அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரரை எதிர்கொண்ட இளம் டென்னிஸ் வீரர்!
சுமீத் நாகல் ரோஜர் ஃபெடரரை எதிர்கொண்டு தோல்வியடைந்திருந்தாலும் ஜஜ்ஜரைச் சேர்ந்த இந்த இளம் வீரர் தொடர்ந்து வெகு தூரம் பயணித்து தற்போது ஜெர்மனியின் நென்செல் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு வீரர் கடவுளாகவே கருதப்படுவார். கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கள், கோல்ஃப் விளையாட்டில் டைகர் வுட்ஸ், கால்பந்து விளையாட்டில் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரைக் குறிப்பிடலாம். டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்தவரை 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரெர் கடவுளாக பார்க்கப்படுகிறார்.
இவர்களுக்கு எதிராகவோ அல்லது இவர்களுடனோ விளையாடவேண்டும் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவு. அத்தகைய கனவு நனவான அதிர்ஷ்ட்டசாலிகளில் ஒருவர்தான் 22 வயதான சுமீத் நாகல். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு அறிமுகமான இவர் ரோஜர் ஃபெடரரை எதிர்கொண்டார். பிரபல விளையாட்டு வீரரை எதிர்த்து இவர் திறம்பட விளையாடியது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்திய டென்னிஸ் வீரரான இவர் முதல் சுற்றில் 6-4 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்றார். எனினும் ஸ்விட்சர்லாந்து வீரர் சிறப்பாக விளையாடி 4-6, 6-1, 6-2, 6-4 என்கிற செட் கணக்கில் போட்டியில் வென்றார்.
சுமீத் தோல்வியடைந்திருப்பினும் கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற ஐந்தாவது இந்தியர் ஆவார் என First Post தெரிவிக்கிறது.
எனினும் யூ.எஸ்.டி.ஏ பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் மையத்தை நோக்கிய பயணம் இந்த இளம் வீரருக்கு எளிதாக இருக்கவில்லை. ஜஜ்ஜர் பகுதியைச் சேர்ந்த சுமீத்திற்கு எட்டு வயதிருக்கும்போது விளையாட்டு மீதான ஆர்வம் தொடங்கியது. எனினும் அந்த சமயத்தில் இவருக்கு கிரிக்கெட் மீதே அதிக ஈடுபாடு இருந்தது.
இவரது அப்பா இவரை உள்ளூர் விளையாட்டு கிளப்பிற்கு அழைத்துச் சென்றபோது இவரது ஆர்வம் மாறியது. எட்டு வயதான சுமித் டென்னிஸ் மைதானத்தைக் கண்டு அதிசயப்பட்டார். ATP Tour உடனான உரையாடலில் அவர் கூறும்போது,
”முதல் நாள் கிளப் உறுப்பினர் ஒருவருடன் விளையாடினேன். ஒரு புள்ளி எடுத்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. 40 நிமிடங்கள் கழித்து மற்றொரு புள்ளி எடுத்தேன். மிகவும் உற்சாகமானேன். ஆறு மாதங்கள் பல மணி நேர பயிற்சிக்குப் பிறகு சிறப்பாக விளையாட ஆரம்பித்தேன். என்னுடைய அப்பா திறமையைக் காட்டிலும் நேரத்திற்கு முக்கியம் கொடுக்கவேண்டும் என்று நம்புபவர். எட்டு வயதில் டென்னிஸ் விளையாடப் பயிற்சி பெறுவதே தாமதமான தொடக்கம்,” என்றார்.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரபல டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதியின் அகாடெமியில் பங்கேற்பதற்கான தேர்வு நடைபெற்றது. இந்த வாய்ப்பு குறித்து கேள்விப்பட்டதும் சுமீத் புதுடெல்லி சென்றார்.
”மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். மகேஷிடம் சென்று 'என்னுடைய ஆட்டத்தை பார்க்க வரமுடியுமா?' என்று கேட்டேன். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவரது கையைப் பிடித்துக்கொண்டு என்னுடைய விளையாட்டை பார்க்க அழைத்தேன். அதன் பிறகு என்னைத் தேர்வு செய்வதாக என்னுடைய குடும்பத்திடம் தெரிவித்தார்,” என்று கூறியதாக ATP Tour குறிப்பிடுகிறது.
அந்தத் தருணம் முதல் சுமீத்தின் வாழ்க்கை மாறிப்போனது. ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தபோதும் இதில் தேர்வான மூன்று மாணவர்களின் இவரும் ஒருவர். அதன் பிறகு 2012-ம் ஆண்டு வரை இந்திய டென்னிஸ் நட்சத்திரத்தின்கீழ் பயிற்சி பெற்றார்.
பின்னர் சுமித் கனடா சென்றார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனிக்கு மாற்றலானார். மரியானோ டெல்ஃபினோவின் கீழ் 2014 முதல் 2018 வரை பயிற்சி பெற்றார். தற்போது ஜெர்மனியில் உள்ள நென்செல் அகாடமியில் முதன்மை பயிற்சியாளர் சஸ்சா நென்செல்கீழ் பயிற்சிபெற்று வருகிறார் என First Post தெரிவிக்கிறது.
இவர் விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர்கள் போட்டியில் வியட்னாமிய வீரரான ஹோவாங் நாம் உடன் இணைந்து ரெய்லி ஓபெல்கா, அகிரா சாண்டிலா ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய தருணம் குறித்து அவர் விவரிக்கும்போது,
“அந்த ஒரு வரிதான் என்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வார்த்தைகளை அவரிடம் சொல்லாமல் போயிருந்தால் இன்று இந்த இடத்தில் இருந்திருக்கமுடியாது. என்னுடைய இளம் பருவத்தில் என்னுடைய குடும்பத்தால் எனக்கு நிதி ஆதரவு அளிக்கமுடியவில்லை. நான் துணிந்து அவரை அணுகாமல் போயிருந்தால் என்னால் டென்னிஸ் விளையாடி இன்று இந்த நிலையை எட்டமுடியாமல் போயிருக்கும். சிறு வயதில் நான் துணிச்சலாக செயல்பட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA