‘தெரிந்த நிறுவனம் தெரியாத கதை’ - 1600 கோடி நவீன கழிப்பறை ப்ராண்ட் Parryware வளர்ச்சிக் கதை!
சென்னையைச் சேர்ந்த Parryware கழிப்பறைகள் மட்டுமின்றி சிங்க், குழாய், ஹீட்டர், சிஸ்டர்ன், பம்ப் போன்றவற்றை தயாரிக்கிறது.
1780-களில் தாமஸ் பேரி இந்தியா வந்தார். இவர் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகர். ஈஸ்ட் இந்தியா டிஸ்டிலரிஸ் (EID Parry) என்கிற பெயரில் டிஸ்டிலரி வணிகத்தைத் தொடங்கினார்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு 1950-களில் இந்நிறுவனம் கப்பல்களில் சல்ஃப்யூரிக் ஆசிட் இறக்குமதி செய்தது. ரசாயனத்தை ஸ்டோர் செய்ய பீங்கான் கண்டெயினர் தேவைப்பட்டது. எனவே தமிழகத்தின் ராணிப்பேட்டையில் இருந்த ஒரே ஒரு மண்பாண்ட தயாரிப்பு தொழிற்சாலையில் பீங்கான் தயாரிக்க ஆரம்பித்தது.
அந்த நாட்களில் இந்தியாவில் கழிப்பறைகள் அதிகம் இல்லை. எனவே பீங்கான் தயாரிப்பை இதற்குப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதை இந்நிறுவனம் உணர்ந்தது. இப்படித் தொடங்கியதுதான் Parryware.
சென்னையைச் சேர்ந்த இந்த பிராண்ட் கழிப்பறைகள் மட்டுமின்றி சிங்க், குழாய், ஹீட்டர், சிஸ்டர்ன், பம்ப் போன்றவற்றை தயாரிக்கிறது. ஸ்பெயின் நாட்டு சானிட்டரி தயாரிப்பு குழுமமான Roca 2006-ம் ஆண்டு இந்நிறுவனத்தை கையகப்படுத்தியது.
“2019-ம் ஆண்டில் எங்கள் நிறுவனத்தின் வருவாய் 1,600 கோடி ரூபாய். இந்தியா முழுவதும் எட்டு இடங்களில் தயாரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. 15,000 சில்லறை வர்த்தக பார்ட்னர்கள் உள்ளனர்,” என்கிறார் Roca Parryware நிர்வாக இயக்குநர் கே.இ. ரங்கநாதன்.
இவர் Parryware வளர்ச்சி குறித்தும் வணிக மாதிரி குறித்தும் எஸ்எம்பிஸ்டோரி உடனான பிரத்யேக நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.
எஸ்எம்பிஸ்டோரி: Parryware ஆரம்ப நாட்கள் எப்படி இருந்தது? இத்தகைய வளர்ச்சி எப்படி சாத்தியமானது?
ரங்கநாதன்: நாங்கள் கழிப்பறைகளை உருவாக்கத் தொடங்கியபோது வட இந்தியாவில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இதில் ஈடுபட்டிருந்தன. 1955-களில் டீலர்களும் வாடிக்கையாளர்களும் ஒரு கழிப்பறையைப் பெற ஆறு மாதங்கள் வரை காத்திருக்கவேண்டிய சூழல் இருந்தது.
கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் வரை இந்த நிலை நீடித்தது. 1980-களில் இந்தப் பிரிவில் மாற்றத்தைக் கொண்டு சேர்க்க வேண்டியிருந்தது. இந்த காலகட்டத்தில்தான் வீடுகளுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கழிப்பறைகள் வீடுகளுக்குள் வந்தன. இதற்கேற்றாற்போல் நாங்கள் கழிப்பறைகளை அழகாக வடிவமைக்கத் தொடங்கினோம்.
