உலக முதலீட்டாளர்களை தமிழ்நாடு ஸ்டார்ட்-அப்’களுடன் இணைக்கும் திட்டம் - 'Global Tamil Angels' இணையதளம் வெளியீடு!
உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள “Global Tamil Angels” இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள 'Global Tamil Angel' இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பங்குபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் 'Global Tamil Angels' என்ற இணையதள வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் குறித்த விவரங்களையும், அதில் முதலீடு செய்வது குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில், வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து நடத்திய உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டு சென்னையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள Global Tamil Angels (www.tamilangels.fund) இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோ, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தலைவர் பாலா சுவாமிநாதன், வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தொழில் முனைவோர் அமைப்பின் தலைவர் கணபதி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய முதல்வர், புத்தொழில் சார்ந்த செயல்பாட்டுக்கான ’லிடர்’ (leader) அங்கீகாரத்தினை ஒன்றிய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா (Startup India) அமைப்பு நமது தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில்களுக்கான முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த ஆண்டு கிடைத்துள்ளன. இது 2021ம் ஆண்டை ஒப்பிடும்போது 70 விழுக்காடு அதிகமாகும். இந்தியாவில் புத்தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் பெங்களுரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த விழுக்காடு கடந்த ஆண்டு எதிர்மறையாக இருந்தது. அத்தகைய மந்தமான பொருளாதாரச் சூழலிலும் தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது,” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன், முதலீடுகளை எதிர்நோக்கும் புத்தொழில் நிறுவனங்களையும் (Startup), தொழிலில் முதலீடு செய்ய காத்திருக்கும் சக்தி வாய்ந்த தனிநபர்களையும் இணைக்கும் தளமாகும்.
அதோடு, முதலீட்டாளர்களுக்கு சட்ட ரீதியான வழிகாட்டுதல்களை தரும் ஆலோசர்கள், புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை உலகச் சந்தைக்கு எடுத்துச் செல்ல உதவும் வழிகாட்டிகள் ஆகியோரை இணைக்கும் தளமாகவும் உலகத் தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர் தளம் விளங்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
உலகத் தமிழ் ஏஞ்சல் தளத்தின் பயன்கள்:
உலகத் தமிழ் ஏஞ்சல் தளத்தில் முதலீட்டாளர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டாலே போதும், மின்சார வாகனம், சுகாதார மேம்பாடு, மென்பொருள் தயாரிப்பு, வேளாண் மற்றும் உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.
புத்தொழில் நிறுவனங்களின் (ஸ்டார்ட்அப்) இலக்கு வருவாய் மாதிரி போன்ற தகவல்களை தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க நிறுவனம் (StartupTN) சரிபார்த்த பின்னரே இணையத்தில் வெளியிடப்படும்.
இதன்மூலம், முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்ய விரும்பும் துறைகளின் அடிப்படையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை நன்கு ஆராய்ந்து முதலீடு செய்யலாம்.
ரூ.16.50 கோடி முதலீடு:
உலகத் தமிழ் ஏஞ்சல் தளத்தை தொடங்கி வைக்கும் இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், தமிழ்நாட்டை சேர்ந்த புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய, அமெரிக்க வாழ் தமிழக முதலீட்டாளர்கள் வரும் டிசம்பர் 2023-க்குள் அமெரிக்க தமிழ் நிதியம் (ATF) 16.50 கோடி ரூபாய் (சுமார் $2.00 மில்லியன்) முதலீடுகளை வழங்குவதற்கான விருப்ப கடிதத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
“இன்று தொடங்கப்படும் இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக ’அமெரிக்கத் தமிழ் நிதியம்’ என்ற அமெரிக்க வாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு மூலமாக 16 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டின் தொடக்கநிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது, என்ற செய்தி பெரும் மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த முன்னெடுப்பில் ஈடுபட்டிருக்கக்கூடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக்கூறினார்.
அமெரிக்க தமிழ் நிதியத்தின் நிர்வாகக் குழு, மென்பொருள் துறையில் குறிப்பாக மென்பொருள் சேவை (Software As A Service), செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence), இயந்திரங்கள் குறித்த கற்றல் (Machine Learning) மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தனர்.