமரிக்கின்றனர். ஏஎன்ஐ உடனான உரையாடலில் சையத் கூறுகையில்,
”என்னுடைய குழந்தைப் பருவத்திலேயே மாடுகளை பராமரிக்கத் துவங்கினேன். குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக சில சமயங்களில் அவற்றை பராமரிப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் விலங்குகளின் நலனுக்காக சிலர் பணத்தை நன்கொடையாக வழங்குவார்கள்,” என்றார்.
கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 1,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். வயது முதிர்ந்த மாடுகள் ஒரே நேரத்தில் 10-15 லிட்டர் தண்ணீர் குடிக்கும் என சையத் குறித்த ’இண்டியா டுடே’ கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சையத் குடும்பம் கசாப்புக்கார சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் பால் கறப்பதும் இல்லை, மாட்டிறைச்சி சாப்பிடுவதுமில்லை. மாறாக விவசாயிகளுக்கு ஆர்கானிக் உரங்களை விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 70,000 ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இவர்கள் உள்ளூர் விவசாயிகளுக்கு மட்டும் தள்ளுபடி விலையில் காளை மாடுகளை விற்பனை செய்கின்றனர். இந்த மாடுகளை கசாப்புக்காரர்களுக்கு விற்கமாட்டோம் என்றும் வயதான பிறகு திரும்ப கொடுத்துவிடுவோம் என்றும் விவசாயிகளிடம் எழுத்துப்பூர்வமாக வாங்கிக்கொள்கிறார் சையத்.
சையத் தனது அப்பாவின் மரபினைத் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவரது அப்பா புதன் சையத் கிராமத்தில் இருக்கும் மாடுகளைப் பராமரிக்க கசாப்புக்காரர் பணியைத் துறந்தார். ஆரம்பத்தில் இரண்டு மாடுகளைப் பராமரிக்கத் துவங்கிய இவர் கசாப்புக்காரர் ஒருவரிடம் இருந்து 10 மாடுகளை வாங்கிப் பராமரிக்கத் துவங்கினார். இந்தக் குடும்பம் இவ்வாறு மாடுகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை அறிந்த உள்ளூர் மக்கள் தங்களது வயது முதிர்ந்த கால்நடைகளை இவர்களிடம் ஒப்படைத்தனர்.
தற்போது கிடைக்கப்பட்டுள்ள விருது தங்களது கால்நடைகளுக்கு நன்மை பயக்கும் என சையத்தும் அவரது குடும்பத்தினரும் நம்புகின்றனர். வறட்சியின்போது
கால்நடைகளுக்கு உதவ தீவன முகாமிற்கு விண்ணப்பித்துள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA