தமிழ் சினிமாவின் ‘தனி ஒருத்தி' - லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா உயர்ந்த கதை!
தென்னிந்தியாவின் ’லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா’ இன்று தனது 36வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த உயரம் அவருக்கு தட்டில் வைத்து தரப்பட்டதல்ல.. பல தடைகளை உடைத்து அவரே உருவாக்கியது. தன் வாழ்க்கையை அவரே செதுக்கிக் கொண்ட கதை சுவாரஸ்யமானது.
சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா ரஜினி என சின்னக் குழந்தையும் சொல்வது போல், லேடி சூப்பர்ஸ்டார் யாரெனக் கேட்டால் கிராமத்தில் கண் பார்வை மங்கிய தாத்தாக்கூட டக்கென 'நயன்தாரா' எனக் கூறுவார். அந்தளவிற்கு மக்கள் மனதில் கண்ணிற்கே தெரியாத பிரமாண்ட நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறார் நயன்.
ஆனால் இப்படியொரு உயரத்தை அவர் ஒரே நாளில் தொட்டுவிடவில்லை. அதிர்ஷ்டம் தானாக வந்து அவரது கதவைத் தட்டி வெற்றிகளைக் கொடுக்கவில்லை. வாழ்க்கையில் பல முறை கீழே விழுந்து, அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மூலம் தான் தன் வெற்றிப் பயணத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார் டயானா மரியா குரியன் எனும் நயன்தாரா.
இன்று தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடும் நயன், கடந்த 1984ம் ஆண்டு கேரள மாநிலம் திருவல்லாவில் பிறந்தவர். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் டயானா மரியா குரியன். சினிமாவிற்கு வந்த பிறகு தனது பெயரை நயன்தாரா என மாற்றிக் கொண்டார்.
2003-ம் ஆண்டு தனது 19 வயதில் ’மனசினகாரே’ என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் நயன்தாரா. தமிழில் ஹரி இயக்கத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக 2005ம் ஆண்டு ’ஐயா’ படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக ஆடிப் பாடி அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்டார்.
அதன்பலனாக ஒரே ஆண்டில் நான்கு படங்கள் அவரது வசமானது. அதிலும் ஐயா படத்தைத் தொடர்ந்து தனது இரண்டாவது படமான சந்திரமுகியிலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியானார்.
சிலர் திரைப்படங்களில் அறிமுகமான புதிதில் ஆஹோ ஓஹோ எனக் கொண்டாடப்படுவார்கள். ஆனால் பிறகு சில படங்களிலேயே வந்த சுவடே இல்லாமல் காணாமல் போய் விடுவார்கள். நயனும் இந்த விதியில் இருந்து தப்பவில்லை. உடல் எடைக் கூடியது, காதல் பிரச்சினை என இந்தப் 16 வருட திரை வாழ்க்கையில் அவர் பலமுறை காணாமல் போகும் சூழல் ஏற்பட்டது. ஆனால் அப்போதெல்லாம் முன்பு இருந்ததை விட இன்னும் ஆவேசமாக நடித்து தன் பெயரை இன்னமும் மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தார் நயன்.
நயனை மக்கள் ’பெண் சூப்பர் ஸ்டார்’ என அழைக்க ஒரு காரணம் இருக்கிறது. நாயகர்களுக்கு மட்டுமே ஹீரோயிசம் என்ற கருத்தை உடைத்தவர்களில் நயனும் ஒருவர். இதற்கு முன்னர் விஜயசாந்திக்கும் இதே போல் பட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது திரைப்பயணம் அரசியல் பக்கம் திரும்பியதால், தொடர்ந்து அவரால் நடிக்க முடியவில்லை.
ஆனால் நயன் அப்படியில்லை தன் சொந்தப் பிரச்சினைகள் சினிமா வாழ்க்கையைப் பாதிக்காத வண்ணம் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். நாயகிகளை மையமாகக் கொண்ட கதைகளில் ஒருபுறம் நடித்தாலும், ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
இளம் ஹீரோக்களுடன் மட்டும் தான் நடிப்பேன் என்ற வரையறையெல்லாம் எதுவும் வைத்துக் கொள்ளாமல், கதையில் தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் நாயகர்களைப் பற்றி கவலைப்படாமல் நடிப்பதும் நயனின் வெற்றிக்கு ஒரு காரணம். ’கோலமாவு கோகிலா’ படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததே இதற்கு நல்ல உதாரணம்.
