காசா குழந்தைகளின் பசிப்பிணி போக்கும் பிளாகர் - போர்ச் சூழலில் ஒரு பெரும்பணி!
நிவாரண உதவியாக தங்களுக்கு கிடைக்கும் உணவு பொருட்களை கொண்டு உணவு சமைத்து, அதனை பாலஸ்தீனத்தின் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார் ஹமதா எனும் பிளாகர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பிளாகர்களுக்கு துளியும் பஞ்சம் இல்லை. தடையற்ற இணைய வசதி, சமூக வலைதள கணக்கு மற்றும் ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் யாவரும் பிளாகர் தான். அதில், அவர்கள் என்ன கன்டென்ட் தருகிறார்கள் என்பதே முக்கியம். அதை பொறுத்தே அவர்களது ரீச் இருக்கும். சமயங்களில் அந்த கிரியேட்டிவ் கன்டென்ட்கள் அவர்களது ஆர்வம் சார்ந்தும் இருக்கும். இப்படி உலகில் உள்ள கோடிக்கணக்கான பிளாகர்களில் ஒருவர் தான் ஹமதா ஷகோரா.
32 வயதான அவர் பாலஸ்தீனத்தின் காசாவை சேர்ந்தவர். கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த நாட்டின் உணவு மற்றும் அதன் சமையல் முறையை தனது கன்டென்ட்களில் கண்கவர் விருந்தாக சமூக வலைதளங்களில் பரிமாறி வருகிறார். ஆனால், இது அனைத்தும் கடந்த 2023-ம் ஆண்டின் அக்டோபர் வரையில் தான்.
இஸ்ரேல் - ஹமாஸ் தரப்பில் இடையிலான மோதல் அவரது இயக்கத்தை முடக்கியது. ஹமதா உட்பட பாலஸ்தீன மக்களின் வாழ்க்கைச் சூழல் அனைத்தும் இயல்பு நிலையில் இருந்து தடம் மாறியது.
பாலஸ்தீனத்தின் காசாவை சேர்ந்த மக்கள் அடைக்கலம் தேடி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மோதல் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். உயிர்த்திருப்பவர்கள் உதட்டில் புன்னகையை புதைத்தும், உயிரை உடம்புக்குள் புதைத்தும் வாழ்ந்து வருகின்றனர்.
உயிர் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளான குடிநீர், உணவு, உறைவிடம் முறையாக கிடைக்காமல் தவிக்கின்றனர். அப்படியே கிடைத்தாலும் அதன் பாதுகாப்பு தன்மை என்பது கேள்விக்குறியாக உள்ளது. எந்நேரமும் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற சூழல். பசிப்பிணி, ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்றவை அங்குள்ள மக்கள், குழந்தைகள் மத்தியில் நிலவுகிறது.
போர்ச் சூழலில் நிவாரண உதவியாக தங்களுக்கு கிடைக்கும் உணவு பொருட்களை கொண்டு உணவு சமைத்து, அதனை பாலஸ்தீனத்தின் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார் ஹமதா. இதன் மூலம் மனிதத்தின் அடிப்படையான அன்பையும் பரப்பி வருகிறார். அதனை அப்படியே தனது சமூக வலைதள கணக்கிலும் பகிர்கிறார். அதன் மூலம் தங்கள் நிலையை உலகுக்கு எடுத்து சொல்லி ஆதரவும் கோருகிறார்.
ஹமதாவின் இந்த ஆக்கப்பூர்வமான செயல், உலக அளவில் கவனத்தையும் ஈட்டியுள்ளது. மேலும், இது சமூக ரீதியான இணக்கத்தையும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது வரை இன்ஸ்டாவில் மட்டும் சுமார் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை ஹமதா பெற்றுள்ளார். அவரது பதிவுகளில் மோதல் தொடங்கி எத்தனை நாள் கடந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி வருகிறார். அதோடு தனது முயற்சிக்கு நல் உள்ளம் கொண்டு உதவுபவர்களுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்.
“நான் ஒரு பிளாகர். கடந்த ஏழு ஆண்டுகளாக பாலஸ்தீன உணவுகளையும், சமையல் கலையையும் பதிவு செய்து வந்தேன். ஆனால், இதெல்லாம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை தான். இப்போது எனது வாழ்வின் நிலை மாறியுள்ளது. உயிர் வாழ வேண்டி சாப்பிடவும், புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உணவு சமைத்தும் வருகிறேன்.
இங்கு எங்கள் மக்கள் எதிர்கொண்டு வரும் யதார்த்த சூழலையும், எங்களது சிரமமான நிலையையும், உயிர் வாழ தினமும் நாங்கள் கடந்து கொண்டிருக்கும் போராட்டத்தையும் உலகுக்கு தெரிவிக்கும் நோக்கில் இதனை அப்படியே ஆவணப்படுத்தி வருகிறேன். எங்களுக்கு நிவாரண உதவியாக கிடைக்கும் பொருட்களை கொண்டு உணவு சமைக்கிறோம். இதை பகிர்வதன் மூலம் காசாவின் அவலநிலையை உலகளவில் உள்ள அனைவரும் அறிய முடியும்.
போர்ச் சூழலில் இங்கு மொத்தமாக உணவு சமைப்பது சவாலாக உள்ளது. இருந்தாலும் இது இங்குள்ள குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதனால் இதனை செய்து வருகிறேன். உணவு பொருட்களும் குறைந்த அளவுதான் கிடைக்கிறது. அதைக் கொண்டு குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சமைத்து வருகிறேன். அதனை அவர்கள் ருசிக்கும் போது புன்னகைக்கிறார்கள். அது சில நிமிடங்கள் தான் என்றாலும், அதன்மூலம் எனது மனது நிறைகிறது.
நல்வாய்ப்பாக எங்களுக்கு உதவியாக கிடைக்கும் உணவு பொருட்கள் எங்களுக்கு ஜீவாதாரமாக உள்ளது. அதுவும் இல்லை என்றால் நாங்கள் பட்டினிதான். உணவு சமைக்க தேவையான பொருட்கள், சமைப்பதற்கான எரிபொருள், சமைப்பதற்கு பாதுகாப்பான இடம் என நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இது சிறிய பணி எங்களுக்கு பெரிய நம்பிக்கை அளிக்கிறது.
நான் பகிர்கின்ற ஒவ்வொரு பதிவும் இருள் கொண்ட எங்கள் வானில் தெரியும் மின்னல் வெளிச்சமாக உள்ளது. உலகம் முழுவதுமிருந்து கிடைக்கும் ஆறுதல் வார்த்தைகள் என்னை இந்தப் பணியில் தொய்வின்றி தொடர செய்கிறது” என ஹமதா சொல்கிறார்.
தனது செயலின் மூலம் உலக மக்கள் தங்களுக்கு வேண்டிய உதவி அல்லது இது குறித்து அடுத்தவரிடம் பகிர்ந்தால் போதும் என்பதுதான் ஹமதாவின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Edited by Induja Raghunathan