ஸ்டைலான கழிப்பறைகளை வடிவமைத்து ஒட்டுமொத்தமாக புதிய பிரிவினை உருவாக்கினோம். எனினும் அந்த சமயத்தில் சர்க்கரை மற்றும் உரம் வணிகத்தில் ஈடுபட்டிருந்த EID Parry நிறுவனம் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. இந்நிறுவனத்தைக் கிட்டத்தட்ட மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது.
80-களின் மத்தியில் முருகப்பா குழுமம் EID Parry நிறுவனத்தை வாங்கிவிட்டது. அவர்கள் சர்க்கரை வணிகத்தை வெற்றிப் பாதைக்கு மாற்றியதுடன் உரம் தொடர்பான வணிகத்தையும் மிகப்பெரிய வெற்றி நிறுவனமாக மாற்றினார்கள். மேலும் Parryware செயல்பாடுகளுக்கும் முதலீடு செய்தார்கள்.
எஸ்எம்பிஸ்டோரி: முருகப்பா குழுமம் எவ்வாறு EID Parry வணிகத்தை வெற்றிகரமாக மாற்றியது?
ரங்கநாதன்: வெற்றிக்கு முழு பொறுப்பு அந்த சமயத்தில் EID Parry தலைவராக இருந்த எம்.வி.சுப்பையா மட்டுமே. மார்க்கெட்டிங், தயாரிப்பு இரண்டிற்கும் துறையில் மிகச்சிறந்த திறமைசாலிகளை நியமிக்க முடிவெடுத்தார். நிறுவன செயல்பாடுகள் அனைத்தையும் ப்ரொஃபஷனலாக மாற்றினார்.
ஒவ்வொரு பிரிவிலும் கூடுதலாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார். ஒட்டுமொத்த செயல்பாடுகளும் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.
எஸ்எம்பிஸ்டோரி: Roca உடனான இணைப்பு எப்படி ஏற்பட்டது?
ரங்கநாதன்: Roca நிறுவனம் 2000-ம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தது. இந்திய பார்ட்னரை எதிர்நோக்கியிருந்தது. Parryware உடன் இணைந்து செயல்படுவது பலனளிக்கும் என்று கருதியது.
இந்த இரு நிறுவனங்களும் 50-50 ஜாயிண்ட் வென்சரில் கையொப்பமிட்டு மூன்றாண்டுகள் வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு Roca நிறுவனம் Parryware நிறுவனத்தை வாங்கத் தீர்மானித்தது. முருகப்பா நிறுவனம் ஒப்புக்கொண்டது. பாத்ரூம் வணிகத்தை விட்டுவிட்டு EID Parry சர்க்கரை மற்றும் உர வணிகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது. இப்படி 100% துணை நிறுவனம் ஆனது.
எஸ்எம்பிஸ்டோரி: இந்தியாவில் Parryware மற்றும் Roca தயாரிப்புப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன?
ரங்கநாதன்: Roca இந்தியாவில் Armani Roca, Laufen, Roca, Parryware, Johnson Pedder என ஐந்து பிராண்டுகளைக் கொண்டுள்ளது. எங்களது எட்டு தொழிற்சாலைகளில் நான்கில் அனைத்து பிராண்டுகளும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் தயாரிப்பு முறை மாறுபடும். அதாவது மூலப்பொருட்கள், புரொடக்ஷன் லைன், தரநிலைகள் அனைத்துமே மாறுபடும். எங்களது மற்ற தொழிற்சாலைகளில் Roca, Parryware, Johnson Pedder ஆகியவற்றின் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வணிக மாதிரி என்ன? பி2பி, பி2சி இரண்டிலும் எவ்வாறு கவனம் செலுத்துகிறீர்கள்?
ரங்கநாதன்: பி2சி வணிகத்தைப் பொறுத்தவரை குளியலறையில் நுகர்வோர் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கு என்பதை ஆராய்கிறோம்.
இதை அடிப்படையாகக் கொண்டு நுகர்வோரை வயதுவாரியாக வகைப்படுத்துகிறோம். அதாவது குழந்தைகளுக்கு வண்ணமயமாகவும் இளம் பருவத்தினருக்கு தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளுடனும் வகைப்படுத்துகிறோம். உதாரணத்திற்கு ப்ளூடூத் சார்ந்த ஷவர் வடிவமைக்கிறோம்.