நயன்தாரா வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடங்கள் பல. ஹீரோக்களின் ஆதிக்கம் மிகுந்த தமிழ் சினிமாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக நாயகியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நயன். முன்னணி நாயகியாகவும், பல நாயகர்களுக்கு இணையான வர்த்தகம் மற்றும் ரசிகர் வட்டத்தை உடையவராகவும் விளங்குகிறார். அதனாலேயே இப்போதும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் முதல் சாய்ஸாக நயனே இருக்கிறார்.
சக்சஸ் வருகிறது என்றால் கூடவே சர்ச்சைகளும் தொடரத்தானே செய்யும். அதுபோலத் தான் சிம்புவுடன் காதல், பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்றது என சொந்த வாழ்க்கையில் பல சோகங்களைச் சந்தித்தார் நயன். அதனால் தீவிர மன அழுத்தத்திற்கும் ஆளானார். ஆனால் தன் சொந்த வாழ்க்கை நடிப்பை பாதிக்காதவாறு அதில் இருந்து அவர் மீண்டு வந்த விதம் பாராட்டப்பட வேண்டியது.
சினிமா வரலாற்றுப் பக்கங்களில் பெரும்பாலும் பல நாயகிகளின் கேரியரை வயது அல்லது காதல்/திருமணம் தான் முடித்து வைத்திருக்கும். ஆனால் இந்த விதியையும் தன் சொந்த வாழ்க்கைச் சம்பவங்களால் உடைத்தெறிந்தார் நயன். 35 வயதாகியும் இன்றும் இளம் மற்றும் முன்னணி நாயகர்களின் ஆஸ்தான நாயகியாகவே வலம் வருகிறார்.
அவரது கால்ஷீட்டிற்காக கோடிகளில் கொட்டித்தர தயாரிப்பாளர்களும் தயாராகவே உள்ளனர். வயதுகூட கூட அவரது அழகும், சம்பளமும் உயர்ந்து கொண்டே தான் போகிறது என்றே கூறலாம். தற்போது ஒப்பந்தமாகியுள்ள ’மூக்குத்தி அம்மன்’ படத்திற்காக ரூ. 7 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி என்பதெல்லாம் எப்போதும் நடிகர்களுக்குத் தான் வெற்றியாக அமையும். தற்போது அதனை சில நடிகைகளும் மாற்றி வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் நயன். கிட்டத்தட்ட அவரது திரைவாழ்வு முடிந்துவிட்டது என்று எண்ணப்பட்டபோது ’பில்லா’ படத்தில் யாருமே எதிர்பாராத வண்ணம் எடையைக் குறைத்து செம ஸ்லிம்மாகவும், ஸ்டைலிஷாகவும் ரீ-எண்ட்ரி கொடுத்து அசர வைத்தார். அந்த வகையில் நயன்தாரா ஒரு தனித்துவமான நாயகிதான்.
தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாகவும் நயன் இருந்து வருகிறார். தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் நயனுக்கென தனி மார்க்கெட் இருக்கிறது.
தொழில் வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருப்பவர் நயன். அதனால் தான் சிம்புவுடனான உறவு தனக்கு கெட்டப்பெயரை வாங்கித்தந்த போதும், மீண்டும் அவருடன் ’இது நம்ம ஆளு’ படத்தில் துணிச்சலாக நடித்தார். அந்தத் தெளிவும் ஆளுமையும் இன்றைய பெண்களுக்கு ஒரு பெரிய பாடம் என்றால் மிகையில்லை.
நிஜ வாழ்க்கையைப் போலவே திரையிலும் தன்னைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் பற்றி தெளிவான சிந்தனை உண்டு நயனுக்கு. எப்படிப்பட்ட முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு தரப்படும் முக்கியத்துவத்தை அறிந்தே அதில் நடிக்க சம்மதிப்பது நயனின் ஸ்டைல். விஸ்வாசம் போன்ற படங்கள் அதற்கு நல்ல உதாரணம்.
தமிழில் ஓரளவு பேர் வாங்கி விட்டாலே அடுத்து நடிகைகளின் கனவு பாலிவுட்டாகத்தான் இருக்கும். ஆனால் நயனோ தனக்கு தென்னிந்தியாவே போதும் என இங்கேயே கவனம் செலுத்தி வருகிறார். இதுவே அவர் ’லேடி சூப்பர்ஸ்டார்’ பட்டம் வாங்க ஒரு காரணம். ஒருவேளை அவர் அகலக்கால் வைத்திருந்தால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போயிருக்கும் வாய்ப்புகளும் அதிகம். இதற்கு பல நடிகைகளை உதாரணமாகக் கூறலாம்.
