எளிய மக்களின் யதார்த்த வாழ்க்கை பேசும் ‘கூழாங்கல்’ - இந்தியாவின் ஆஸ்கர் கனவை நினைவாக்குமா?
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதன் மூலம் இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள கூழாங்கல் எனும் தமிழ்ப்படம்.
எல்லா மொழி சினிமா கலைஞர்களுக்கும் ஆஸ்தான கனவு என்றால் அது எப்போதுமே ஆஸ்கர் விருதுகள் தான். ஹாலிவுட் திரைத்துறையினருக்காக உருவாக்கப்பட்டு, ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது தான் ஆஸ்கர் என்றபோதும், அனைத்து சினிமா கலைஞர்களுக்கும் அது கௌரவமான ஒரு விருதாகவே கருதப்படுகிறது. இதனாலேயே அது கலைஞர்களின் கனவாக மட்டுமல்லாமல் ஒரு தேசத்தின் கனவாகவும் மாறி இருக்கிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
1929ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது விழாவில், 1956ம் ஆண்டு முதல் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கு என தனி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் இதுவரை 53 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் இருந்து ஒரு படம் கூட இதுவரை விருதைப் பெறவில்லை.
இந்நிலையில், தமிழில் தயாராகி இருக்கும் ’கூழாங்கல்’ படம், இம்முறை ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ள 94-வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கூழாங்கல் இந்தியா சார்பில் களமிறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆஸ்கர் விருதுக்காக இந்திய அளவில் 14 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் ‘சர்தார் உத்தம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உள்ளிட்ட 14 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம் 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் பார்வையிட்டனர்.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த தேர்வுப் பணியின் இறுதியில், இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு கூழாங்கல் படத்தை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூழாங்கல் திரைப்படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். தனது நண்பர்களுடன் இணைந்து இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். ஆனால், எடுத்தப் படத்தை வெளியிடுவதற்கோ, சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவோ பொருளாதார பின்புலம் இயக்குனருக்கும் அவரது நண்பர்களுக்கும் இல்லை.
இயக்குநர் ராம் மூலம் இது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கூழாங்கல் படத்தை நேரில் பார்த்த அவர்களுக்கு, அப்படம் மிகவும் பிடித்துப் போகவே, சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்புகிற செலவை தங்களது ரௌடி பிக்சர்ஸ் மூலம் அவர்களே ஏற்றுக் கொண்டார். இதனால் கூழாங்கல் படத்தின் தயாரிப்பாளர்களாகினர் அவர்கள் இருவரும்.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே 'கூழாங்கல்' திரைப்படம் இதுவரை திரையிடப்பட்ட பல திரைப்பட விழாக்களில் உயரிய பல விருதுகளைப் பெற்றுள்ளது. நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50வது சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படமாக சாதனையும் செய்துள்ளது.
உக்ரைனில் நடந்த ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’விலும் திரையிட கூழாங்கல் தேர்வானது. அதன் தொடர்ச்சியாக தற்போது சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவும் கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கூழாங்கல் திரைப்படம் வறுமை, குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வாழ்வியல் திரைப்படமாக உருவாகி உள்ளது. யதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் செல்லப்பாண்டி என்ற சிறுவனும், அவனது அப்பாவாக கருத்தடையானும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
"கூழாங்கல்' படத்தின் கதை நம் வாழ்வில் அன்றாடம் நடக்கக்கூடியதுதான். மிகவும் எளிமையான கதைதான். அப்பாவுக்கும் மகனுக்குமான கதை. விருதுக்காக என நினைத்து எடுக்கவில்லை. படத்தை முடித்து மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. படத்தின் கதையே என் ஊர் மக்களையும் அவர்கள் வாழ்வியலையும் சார்ந்ததுதான். இது அவர்களுக்கான வெற்றியாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் எளிமையான படம்,” என பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூழாங்கல் குறித்துப் பேசியிருக்கிறார் அப்பட இயக்குநர் வினோத்ராஜ்.
மேலூர் அருகே உள்ள அரிட்டபட்டி எனும் குக்கிராமத்தில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களுக்கு உயிரூட்ட வேண்டும் என்பதற்காகவே நிஜ கிராம மக்களையே இப்படத்தில் நடிகர்களாக்கி இருக்கிறார் வினோத்ராஜ். வன்முறை நிறைந்த கணவர் ஒருவர் மனைவியை கொடுமைப்படுத்துவதும், அவருக்கு எதிராக அவர்களது மகன் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தும் கோபமும் தான் படத்தின் கதைக்களம். அச்சிறுவனின் பார்வையில் விரிகிறது படம்.
தனது சொந்த வாழ்க்கையில் தான் பார்த்த சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறாராம் இயக்குநர் வினோத்ராஜ். தனது சொந்த சகோதரியே இது போல் கணவரால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
எப்படிப்பட்ட கணவர் அமைந்தாலும், அவருடன் வாழ்ந்தே தீர வேண்டும் என்பது பெண்களின் தலையெழுத்து என எங்கள் ஊரில் கூறுவார்கள். ‘இருந்து கழிச்சுடு’ என இதற்கு ஒரு வார்த்தையே உண்டு. ஆனால் அந்த மாதிரியான குடும்பச் சூழலில் வளரும் குழந்தையின் மனநிலை நிச்சயம் பாதிக்கப்படும்.
