அரசியல் லீடர்களை மாஸ் ஆக்கும் ‘பிராண்ட் மார்கெட்டிங்’ல் முத்திரை பதிக்கும் சாமுவேல் மேத்யூ!

By Gajalakshmi Mahalingam|10th Jul 2019
டிஜிட்டலுக்கு ஏற்ப மாறி வரும் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பொலிடிக்கல் பிராண்ட் மார்க்கெட்டிங் செய்து வரும் சாமுவேல் மேத்யூ. பொலிடிகல் பிராண்ட் மார்கெட்டிங் என்றால் என்ன?
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இன்றைய சமூகவலைதள உலகில் ‘வைரல்’ என்ற வார்த்தையை கேட்டும் கடந்தும் செல்லாமல் ஒரு நாள் கூட இல்லை என்றே கூறலாம். ஒரு செய்தியோ, வீடியோவோ ஏதோ ஒன்று ஒவ்வொரு நாளும் வைரலாகிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த வைரலின் பின்னணியில் தனி நபர் ஷேரிங் மட்டும் காரணமல்ல அவற்றை வைரலாக்குவதற்கென்றே பல முறையான குழுக்கள் இருக்கிறது என்று இங்கு எத்தனைப் பேருக்கு தெரியும்?


தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு தொலைக்காட்சி சேனல் இருப்பது போல இப்போது ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தகவல்தொழில்நுட்பப் பிரிவு இருக்கிறது. இந்தத் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு ஒரு விஷயத்தை எப்படி வைரலாக்குவது என்று ஐடியாக்களை அள்ளித் தந்து பிரபலப்படுத்தும் பணியை செய்து வருகின்றன சில பிராண்டிங் நிறுவனங்கள்.

Sam

’7 miles per second' நிறுவனர் சாமுவேல் மேத்யூ

தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான கட்சிகள் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றாற் போல மக்களிடம் தங்களை முன்னிலை செய்து கொள்ள தனித்தனியே அவரவர் வசதிக்கு ஏற்ப பிராண்டிங் நிறுவனங்களிடம் ஆலோசனைகள் பெற்று தங்களது அரசியல் செல்வாக்கை கூட்டிக் கொள்கின்றனர். வடஇந்தியாவில் பிரபலமடைந்து வரும் பிரசாந்த் கிஷோர் போல தமிழகத்தில் இளம் வயதிலேயே பிராண்ட் மார்க்கெட்டிங் துறையில் கால்பதித்து வளர்ச்சி கண்டு தன்னுடைய பிராண்ட் மார்க்கெட்டிங் நிறுவனம் ’7மைல்ஸ் பர் செகன்ட்’ (7 miles per second) மூலம் பல வெற்றிப் பாதை அமைத்துக் கொண்டுள்ளார் சாமுவேல் மாத்யூ.  


சுறுசுறுப்பாக இயங்கும் தேனியைப் போல விறுவிறுவென பேசத் தொடங்கிய 7 miles per second-ன் தலைமை செயல் அதிகாரி சாமுவேல், தான் பிராண்டிங் துறைக்கு எப்படி வந்தார் என பரபரவென பேசத் தொடங்கினார்.

“நான் அக்மார்க் சென்னைப் பையன். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு என எல்லாமே சிங்காரச் சென்னையில் தான். சைக்காலஜி படிக்க விருப்பம் என்பதால் அதையே பட்டப்படிப்பாக எடுத்துப் படித்தேன். படிப்பை முடித்த உடனேயே கேம்பஸ் இன்டர்வியூவில் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் சேனலான சன் குழுமத்தில் வேலை கிடைத்தது. பிரபலமான நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் என்பதால் உடனேயே பணியில் சேர்ந்தேன்.

”சன் குழுமத்தில் இருந்து புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கே டிவியின் மார்க்கெட்டிங் பிரிவில் நானும் ஒருவராக இருந்தேன். அதன் பின்னர் பிராண்ட் மார்க்கெட்டிங் துறையில் எனக்கு மிகுந்த ஆர்வம் வந்துவிட்டது,” என்று தன் ஆரம்பக்கட்டத்தை பகிர்ந்தார்.

அந்த சமயத்தில் வங்கிகளில் இருந்து எனக்கு பணி வாய்ப்பு வந்தது. எச்டிஎஃப்சி வங்கியில் பிராண்ட் மார்க்கெட்டிங் மேலாளராக பணி கிடைத்தது. முதலில் தெற்கு மண்டலத்தில் இந்த வங்கியின் சேவைகளை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்ற திட்டமிடல்களைச் செய்தேன், அது வெற்றியைத் தந்தது. 2005 முதல் 2012 வரை சுமார் 7 ஆண்டுகள் இந்த வங்கியில் பணியாற்றினேன், நான் வேலையை ராஜினாமா செய்யும் போது தெற்கு, கிழக்கு, வடக்கு என 3 மண்டலங்களுக்கு சேர்ந்து பிராண்ட் மார்க்கெட்டிங் மேலாளராக இருந்தேன் என பெருமையோடு சொல்கிறார் மேத்யூ.