அன்பிற்கு எப்போதுமே நயன் அடிமைதான். இதனை அவரது பல செய்கைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஷாரூக்கின் ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு வந்தபோது அதை மறுத்தவர், ’எதிர்நீச்சல்’ படத்தில் தனுஷ் நட்பிற்காக ஒரு பாடலில் ஆடினார்.
பிறகு, இனி பெரிய நடிகர்களின் படம் என்றாலும் சிறிய பாத்திரங்களில் நடிப்பதில்லை என முடிவெடித்தவர், அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களிலும் அவர்களுக்கு இணையான பாத்திரங்களில் நடித்தார். அது தவிர மாயா, டோரா, அறம், கோகோ, இமைக்கா நொடிகள், ஐரா என தன்னை மையப்படுத்திய படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.
ஒவ்வொரு படத்திலும் நயன்தாராவின் கதாபாத்திரம் மட்டுமல்லாது அவரது தோற்றம், உடை என ஒவ்வொன்றும் அவரது ஆளுமையை வெளிப்படுத்தின.
நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்திற்கு, சென்னையில் முதல் நாள் அதிகாலை ஐந்து மணி காட்சி திரையிடப்பட்டது. நடிகையை மையப்படுத்திய படமொன்றிற்கு இப்படி முதல் அதிகாலை காட்சி போடப்பட்டது நயனின் வெற்றிக்கு ஒரு சான்று.
மனித நேயத்திலும் நயனை விஞ்ச யாருமே இல்லை. 'வில்லு’ படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென அங்குள்ள ஒரு டெக்னீஷியனுக்கு இதயவலி வந்துவிட துடிதுடித்துப் போனார் நயன். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அவரைச் சேர்த்து சிகிச்சைக்கான முழுப்பணத்தை தானே கட்டி, அவரது உயிரை காப்பாற்றினார்.
தனக்கு உதவியாக இருந்து அழகுபடுத்தும் ஒரு உதவியாளருக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரிலுள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஃப்ளாட்டை இலவசமாய் வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே ஊடகங்களில் இருந்து விலகி இருக்க விரும்புவர் நயன். ஒருமுறை தனது பேட்டி தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டதால் இனி யாருக்கும் பேட்டியே தருவதில்லை என்பதில் கறாராக இருந்து வருகிறார். சமீபத்தில் மட்டும் வோக் பத்திரிகைக்காகவும், ரேடியோ ஒன்றிற்காகவும் தனது முடிவை சற்று மாற்றிக் கொண்டார்.
தன் பட புரொமோஷன்களில் அவர் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. ஆனால் அதையெல்லாம் காரணமாகக் கொண்டு அவரை சினிமா ரசிகர்கள் ஒதுக்குவதில்லை. திரையில் அவரது கதாபாத்திரங்கள் பலருக்கு ஊக்கமருந்தாக அமைந்து விடுகிறது. நயனும்; மாற்றுத்திறனாளி வேடமாகட்டும், சமூகத்தை மாற்றும் திறனாளி வேடமாகட்டும் அனைத்திலும் கச்சிதமாகப் பொருந்தி விடுகிறார். எந்த நடிகருடன் நடித்தாலும் அவருடன் சுலபமாக கெமிஸ்ட்ரியை கொண்டு வந்து விடுபவர் என்ற பாராட்டும் அவருக்கு எப்போதும் உண்டு.
கொரோனா லாக்டவுன் தொடங்கியது முதல் புதுப்படங்கள் வெளிவராத நிலையில், ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மனாக அவதாரம் எடுத்துள்ளார் நயன்தாரா. ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
கதாநாயகிகள் என்றாலே காதலுக்கு அழகுப் பொம்மைகளாக, படத்தில் டூயட் ஆடும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதியை உடைத்து இன்று தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற சாதனையைப் படைத்துள்ளார் நயன்.
இன்று பிறந்தநாள் காணும் நயன் இன்னும் பல நூறு படங்களில் நடித்து, விருதுகள் பல குவித்து, குடும்ப வாழ்க்கையிலும் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம். ஹேப்பி பர்த்டே நயன்..!