'நாம் டிவி பார்த்துக்கொண்டே பிள்ளைகளை படிக்கச் சொல்வது எப்படி சரியாக இருக்கும்?' - இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி!
குழந்தைகள் வீட்டில் கவனத்துடன் படிப்பதற்கான சூழலை உருவாக்குவது பெற்றோர்களின் கடமை என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.
குழந்தைகள் வீட்டில் கவனத்துடன் படிப்பதற்கான சூழலை உருவாக்குவது பெற்றோர்களின் கடமை, என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார். பெற்றோர்கள் திரைப்படம் பார்த்துக்கொண்டே பிள்ளைகளை படிக்கச் சொல்வது சரியாக இருக்காது என அவர் கூறியுள்ளார்.
பெங்களூருவில் அண்மையில் நடைபெற்ற இயற்பியல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது செய்தியாளர்களிடம் பேசிய இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, குழந்தைகள் கல்வி தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு கூறினார்.
தனது குழந்தைகள் அக்ஷதா மற்றும் ரோகன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, வீட்டில் ஒழுக்கமான சூழலை கொண்டு வர, தானும், மனைவி சுதாவும், தினமும் மூன்றரை மணி நேரம் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவோம், என அவர் கூறினார்.
மாலை 6.30 முதல் 8.30 வரை குடும்பம் முழுவதும் படித்துக்கொண்டிருப்போம். டிவி பார்க்க அனுமதி இல்லை. இரவு உணவுக்கு பின், 9 மணி முதல் 11 மணி வரை ஒன்றாக படிப்பது எங்கள் வழக்கம், என்றும் அவர் கூறினார்.
"நாம் டிவி பார்த்துக்கொண்டே பிள்ளைகளை படிக்கச் சொல்வது எப்படி சரியாக இருக்கும் என்பது என் மனைவி சுதாவின் கேள்வியாக இருந்தது. எனவே, நானும் டிவி பார்ப்பதை விட்டுவிட்டு படிக்க வேண்டும்," என்று மனைவி வலியுறுத்தியதாகவும் கூறினார்.
பகலில் மனைவியும் டிவி பார்க்காமல் பிள்ளைகளோடு சேர்ந்து படிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் பிள்ளைகள் பாடத்தில் எழும் சந்தேகங்களை பெற்றோர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றாலும் எல்லா கேள்விகளுக்கும் அவர்களுக்கு பதில் தெரிந்திருக்க வாய்பில்லை என்றும் அவர் கூறினார்.
“ஆனால், வீட்டில் படிப்பதற்கான சூழலை உருவாக்குவதே முக்கியம். பெற்றோர் இதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் திரைப்படங்களை பார்த்தபடி, பிள்ளைகளை படிக்கச் சொல்வது பலன் அளிக்காது,“ என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தம்பதியின் மகள் அக்ஷதா, பேஷன் டிசைனராக இருக்கிறார். முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ரோகன், ஏஐ நிறுவனம் சோரோகோவின் நிறுவனராகவும், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாகவும் இருக்கிறார்.
பயிற்சி வகுப்புகள்
பயிற்சி வகுப்புகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், வகுப்பில் பாடங்களை கவனிக்காதவர்களுக்கே பயிற்சி வகுப்பு தேவை, என்றும் நாராயணமூர்த்தி கூறினார்.
“எனக்கு பயிற்சி வகுப்புகளில் நம்பிக்கை இல்லை. மாணவர்களை தயாராக்க இவை தவறான வழி,“ என்றும் அவர் கூறினார்.
பயிற்சி மையங்கள் நிறைந்த கோட்டா நகரில் நிகழும் தற்கொலைகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு கூறினார்.
வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை; குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கியது எப்படி? - நாராயண மூர்த்தி ஓபன் டாக்!
Edited by Induja Raghunathan