மூடல் வரை சென்ற நிறுவனம், ஃப்னீக்ஸ் பறவை போல் மீண்டெழுந்த ஊக்கமிகு கதை!
நஷ்டம் ஏற்பட்டதால் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்த சென்னை தொழில்முனை நிறுவனம் ‘ஜீனி’, மீண்டும் தன் வெற்றிப் பயணத்தை தொடங்கியது எப்படி?
நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு தான் பயணிக்கிறோம். சில சிகரத்தை தொடும், சில நாம் நினைத்த இலக்கை அடைய முடியாமல் தோல்வியில் முடியும். அத்தகையச் சூழலை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதே நம் அடுத்த கட்ட வளர்ச்சியை தீர்மானிக்கும்.
இதை செவ்வனே கையாண்டு, மீண்டும் வெற்றி பயணத்தை துவங்கியுள்ளது சென்னையை சேர்ந்த தொழில்முனைவு நிறுவனம் ஜீனி. இளம் தொழில்முனைவர்கள் பார்த் ஷா, ராகேஷ் மணி மற்றும் ஸ்ரீகேஷ் க்ரிஷ்னன் தங்களது தொழில்முனை பயணத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
முதலீடின்றி போதிய இலாபமின்றி
"நல்ல வரவேற்பைப் பெற்று செயல்பட்ட போதும், ஒரு கட்டத்தில் இலாபம் இல்லாமல் போனதால், ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மூட முடிவு செய்தோம். ஆனால் எங்களின் சேவையில் நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்களுக்கு இதை முறையாக தெரிவிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்..."
என்று மார்ச் 2017 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடுகிறோம் என்று முறையாக அறிவிப்பு வெளியிட்டதாக கூறினார் ஸ்ரீகேஷ். அவர்கள் இந்த முடிவை அறிவித்த பொழுது, நாற்பது டெலிவரி ஆட்கள் ஒரு நாளைக்கு முன்னூறு ஆர்டர்களை மேற்கொண்டிருந்தினர். மூடுதல் அறிவிப்பு முடிவை மேற்கொண்ட கடைசி இரண்டு நாட்களில் சுமார் ஐநூறு ஆர்டர்கள் வரை டெலிவரி மேற்கொண்டனர்.
"வாடிக்கையாளர்களின் அன்பு ஒரு புறம் நெகிழ வைத்தாலும், எங்களை நம்பி வந்த நாற்பது டெலிவரி ஆட்களுக்கு மாற்று வேலை பெற்றுத் தருவதில் முனைப்பாக செயல்பட்டோம்," என்றார் ராகேஷ்.
அனைவருக்கும் வேலையும் பெற்றுத் தந்ததாக கூறுகிறார். அவர்களின் இந்த மனிதாபிமான அணுகுமுறை மற்றும் நிதர்சனத்தை வெகு நேர்த்தியாக கையாண்ட முறை ஆகியவை இவர்களுக்கு நன்மதிப்பை பெற்றுத்தந்தன. இதுவே அவர்களுக்கு ஒரு மாதத்திலேயே மீண்டும் செயல்படத் தேவையான முதலீட்டையும் பெற உதவியுள்ளது என்றே கூற வேண்டும்.
துவக்கம்
கல்லூரி நாட்களிலேயே சிறு அளவில் தொழில் முனைதலை வெற்றியுடன் மேற்கொண்ட இம்மூவரும், பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு இறுதி ஆண்டில் பைலட் முறையில் ’ஜீனி’ என்ற சேவையை தொடங்கினர். பூங்கொத்து, மருந்து, உணவு என்று இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்ல முடிந்த எந்த பொருளாயினும் சென்னையில் எங்கு வேண்டுமானாலும் டெலிவரி செய்யும் சேவையை அளிக்கும் நிறுவனம் ’ஜீனி’ (Genie). ஜூன் 2017 முதல் முழு வீச்சில் செயல்படத் துவங்கினர்.
