வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை; குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கியது எப்படி? - நாராயண மூர்த்தி ஓபன் டாக்!
வாரத்திற்கு 85 முதல் 90 மணி நேரம் வரை வேலை பார்த்த தான் குடும்ப உறுப்பினர்களுக்காக எப்படி நேரம் செலவழித்தேன் என மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
வாரத்திற்கு 85 முதல் 90 மணி நேரம் வரை வேலை பார்த்த தான் குடும்ப உறுப்பினர்களுக்காக எப்படி நேரம் செலவழித்தேன் என மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, “இந்திய இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என கருத்து கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஏற்கனவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவதாகவும், இதனால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை என்றும் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை அடுக்கின்றனர்.
இந்நிலையில். சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உயர்த்திய இணை நிறுவனர் நாராயணமூர்த்தி அதிக நேர வேலைக்கு இடையிலும் எவ்வாறு குடும்பத்திற்காக நேரம் செலவிட்டேன் என அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குடும்பத்திற்கு எது முக்கியம்?
பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நாராயண மூர்த்தியிடம், “பணியில் அதீத கவனம் செலுத்துவதால் குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்க முடியவில்லையே என்று வருந்தியதுண்டா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதை விட, குடும்பத்திற்காக எத்தனை தரமான நேரத்தை செலவிடுகிறோம் என்பது தான் முக்கியம்...” என பதிலளித்துள்ளார்.
“உண்மையில் நான் வருந்தியதில்லை, ஏனென்றால் அளவை விட தரம் முக்கியம் என்று நான் எப்போதும் நம்பினேன். நான் காலை 6 மணிக்கு அலுவலகத்திற்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்குத் திரும்புவேன். நான் வீட்டை அடைந்தவுடன், குழந்தைகள் வாசலில் காத்திருப்பார்கள். சுதா, பிள்ளைகள், மாமனார் அனைவரும் காரில் ஏறுவார்கள், அவர்களுக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிட வெளியே செல்வோம், அந்த நேரத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அந்த ஒன்றரை மணி, இரண்டு மணி நேரம்தான் குழந்தைகளுக்கு மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்தார்கள்.”
தொடர்ந்து பேசிய நாராயண மூர்த்தி, தான் எந்த சிரமத்தை எதிர்கொண்டாலும் குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் எப்போதும் நேரம் ஒதுக்க தயாராக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
“குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் நான் ஒரு கொள்கையை கடைபிடித்து வருகிறேன். என் சகோதரிகள் உட்பட அனைவரிடமும் நான் சொல்வது இதுதான், ‘எல்லாம் நன்றாக நடக்கும் போது உங்களுக்கு நான் தேவையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், நான் அப்போது அங்கு இருப்பேன். அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வர உதவுவேன். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நான் இருப்பேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
உறுதுணையாக இருந்த சுதா மூர்த்தி:
நாராயண மூர்த்தி கடினமாக உழைத்துக்கொண்டிருந்த போது, சுதா மூர்த்தி குடும்பத்தை கவனித்துக்கொண்டதாக கூறியுள்ளார். அலுவலகத்தில் கடுமையாக பணியாற்றினாலும், வீட்டிற்கு வந்ததும் நாராயண மூர்த்தி தனது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவார் என சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
“கணவன் இப்படி பெரிய வேலை செய்யும்போது, 'உங்க அப்பா ரொம்ப கஷ்டப்படுறார் பாரு' என்று மனைவி பிள்ளைகளிடம் சொல்ல வேண்டும். பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களை வீட்டில் கொண்டாடுவோம், அப்போது அப்பா வரவில்லை என்றால், அவர் உங்களை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார். அவர் வீட்டிற்கு வந்ததும், அவர் முழு நேரத்தையும் உங்களுடன் செலவிடுவார் என்பதை கூற வேண்டும்,” எனக்கூறியுள்ளார்.
70 மணி நேர வேலை:
இந்திய இளைஞர்கள் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாராயணமூர்த்தி. தான் ஓய்வு பெறும் வரை வாரத்தில் 85 முதல் 90 மணி நேரம் வேலை செய்வதாகவும், அதனால் 70 மணி நேரம் வேலை பார்ப்பது என்பது மிகப்பெரிய விஷயமல்ல எனக்கூறியுள்ளார்.
“இந்தியர்கள் வரி பணத்தில் இருந்து பல நன்மைகளைப் பெறுகிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய மகத்தான பொறுப்பு உள்ளது என்பதே எனது கருத்து,” எனக்கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜெர்மனியர்கள், ஜப்பானியர்கள் வேலை செய்தது போல் இந்தியர்கள் கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கைத் தரம் மேம்படும் எனத் தெரிவித்துள்ளார்.