தன் கலைத்திறன் மூலம் சுயகாலில் நிற்கும் கோவை பிளஸ் 1 மாணவி!
5 வயதில் கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஊன்றுகோலுடன் மட்டுமே நடக்கமுடியும் என்ற நிலையில், வீட்டில் இருந்தே கல்வி பயிலும் மாணவி ராதிகா, தற்போது கலர்கலராய் காகித பொம்மைகள் செய்து கைத்தொழிலில் கலக்குகிறார்.
8ஆம் வகுப்புக்கு மேலேயே மாணவர்களை படி படி என படிப்பை மட்டுமே முக்கியமாக்கி மாணவர்களின் கற்பனைத் திறனுக்கு கடிவாளம் போடும் இக்காலத்தில் கோவையைச் சேர்ந்த ப்ளஸ் 1 மாணவி காகிதத்தை கலர்புல்லாக்கி காசு சம்பாதிக்கும் கைத்தொழிலில் சிறந்து விளங்குகிறார்.
கோவை மாவட்டம், பாப்பம்பட்டி விலக்கு அருகேயுள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெ.அ. ராதிகா. பிளஸ் 1 மாணவியான இவர் தனது ஓய்வு நேரத்தில் பழைய செய்தித்தாள்களை வெட்டி, கலரடித்து அழகிய பொம்மைகளாக்கி, அவற்றை வீட்டிலிருந்தே விற்பனை செய்து வருகிறார்.
ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரியான இவரது தந்தையும், டெய்லரான இவரது தாயாரும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவரது சகோதரரும், ராதிகாவின் பொம்மை தயாரிக்கும் பணிக்கு பக்கத் துணையாக இருந்து ஊக்குவித்து வருகின்றனர்.
ஹோம் ஸ்கூலிங் எனப்படும் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறையில் பயின்று வரும் ராதிகா, மழலையர் வகுப்பு பயிலும் போது கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாம். இதையடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் சாரசரி மனிதர்களை விட இவரது எலும்புகள் மிகவும் மென்மையாக இருப்பது தெரியவந்தது.
இதனால் இவருக்கு எளிதில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதும் தெரிந்தது. இதையடுத்து பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்று வரும் ராதிகா கடந்தாண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 333 மதிப்பெண்கள் பெற்ற தேர்ச்சி பெற்று நிகழாண்டு ப்ளஸ் 1 படிக்கத் தொடங்கியுள்ளார்.
இதுவரை கால்களில் 7 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள ராதிகா, தனது வலியை மறக்க, கைவினைப் பொருள்கள் செய்து தனது கவனத்தை திசைத்திருப்பத் தொடங்கினார். நண்பர் அனுப்பிய வீடியோவை பார்த்துவிட்டு இம்முயற்சியில் இறங்கிய இவர், மிகச் சிறந்த ஓவியரும் கூட.
இதுகுறித்து ராதிகா தெரிவித்ததாவது,
“நான் சிறு வயதில் இருந்தே நன்றாக ஓவியம் வரைவேன். மற்றவர்களைப் போல ஓடியாடி விளையாட முடியாவிட்டாலும், மற்றவர்களை விட நான் திறமைசாலிதான் என நிரூபிக்கவே, கைவினைப் பொருள்களை உருவாக்கும் பணியில் இறங்கினேன்,” என்கிறார்.
இவரது பணிக்கு ராதிகாவின் சகோதரர் ராஜ்மோகன் மிகுந்த ஊக்கமளித்து வருகிறார். முதன்முதலில் பெற்றோரும், ராஜ்மோகனும் இணைந்து இவர் கைவினைப் பொருள்களைத் தயாரிக்கத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன்பின் ராதிகாவே பொம்மைகளை விற்று கிடைக்கும் வருமானத்தில் தனக்குத் தேவையான மூலப் பொருள்களை வாங்கி தொடர்ந்து கைவினைப் பொருள்களை செய்து வருகிறார்.
யாராவது விரும்பி கேட்டா, அவங்களுக்கு காகித பொம்மை, சுவற்றில் மாட்டும் அலங்காரப் பொருள், போட்டோ பிரேம் என செய்து கொடுப்பேன். இதுவரை அதிகளவில் பொம்மைகள்தான் செய்துள்ளேன்.
“மாதமொன்றுக்கு சுமார் 25 முதல் 30 பொம்மைகள் வரை விற்றுவிடுவேன். இதன்மூலம் எனக்கு குறைந்தபட்சம் மாதம் ஐந்தாயிரம் வரை வருமானம் வருகிறது. இந்தப் பணத்தை அடுத்த முறை பொம்மை மற்றும் கைவினைப் பொருள்கள் வாங்க பயன்படுத்திக் கொள்வேன்,” என்கிறார்.
ஓர் பொம்மை செய்ய சுமார் 2 மணிநேரமாகும். படிக்கும் நேரம் போக எஞ்சிய நேரத்தில் பொம்மை செய்வதால் ஓர் நாளைக்கு 1 பொம்மை செய்கிறார். இதேபோல சுவற்றில் மாற்றும் வால்ஹேங்கிங் எனப்படும் அலங்காரப் பொருள் செய்ய முழுதாக ஓர் நாளாகுமாம். ஆனால் போட்டோ பிரேம் செய்ய 1 மணி நேரம் போதுமாம்.
வீணாகும் காகிதங்களைப் பயன்படுத்தி, இதுபோன்ற கலைப் பொருள்களை செய்வதால் ஓர் ஆத்ம திருப்தி கிடைப்பதோடு, வித்தியாசமான கலைப் பொருள்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அன்புப் பரிசாக வழங்க முடியும் எனக் கூறும் ராதிகா, எதிர்காலத்தில் இந்த கைவினைப் பொருள்களை உருவாக்கி விற்பனை செய்வதையே தொழிலாக செய்து வாழ்க்கையில் சாதிப்பதே தனது லட்சியம் என்கிறார்.
சாதிப்பதற்கு வலுவான உடல் தேவையில்லை. ஆரோக்கியமான மூளையும், கலைநயமிக்க சிந்தனையுமே போதும் என நிரூபித்திருக்கிறார் இந்த கோவை மாணவி.