பிராண்ட் மார்க்கெட்டிங் துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் கூடவே மக்களின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ள உதவும் சைக்காலஜி படிப்பு. தான் சாதிக்க நினைக்கும் துறையில் மேத்யூ மேலும் வளர்ச்சி பெற 2014ம் ஆண்டில் ’7 மைல்ஸ் பர் செகன்ட்’ என்ற பிராண்ட் மார்க்கெட்டிங் நிறுவனத்தை தொடங்கி தனது தொழில்முனைவுப் பாதைக்கு பிள்ளையார்சுழி போட்டுள்ளார்.

“வங்கித்துறை மற்றும் காப்பீட்டுத் துறையில் கிரியேட்டிவ்வாக செயல்பட முடியாது. வங்கிகள் தனக்கென தனிக் கொள்கைகளை வைத்துள்ளன எனவே என்னுடைய திறமைகளை அங்கே நிரூபிக்க முடியாததால் நான் நினைத்தவற்றை நான் விரும்பும் துறையில் செய்வதற்காகவே என் சொந்த நிறுவனத்தை நிறுவினேன்,” என்று சொல்கிறார்.
Mathew

அரசியல் பிராண்ட் மார்கெட்டிங் பக்கம் வந்தது எப்படி?

தொடக்கத்தில் கல்வி நிறுவனங்கள், தனி நபர்கள் என பலருக்கும் பிராண்ட் மார்க்கெட்டிங் செய்து வந்தோம். 2016 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் பிரதான திராவிட கட்சிக்காக பிராண்ட் மார்க்கெட்டிங் செய்ய களமிறங்கினோம். கட்சிகளுக்கு அல்லது அரசியல் கட்சிகளுக்கு பிராண்ட் மார்க்கெட்டிங் செய்வதென்றால் மக்களின் மனநிலை என்ன? மக்களின் எதிர்பார்ப்பு என்ன? போன்றவற்றை களத்தில் இருந்து தகவல்கள் திரட்டி நாங்கள் பிராண்ட் செய்யும் கட்சி எப்படி மக்களை அணுக வேண்டும், எந்த பிரச்னையை முன்நிறுத்தினால் மக்கள் செல்வாக்கை பெற முடியும் என்பன போன்ற நுணுக்கமான அம்சங்களை எடுத்துக்கூறி அவர்களின் செல்வாக்கை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தி வெற்றி வாய்ப்பை பெற்றுத்தர உதவுவதே எங்களது பணி.

”அந்தத் தேர்தலில் எங்களது கணிப்புகள் துல்லியமாக இருந்தது. பிராண்ட் மார்க்கெட்டிங் மீதான ஆர்வம் பொலிடிக்கல் பிராண்ட் மார்க்கெட்டிங்காக மாறிய தருணம் இதுவே,” என்று நம்முடன் பகிர்ந்து கொண்டார் மேத்யூ.

2018ம் ஆண்டு மலேசியத் தேர்தலில் 30 லட்சம் இந்திய வாக்காளர்களின் வாக்குகளை பெறுவதற்காக பிரதமருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை அமைத்துக் கொடுத்துள்ளார் மேத்யூ. தொடர்ந்து 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்சிக்காக தேர்தல் பிரச்சார யுக்திகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இவர்.

“எல்லாத் தேர்தல்களிலும் நாங்கள் பிராண்ட் செய்தவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நாங்கள் கள நிலவரம் என்ன என்பதை துல்லியமாக எங்களது கிளையன்ட்களுக்கு சொல்லிவிடுவோம். ஒரு கட்சியையோ, அரசியல் கட்சியை சேர்ந்தவரையோ பிரபலப்படுத்துவதற்கு முன்னர் கள ஆராய்ச்சி செய்து மக்களின் மனநிலை என்ன என்பதை பிரதிபலிப்போம். அதுமட்டுமின்றி இந்தத் தேர்தலில் இவ்வளவு வாக்குகள் தான் பெற முடியும் என்று நாங்கள் அளித்த தகவலும் சரியாக இருந்தது. இதுவே எங்கள் நிறுவனத்தின் பலம் என்ன என்பதை பலருக்கும் புரிய வைத்தது,” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் மேத்யூ.

நுகர்வுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், தமிழகத்தில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய தனியார் ஆலை என பலர் இவர்களது கிளையன்ட்கள். சர்ச்சைகளால் மதிப்பிழந்த சில நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் விதமான ஒரு பிராண்ட்டாக கொண்டு சேர்ப்பதை சிறப்புற செய்து வருகிறது மேத்யூவின் 7 மைல்ஸ் பர் செகன்ட்.