“நானும்கூட அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்தவன் தான். அப்படிப்பட்ட குழந்தைகளின் மனம் முழுவதும் வன்முறை நிறைந்து இருக்கும். அதனை எப்படிக்கடந்து செல்வது என்ற பக்குவம் குழந்தைகளுக்கு அப்போது இருக்காது. அப்படிப்பட்ட குழந்தையின் மனநிலையைத்தான் திரையில் காட்ட விரும்பினேன். தன் வயதுக்குரிய விளையாட்டுத்தனத்தோடும், அதே சமயம் குடும்பச் சூழலைப் புரிந்து கொள்ளும் மனதொடும் கதையின் நாயகனாக அச்சிறுவனின் கதாபாத்திரம் இருக்கும்,” என கூழாங்கல் குறித்து தி நியூஸ் மினிட் பேட்டியில் கூறியிருக்கிறார் வினோத்ராஜ்.
இன்று ஆஸ்கருக்கு செல்வதன் மூலம் சமூகவலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது கூழாங்கல் படம். ஆனால் இந்த உயரத்தை அப்படம் அவ்வளவு எளிதாக எட்டி விடவில்லை. வினோத்ராஜ் தனது சொந்த வாழ்க்கையிலும் சரி, திரை வாழ்க்கையிலும் சரி இதற்காக உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பலன் தான் இந்த பாராட்டுகளும், அங்கீகாரமும்.
சினிமா ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்தவர் தான் வினோத்ராஜ். ஆனால் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பது இங்கு வந்தபிறகு தான் அவருக்கு புரிந்திருக்கிறது. எனவே திரைப்பிரபலங்களைச் சந்திப்பதற்காக டிவிடி கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கு தான் இயக்குநர் சற்குணத்தின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது.
அதன்மூலம் அவரது ’மஞ்சப்பை’ படத்தில் உதவி இயக்குநராகும் வாய்ப்பு அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஆக வேண்டும் என்ற தனது கனவை தள்ளி வைத்து விட்டு, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார் வினோத்ராஜ். அப்படத்தைத் தொடர்ந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்களை உருவாக்கியுள்ளார். கூழாங்கல்லும் அப்படி உருவான படைப்பு தான்.
17 தயாரிப்பாளர்கள் அப்படத்தைத் தயாரிக்க மறுத்துவிட, தன் நண்பர்களுடன் சேர்ந்து தானே அதனை தயாரித்திருக்கிறார் வினோத்ராஜ். கோவா திரைப்பட விழாவில் படத்தின் டிரெய்லரைப் பார்த்து பாராட்டி இருக்கிறார் இயக்குநர் ராம், அதன் பிறகுதான், நயனும், விக்னேஷ் சிவனும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஆகியுள்ளனர்.
“இது போன்ற குடும்ப வன்முறை என்பது தனிநபரின் பிரச்சினையல்ல, மனிதர்களின் வாழ்வியல் சார்ந்தது. அதைத்தான் இந்தக் கூழாங்கல் பேசுகிறது. இப்படத்தில் வரும் கணவரின் கதாபாத்திரம் மட்டுமல்ல, இந்த சமூகத்தின் பிரதிபலிப்பு தான் அது. சினிமா என்பது பழிவாங்கக்கூடிய ஒரு கருவியாக நினைக்கிறேன். அதனால் தான் இந்தக் கதையை நான் தலைகீழாக எழுதினேன்,” என்கிறார் வினோத்ராஜ்.
கூழாங்கல் படத்தைப் பார்த்த மற்ற திரைப்பிரபலங்கள் அப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
“உண்மையான தமிழ் கிராமத்தின் மணத்தோடு உருவாக்கப்பட்ட இயல்பான திரைப்படம் கூழாங்கல். இயக்குநர் வினோத்ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்,” என ஃபேஸ்புக் மூலமாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.
இதேபோல், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில்,
“கிரேட் நியூஸ். எனக்கு நம்பிக்கை இருக்கிறது ’கூழாங்கல்’ ஆஸ்கர் வெல்லும். பிரார்த்தனை செய்கிறேன்,” என வாழ்த்தியுள்ளார்.
மேலும், இயக்குநர் சேரன், ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் உள்ளிட்டோரும் கூழாங்கல் படத்தைப் பாராட்டியுள்ளனர்.
கூழாங்கல் விருதை வெல்வதற்கு இன்னும் இரண்டு சுற்று பரிசீலனை எஞ்சியுள்ளது. உலகம் முழுக்க உள்ள ஜுரிக்களின் வாக்குகளை பெறும் பட்சத்தில் கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதை வெல்லும்.
இதுவரை மதர் இந்தியா, சலாம் பம்பாய் மற்றும் லகான் ஆகிய மூன்று திரைப்படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு இந்திய திரைப்படங்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை பெறவில்லை. அந்தக் குறையை கூழாங்கல் நீக்கும் என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்னும் திரைக்கு வராத இப்படம் குறித்து இப்போதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து விட்டது. நவம்பர் முதல் தேதி முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதால், கூழாங்கல்லை ஓடிடியில் வெளியிடுவதா அல்லது திரையரங்குகளில் வெளியிடுவதா என படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்களாம்.