"துவக்கத்தில் நுகர்வோர் சேவையை அதிகம் வழங்கினோம். லாஜிஸ்டிக்ஸ் சேவைக்கு அதிக தேவையும் வரவேற்பும் இருந்ததால், அக்டோபர் 2015 முதல் இந்த சேவையில் கவனத்தை திருப்பினோம்," என்று ஆரம்ப கட்டத்தை பகிர்ந்து கொண்டார் ஸ்ரீகேஷ்.
இதற்காக மாத சம்பளத்திற்கு டெலிவரி ஆட்களை நியமிக்கத் தொடங்கினர். மார்ச் 2016 வரை தினமும் 70 ஆர்டர்கள் வரை டெலிவரி செய்து வந்துள்ளனர். மாத செலவு அதிகமான காரணத்தினால், செயல்படும் மாடலை மாற்றியமைத்தனர். வரும் வருவாயில் 85 சதவிகிதம் டெலிவரி ஆட்களுக்கும் மீதி நிறுவனதிற்கு என்ற முடிவு தொடக்கத்தில் டெலிவரி ஆட்களுக்கு அதிருப்தியை அளித்தது. மார்ச் 2016-ல் கிட்டத்திட்ட 20 பேர் வேலையை விட்டு சென்றாலும் கொஞ்ச மாத்ததில் திரும்பி வந்துள்ளனர். இதற்கிடையில் நாளொன்றுக்கு 150 வரை ஆர்டர்கள் வரத்தொடங்கின.
ஆர்டர்களின் வளர்ச்சி உந்துதல் அளிக்க மற்றும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டி, முதலீட்டாளர்களை அணுகத் தொடங்கினர். இலாப வாய்ப்பு மீதான சந்தேகம் முதலீட்டாளர்களை திருப்தி படுத்தவில்லை. அதனால் இதற்கு மேலும் இப்படி தொடர முடியாது என்று முடிவெடுத்து மார்ச் 2017 நிறுவனத்தை மூட முடிவெடுத்தனர்.
மீண்டெழுந்து வளர்ச்சியை நோக்கி
மூடுதல் முடிவை தெரியப்படுத்திய விதம் அவர்கள் மீது கவனத்தை ஈர்த்தது என்றே கூற வேண்டும்.
"இந்த அறிவிப்பு வந்தவுடன் பல தனி நபர்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தனர். ஒரே மாதத்தில் முதலீடும் கிடைக்கப் பெற்று, மே 2017 மீண்டும் சேவையை தொடங்கினோம்,"
என்று கூறும் ஸ்ரீகேஷ், இதிலிருந்து பல படிப்பினைகளையும் கற்றுக் கொண்டதாக கூறுகிறார்.
டெலிவரி மாடலை மாற்றியமைத்ததுடன், டெலிவரி முறையை மேலும் மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தில் மேன்மை ஆகியவற்றை மேற்கொண்டதாகக் கூறினர். பழையபடி செயல்படத் துவங்க ஒரு மாதம் பிடித்ததாகவும், நம்பிக்கையை மீண்டும் வாடிக்கையாளர்களிடம் பெற்றுள்ளதாகவும் பகிர்ந்தார்
இன்னும் சில மாதங்களில் அடுத்த முதலீட்டை எதிர்பார்ப்பதாகவும், அடுத்த ஆண்டில் மற்ற நகரங்களிலும் ஜீனி சேவையை அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர் நிறுவனர்கள்.
விழுவதெல்லாம் எழுவதற்குத் தானே தவிர அழுவதற்கு அல்ல என்ற கூற்றின் படி, தோல்வியை எதிர்கொண்ட போதிலும், இந்த மூன்று இளைஞர்களும் துவண்டு விடாமல் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க, மீண்டும் வந்த வாய்ப்பை வெற்றிக்கான இலக்காக அமைத்துக் கொண்டுள்ளனர்.