பி2பி பிரிவில்தான் முக்கிய கவனம் செலுத்துகிறோம். இந்தியாவில் கிட்டத்தட்ட 600 டெவலர்ப்பர்களும் பில்டர்களும் பார்ட்னர்களாக இணைந்துள்ளனர். நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்தும் இவர்கள் எங்களிடம் வாங்குகிறார்கள். முழுமையாக ஒரு பாத்ரூம் அமைப்பதற்கான தொகையை மனதில் கணக்கிட்டு அதற்கேற்றவாறு முழுமையான பேக்கேஜாகவே வாங்க விரும்புவார்கள்.
பெரியளவில் செயல்படும் இத்தகைய பில்டர்கள் தயாரிப்புகளை கலவையாக வாங்குவார்கள். எனவே Roca கீழ் செயல்படும் பல்வேறு பிராண்டுகளின் தயாரிப்புகளை ஒன்றாக சேர்த்து எங்கள் குழு வழங்குகிறது.
இதுதவிர பி2பி2சி என்கிற மாதிரியையும் பின்பற்றுகிறோம். சில பில்டர்கள் அருகாமையில் இருக்கும் டீலர்களை அணுகுவார்கள். இந்த வணிக மாதிரியின்படி அத்தகைய சிறு பில்டர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்.
பாத்ரூம்களை புதுப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மூலம் 50 சதவீத வணிகமும் புதிய கட்டுமானங்களில் நிறுவப்படும் தயாரிப்புகள் மூலம் 50 சதவீத வணிகமும் நடைபெறுகின்றன.
எஸ்எம்பிஸ்டோரி: இத்தனை ஆண்டுகளில் நிறுவனம் சந்தித்துள்ள சவால்கள் என்னென்ன? இவற்றை எவ்வாறு சமாளித்தீர்கள்?
ரங்கநாதன்: 2008-2016 ஆண்டுகளிடையே சந்தை பங்களிப்பு குறைந்தது. வளர்ச்சியை ஊக்குவிக்கும் வழிமுறைகளும் தெரியவில்லை.
இதை சமாளிக்க மீண்டும் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினோம். சந்தையில் செயல்படுவது, புதிய சாதனங்களை அறிமுகப்படுத்துவது, விநியோகச் சங்கிலி அமைப்பை மேம்படுத்துவது என உத்திகளை ஆய்வு செய்து வகுத்தோம். 25 சதவீத வளர்ச்சி சாத்தியப்பட்டது.
தற்போது எங்கள் தொழிற்சாலைகள் முழு திறனுடன் இயங்கினாலும்கூட நுகர்வோர் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய இயலவில்லை.
எஸ்எம்பிஸ்டோரி: சானிட்டரிவேர் சந்தையில் Jaguar, Hindware, CERA போன்ற முக்கிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் சந்தை போட்டியை Parryware எவ்வாறு எதிர்கொண்டு தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்கிறது?
ரங்கநாதன்: இந்தத் துறையில் தயாரிப்பாளர்களின் சங்கமான ’இந்தியன் கவுன்சில் ஆஃப் செராமிக் டைல்ஸ் அண்ட் சானிட்டரிவேர் (ICCTAS) என்கிற அமைப்பு உள்ளது. துறையில் செயல்படும் நாங்கள் அனைவருமே நண்பர்கள். மற்றவர்களின் சந்தை வாய்ப்பைப் பறிப்பது இங்கிருப்பவர்களின் நோக்கமாக இருப்பதில்லை. அனைவருக்கும் பொதுவான பிரச்சனைகளை அலசி தீர்வு காண்பதே நோக்கமாக இருக்கும்.