ஒரு பிராண்டை எந்த வழியாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது எப்படி அறிமுகம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என ஆராய்ந்து அதற்கு ஏற்ப கருத்து உள்ளடக்கங்களை செய்து தகவல்களாகவோ, வீடியோக்களாகவோ தயார் செய்து அந்த பிராண்டிற்கு ஏற்ப விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

samuel mathew

2014ம் ஆண்டு 7 மைல்ஸ் தொடங்கப்பட்ட போது எங்களது சேவையை பெற்ற நிறுவனங்கள், இன்றும் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் எங்களுடனேயே இணைந்து செயல்படுவதே எங்களது வெற்றிக்கான மந்திரம் என நம்புவதாகக் கூறுகிறார் மேத்யூ.


பிராண்டிங்கிற்காக ஒருவர் எங்களை அணுகும் போது முதலில் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை பெற்று வைத்துக் கொள்வோம். அவர்களின் போட்டியாளர்கள் யார், மக்கள் மத்தியில் அவருக்கு என்ன மதிப்பு இருப்பதாக அவர் நினைக்கிறார் என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும். பின்னர் அந்த நபரின் கணிப்பும் மக்களின் மனதில் அவர் பெற்றுள்ள மதிப்பும் சரிதானா என்பதை களஆய்வு செய்து சேகரிக்கப்படும் தகவல்களை வைத்து அதற்கேற்ப மாற்றங்களை செய்து மக்கள் மத்தியில் செல்வாக்குடையவராக மாற்றுவதே பிராண்டிங்கின் முக்கிய வேலை.

எந்தத் தொழில்முனைவராக இருந்தாலும் அவருக்கு இருக்கும் முதல் சவாலே தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதே.

“எந்த ஒரு கிளையன்டை அணுகினாலும் இந்த எண்ணம் வித்தியாசமானதாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள். ஆனால் குறைந்த செலவில் அதனை செய்து கொடுக்கச் சொல்லும் போது இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவோம், ஏனெனில் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது,” எனினும் இந்த சவால்களையெல்லாம் கடந்து தான் இன்று இப்படி இத் துறையில் உயர்ந்துள்ளோம்,” என்கிறார் மேத்யூ.

கிரியேட்டிவ் டீம், வடிவமைப்பாளர்கள் என 19 முழுநேர படைப்பாளிகள் மற்றும் பல்வேறு பகுதிநேர கற்பனையாளர்களின் திறமைகளை ஒட்டுமொத்தமாக உள்வாங்கி பல்வேறு அழகிய பிராண்ட்களையும், தனிநபர்களுக்கென ஒரு பிளாட்பார்ம் அமைத்துத் தருகிறது 7 மைல்ஸ் பர் செகன்ட்.


மேத்யூவின் அரசியல்+மார்க்கெட்டிங் ஆர்வம் பொலிட்டிகல் பிராண்ட் மார்க்கெட்டிங் நோக்கி இழுத்தது. தற்போது சுழன்றடித்து தமிழகம், வட இந்தியா, மலேசியா என கடல்கடந்தும் இதைச் செய்து நற்பெயரை பெற்றிருக்கிறார். தேர்தல் நேரத்தில் மக்களின் பல்ஸ் என்ன என்பதை அக்கக்காக பிரித்து மேயும் இவரின் அறிவாற்றலைக் கொண்டு எதிர்காலத்தில் வணிக நோக்கத்திற்காக என்று செயல்படாமல் பொலிட்டிகல் பிராண்ட் மார்க்கெட்டிங் மூலம் மக்களிடத்தில் சரியான வேட்பாளரை கொண்டு செல்ல தான் துணையாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

team

7 மைல்ஸ் பர் செகன்ட் குழு

”எப்போதுமே ஒரு செயலைச் செய்ய முடிவெடுத்த பின்னர் யோசிக்கக் கூடாது. ’Take a decision then make it right’ ஒரு முடிவை எடுக்கலாமா வேண்டாமா என்பதை யோசித்தே நாட்களை கடத்தாமல் எந்த செயலாக இருந்தாலும் துணிந்து முடிவெடுத்து விட்டு பின்னர் அது சரியான முடிவு தான் என்பதை நிரூபிக்கும் விதமாக அதற்கேற்ப நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்,” என்கிறார் சாமுவேல் மேத்யூ.

குறும்பட இயக்குனர், புகைப்படக்கலைஞர், சுயமுன்னேற்றப் பேச்சாளர், உளவியல் ரீதியாக மக்களின் மனநிலையை அறியக்கூடியவர் இப்படி பல திறமைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு புதிய எண்ணங்களோடு தனது இலக்கை நோக்கி பயணிக்கும் சாமுவேல், தமிழகத்தின் சிறந்த தொழில்முனைவராக நிச்சயம் அடையாளம் காட்டப்படுவார்.