'வக்கீல் ஆனாலும் பரோட்டோ போடுவேன்' - வைரல் வீடியோ ‘பரோட்டா’ மாணவி வழக்கறிஞர் ஆனார்!

கடந்தாண்டு பரோட்டோ போடும் வீடியோ மூலம் வைரலான சட்டக்கல்லூரி மாணவி அனஸ்வரா, தற்போது வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார். வழக்கறிஞர் ஆனாலும் தொடர்ந்து பரோட்டோ போடுவேன் என்கிறார் அவர்.

'வக்கீல் ஆனாலும் பரோட்டோ போடுவேன்' - வைரல் வீடியோ ‘பரோட்டா’ மாணவி வழக்கறிஞர் ஆனார்!

Saturday June 18, 2022,

3 min Read

சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டே மாணவி ஒருவர் பரோட்டோ மாஸ்டராக நாளொன்றிற்கு 150 பரோட்டாக்கள் போடுகிறார் என்ற வீடியோவால் கடந்தாண்டு சமூகவலைதளங்களில் வைரலானவர் கேரளாவைச் சேர்ந்த 23 வயது அனஸ்வரா ஹரி.

பரோட்டா மற்ற உணவுகளைப் போல் இல்லை, அதற்கான மாவைப் பிசைந்து அடித்து, சுற்றி, தட்டி என பரோட்டாவை ஒரு வடிவத்திற்குக் கொண்டு வருவதற்குள் பரோட்டா மாஸ்டர்கள் எந்தளவிற்கு உடல் உழைப்பைத் தர வேண்டி இருக்கும் என கடைகளில் நாம் பார்த்திருப்போம். அதனாலேயே, உடல் வலிமையான ஆண்களால் மட்டுமே பரோட்டா மாஸ்டர்களாக இருக்க முடியும் என்ற பிம்பம் உள்ளது.

ஆனால், அனஸ்வராவின் பரோட்டா தயாரிக்கும் வீடியோ இந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தது. ஒல்லியான தேகத்துடன், கல்லூரி மாணவி ஒருவர் கைதேர்ந்த விதத்தில், லாவகமாக பரோட்டா தயாரிக்கும் வீடியோ மக்களை ஆச்சர்யப்படுத்தியது. இதனாலேயே அனஸ்வரா யார் எனத் தெரிந்து கொள்ள மக்கள் ஆசைப்பட்டனர். இதன்மூலம் கடந்தாண்டு சோஷியல் மீடியாவில் செலிபிரிட்டி ஆனார் அனஸ்வரா.

Parotta girl

யார் இந்த அனஸ்வரா?

கேரளா மாநிலம் கோட்டையத்திலுள்ள குருவன்மூழி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்தான் அனஸ்வரா ஹரி என்ற 23 வயது மாணவி. இவரது குடும்பம் சபரிமலை செல்லும் வழியில் அமைந்துள்ள வனப்பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த உணவகத்தில், ஆரம்பத்தில் அனஸ்வராவின் தாத்தா பாட்டி டீ வியாபாரம் செய்து வந்தனர். பின்னர் அதனை சிறிய உணவகமாக மாற்றி விட்டனர். தற்போது அனஸ்வராவின் தாய் அந்தக் கடையை நடத்தி வருகிறார்.

அனஸ்வரா சிறுமியாக இருக்கும் போதே அவரது தந்தை குடும்பத்தை விட்டு விட்டு எங்கோ சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் அனஸ்வராவின் தாய் வசம் வர, பொருளாதாரத்தேவையைச் சமாளிக்க இந்த உணவகத்தை அவர் நடத்தத் தொடங்கியுள்ளார்.

டீ போடுவது, உணவுகள் தயாரிப்பது என தனியாக வேலைகளைச் சமாளிக்கும் அம்மாவிற்கு உதவி செய்வதற்காக, தனது 13 வயதில் இந்தக் கடைக்குள் அனஸ்வரா வந்துள்ளார். தன்னால் முடிந்த உதவிகளை அம்மாவிற்குச் செய்ய வேண்டும் என நினைத்தவர், கொஞ்சம் கொஞ்சமாக பரோட்டா போடுவது எப்படி என்று கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளார்.

சிறுமி என்பதால் ஆரம்பத்தில் அடுப்பில் சுட்டுக் கொள்வது, தீக்காயம் என சில வலிகளைச் சந்தித்துள்ளார். ஆனால், அதற்காக பின்வாங்கிவிடாமல், தொடர்ந்து பரோட்டா போட பயிற்சி மேற்கொண்டார். தன் கைப் புண்ணின் வலியைவிட, குடும்பத்தின் வறுமையின் வலி அவரை அதிகமாகப் பாதித்தது. எனவே, தானும் அம்மாவிற்கு உதவி செய்தால், உணவகத்தின் வருவாயை மேலும் உயர்த்தலாம் என நினைத்துள்ளார். இதனால் குறைந்த காலத்திலேயே கைதேர்ந்த பரோட்டா மாஸ்டர் மாதிரியே பரோட்டா போட கற்றுக் கொண்டார்.