சந்தையில் எப்போதும் ஒருவரே தலைவராக இருக்கமுடியாது. இது நிரந்தரமான இடம் இல்லை. எனவே ஒருவர் மற்றவரிடம் இருந்து ஊக்கம் பெறுகிறோம். உதாரணத்திற்கு 2017-ம் ஆண்டு டீலர்களுக்கான லாயல்டி புரோக்ராம் ஒன்றை அறிமுகப்படுத்தினோம். இது வெற்றிகரமாக இருந்ததை அடுத்து பலர் இதேபோன்ற திட்டத்தை பின்பற்றத் தொடங்கினார்கள்.
ஒருவர் மற்றவரின் ஸ்டுடியோ, ஷோரூம் போன்ற இடங்களை பார்வையிடுவோம். அங்குள்ள சிறந்த செயல்முறைகளை மற்றவர்களும் பின்பற்றுவோம். போட்டி இல்லாத ஆரோக்கியமான உறவு நிலவுகறது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் போட்டியாளர்களில் சிலர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஆனால் Parryware நிறுவனம் முழுமையாக Roca நிறுவனத்தினுடையது. இதனால் வணிகம் தொடர்பாக சுதந்திரமாக தீர்மானங்கள் எடுக்கப்படுவதில் என்ன வேறுபாடு இருக்கக்கூடும்?
ரங்கநாதன்: சந்தையைப் பொறுத்தவரை அனைத்து பிராண்டுகளும் ஒரே மாதிரியான தாக்கத்தையே ஏற்படுத்தும். அதேபோல் நுகர்வோருக்கும் ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும் இல்லையென்றாலும் எந்தவித வித்தியாசமும் இருக்காது. ஆனால் உத்திகள் வகுக்கப்படுவதில் பட்டியடப்பட்ட நிறுவனங்கள் எப்போதும் பொதுமக்களின் முழு கவனத்தில் இருக்கும்.
அவர்கள் ஒவ்வொரு காலாண்டையும் கூர்ந்து நோக்குவார்கள். ஒவ்வொரு காலாண்டிலும் வளர்ச்சியை காட்டவேண்டும் என்கிற அழுத்தம் இருக்கும். இதனால் குறுகிய கால இலக்குகள் மட்டுமே நிர்ணயிக்கப்படும். ரிஸ்க் எடுக்கவோ நீண்ட கால அடிப்படையில் இலக்கு நிர்ணயித்து செயல்படவோ முடியாமல் போகும்.
எஸ்எம்பிஸ்டோரி: 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சூழலை எவ்வாறு எதிர்கொண்டு மீண்டு வந்தீர்கள்?
ரங்கநாதன்: முதலில் பெருந்தொற்று மற்ற பகுதிகளில் பரவ ஆரம்பித்ததால் இந்தியாவில் Roca நிறுவனம் முறையாக திட்டமிட முடிந்தது. சீனா, இந்தோனேஷியா, மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் Roca நிறுவனத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
லாக்டவுன் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது இந்த அனுபவம் உதவியது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றினோம். அறிவிப்பு வெளியான மறுநாள் முதலே வீட்டிலிருந்து வேலை செய்ய ஆரம்பித்தோம்.
ஏப்ரல் மாதம் எந்த வருவாயும் இல்லை. இடத்தின் உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். சில ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் மாதத்தில் கோவிட் தொற்று பரவலுக்கு முந்தைய நிலை எட்டப்பட்டது.
எஸ்எம்பிஸ்டோரி: அடுத்த சில ஆண்டுகளுக்கு Parryware திட்டம் என்ன? எந்த மாதிரியான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன?
ரங்கநாதன்: வாடிக்கையாளர்கள் விரும்பும் முன்னணி பிராண்டாக தொடர்ந்து செயல்பட விரும்புகிறோம். இதை சாத்தியப்படுத்த தொடர்ந்து புதிய தயாரிப்புகளை புதிய இடங்களில் அறிமுகப்படுத்த உள்ளோம். கிராமப்புற சந்தைகளுக்கு சேவையளிப்பது குறித்து கவனமாக ஆராய்ந்து வருகிறோம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா