தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை: மாற்று வகைகள் என்னென்ன?
தமிழகத்தில் ஜனவரி 1 முதல் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த அரசு தடைவிதித்தது. இதனையொட்டி அனைத்து சிறு மற்றும் பெரு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளனர்.
பல நாள் பழக்கத்தை உடனே மாற்றுவது சற்று சிரமம் என்றாலும் பழங்காலம் போல் மஞ்சப் பை, கட்டைப் பை, துணிப் பை, ஓலைப் பெட்டி, தாமரை இலை ஆகியவை மீண்டும் புழகத்திற்கு வந்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் வகையில் வீட்டில் இருந்தே பாத்திரங்களையும் பைகளையும் கடைக்கு எடுத்து வரும் மக்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகிறது சில உணவகங்கள் மற்றும் கடைகள்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்:
உணவகத்தில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பேப்பர், டப்பாக்கள், தட்டுகள், கவர்கள், பிளாஸ்டிக் தேனீர் குவளைகள், குளிர்பான குவளைகள், ஸ்டிரா, கவர்கள் என அனைத்து பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கும் அரசு தடை விதித்துள்ளது. சிறு வியாபாரமான மளிகைக் கடையில் துவங்கி துணிக் கடை போன்ற பெரு வியாபரங்கள் வரை அனைத்திலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்து.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் மற்றும் வழிகள்:
1. துணி, காகிதம் மற்றும் சணல் பைகள்
தினமும் பால், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு வீட்டில் இருந்தே துணி அல்லது சணல் பைகளை எடுத்துச் செல்லலாம். தற்பொழுது சில வியாபாரிகள் துணி மற்றும் பேப்பர் பைகளை வழங்க கூடுதல் தொகை வசூலிப்பதால் வீட்டில் இருந்து எடுத்துச் செல்வதே சிறந்த வழி.
பல சமூக நிறுவனங்கள் சுற்றுப்புறத்தை பாதுகாக்க தடை விதிப்புக்கு முன்னரே துணிப் பைகளை விற்பனை செய்யத் துவங்கிவிட்டனர். மறுசுழற்சி செய்யப்பட்ட துணி பைகள், ஆர்கானிக் பைகள் என பல வகைகள் இப்பொழுது சந்தையில் இருக்கின்றன.
“பிளாஸ்டிக் தடை பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது மட்டுமல்ல; ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி எரியும் நம் பழக்கத்தை மாற்றி நீடித்த, பழுதுபார்க்கக்கூடிய, சூழலுக்கு தகுந்த பொருட்களை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதே,”
என்கிறார் துணி பைகளை தயார் செயயும் ’யெல்லோ பேக்’ (Yellow Bag) நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ணன்.
2. வாழை இலை, தாமரை இலை, ஓலைப் பெட்டி, பாக்கு மட்டைகள் மற்றும் சில்வர் ஃபாயில்கள்
உணவகங்களில் பட்டர் பேப்பர் வைத்து உணவு வழங்குவதற்கு பதில் தாமரை இலைகளை பயன்படுத்தலாம். மேலும் பேப்பர் தட்டு குவளைகளுக்கு பதிலாக பாக்கு மட்டையில் செய்யப்பட்ட தட்டு குவளைகளை உபயோகிக்கலாம்.
அந்த காலம் போல பூக்கள் கட்ட இலைகளையும் அல்வா போன்ற இனிப்புகளை வழங்க ஓலைப் பெட்டிகளும் சிறு வியாபாரிகளிடம் புழக்கத்திற்கு வந்துள்ளது. பெரும் நிறுவனங்கள் அட்டைப் பெட்டிகளை பயன் படுத்துகின்றனர்.
3. பேப்பர் ஸ்டிரா மற்றும் சாப்பிடக்கூடிய ஸ்பூன்கள்
குளிர்பானங்களுக்கு பேப்பரால் செய்யப்பட்ட ஸ்டிராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல பார்சலில் வழங்கப்படும் பிளாஸ்டிக் ஸ்பூன்களுக்கு பதில் மர ஸ்பூன்கள் மற்றும் உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ஸ்பூன்களும் சந்தையில் வந்துள்ளது.
பிளாஸ்டிக் நிலத்தை மட்டுமின்றி கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களையும் பாதிக்கிறது. அரசாங்கத்துடன் ஒத்ததுழைத்து இனி வீட்டில் இருந்து பைகளை கடை வீதிகளுக்கு எடுத்துச் செல்வோம். இதை மக்கள் இடத்தில் உணர்த்தும் வகையில் சமூக வலைதள பக்கங்கள் சில விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்.
எகோ கிரீன் அறக்கட்டளை என்னும் சமூக அமைப்பு பல நாட்களாக பிளாஸ்டிக்கை எதிர்த்து பிளாஸ்டிற்கு மாறான பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. அவ்வமைப்பும் STOP USING OTP (OTP-One Time Plastic) என்னும் வலைதளத்தை துவங்கி #TNavoidotp #stopusingotp என ஹாஷ்டேகுகளை டிரென்ட் செய்து வருகின்றது. நாமும் இந்த சமூக தீர்மானத்தில் பங்கேற்று பிளாஸ்டிக்கை ஒழிப்போம்.