பதமாக மாவு தயாரிப்பதில் தொடங்கி, சரியாக பரோட்டாவை சுட்டு எடுத்து அதனை தட்டி பரிமாறுவது வரை அனைத்து வேலைகளும் அனஸ்வராவுக்கு அத்துப்படி.

உணவகத்தின் வருவாயை உயர்த்த வேண்டும் என்ற சிந்தனை இருந்தபோதும், அதற்காக தனது படிப்பையும் அவர் விட்டுவிடவில்லை. மற்ற குழந்தைகள் மாதிரியே பள்ளிக்குச் சென்று வந்தார். ஆனால், மற்ற குழந்தைகள் பள்ளி முடிந்து மாலையில் விளையாடச் சென்றால், அனஸ்வரா அவரது கடைக்கு பரோட்டா தயாரிக்கச் சென்று விடுவார்.

பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அனஸ்வரா தனது உணவகத்தில்தான் செலவிட்டுள்ளார். காலையிலும் பள்ளிக்குச் செல்லும் முன் உணவகத்திற்குச் சென்று பரோட்டாக்களைத் தயாரித்து வைத்து விட்டுச் செல்வது அனஸ்வராவின் அன்றாடப் பணியாகி விட்டது.

உணவக நேரம் முடிந்த பிறகு இரவில் மற்றும் அதிகாலையில் தனது வீட்டுப்பாடங்களைப் படிக்க, எழுத என அப்போதே தனது நேரத்தை அழகாக நெறிப்படுத்தி செலவு செய்துள்ளார். இப்படியே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரோட்டா மாஸ்டராக செயல்பட்டு வருகிறார் அனஸ்வரா.

“எனக்கு பரோட்டான்னு செல்லப் பெயரே கிடைத்துவிட்டது. தினமும் காலையில் 150 பரோட்டாக்கள் போட்டுவிடுவேன்,” என்கிறார் அனஸ்வரா.

கடந்தாண்டு இவர் பரோட்டோ போடும் அழகைப் பார்த்து யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர, அது வைரலாகி விட்டது. ஒரு மணி நேரத்திற்குள் சுமார் பத்து லட்சம் பார்வைகளைக் கடந்தது அந்த வீடியோ. ஒரே வீடியோவால் கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதுமே பேசப்படும் நட்சத்திரம் ஆனார்.

அப்போது அவர் பள்ளிப்படிப்பை முடித்து தொடுப்புழாவிலுள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை பயின்று வந்தார். 23 வயது மாணவி ஒருவர் ஒருபுறம் பரோட்டா போடுவது மற்றொரு புறம் படிப்பது என்று இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதால், சமூகவலைதளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்தது.

இந்நிலையில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டே, தனது சட்டப்படிப்பையும் முடித்து விட்டார் அனஸ்வரா. இவர் தற்போது எர்ணாகுளத்தில் சேர்ந்த மனோஜ் வி. ஜார்ஜ் என்ற பிரபல வழக்கறிஞரிடம் ஜூனியராக சேர்ந்துள்ளார்.

anaswara

அனஸ்வராவிற்கு நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் படிப்பையும் பார்த்துக் கொண்டு, பரோட்டோ போடும் வேலையையும் செய்து ஒரு பெண் நினைத்தால் எந்த சூழ்நிலையிலும், எதையும் சாதிக்க முடியும் என்பதை அனஸ்வரா செய்து காட்டியுள்ளார்.

“வழக்கறிஞர் ஆனாலும் நான் பரோட்டோ போடுவதை நிறுத்த மாட்டேன். வழக்கறிஞராக பதிவு செய்த நாளன்று காலையில்கூட பரோட்டோ போட்டு விட்டுத்தான் சென்றேன். கிரிமினல் லாயராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அப்படியே மாஜிஸ்திரேட் தேர்வுக்கும் தயாராக வேண்டும்,” என தன் எதிர்காலக் கனவுகள் குறித்துக் கூறுகிறார் அனஸ்வரா.

முன்னதாக அளித்த பேட்டியில் இளங்கலை பட்டப்படிப்பு முடிந்தவுடன் ஐஏஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத திட்டமிட்டிருப்பதாக அனஸ்வரா கூறியிருந்தார். அவரது ஆசைப்படி எதிர்காலத்தில் மேலும் அவர் பல வெற்றிகளைக் குவிக்க யுவர்ஸ்டோரி தமிழ் சார்பாக வாழ்த்துகிறோம்.

தகவல் உதவி: மனோரமா