பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை விவகாரம்: வலைதளத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?
பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை, பலாத்காரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை உறுதி செய்யும் விதமாக அரங்கேறியுள்ளது பதைபதைக்கும் பொள்ளாச்சி கூட்டு பாலியல் விவகாரம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூல் மூலம் கல்லூரிப் பெண்களிடம் நண்பர்களாகப் பழகி, நம்பிக்கையை சம்பாத்தித்து பின் நண்பர்களுடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் பணம் பறித்துள்ளது ஒரு கூட்டம். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து காவல் துறை நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது.
விசாரணையில் இவரை போன்று 100க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1000க்கும் மேல் ஆபாச வீடியோக்கள் உள்ளதாகவும் செய்திகள் வந்தது. அதிலிருந்து அதிர்ச்சி தரும் விதமாக ஒரு பெண்ணின் வீடியோ காட்சியும் வெளியில் வந்து சமூக வலைத்தளத்தில் பரவி இச்செய்தி மக்கள் பார்வைக்கும் வந்தது.
சமூக ஊடகங்களில் பதிவுகளை பகிரும் பொதுமக்களான நாம் செய்ய வேண்டியது என்ன? தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன?
சமூக வலைத்தளம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நம் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதும் சரியானதே. ஆனால் அதற்காக வெளியான வீடியோ, புகைப்படங்கள் மற்றும் ஆதாரமற்ற தவறான பகிர்வுகளை பகிர்வது நெறிமுறையல்ல. இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்படுமே தவிரே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. மேலும் மீண்டும் மீண்டும் அக்கொடூரக் காட்சியை பகிர்வது மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மன நிலை பாதிப்பதோடு அவரை போன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கும் பயமேற்படும்.
பொள்ளாச்சி காவல்துறை; பாதிக்கப்பட்ட மற்ற பெண்களை புகார் அளிக்க அழைப்பு விடுத்துள்ளது. இப்படி சமூக வலைதளத்தில் நாம் பகிரும் இந்த வீடியோவினால் மற்ற பெண்கள் வெளியில் வந்து புகார் அளிக்கத் தயங்குவர்.
உணர்ச்சிமிக்க செய்திகளை வலைதளத்தில் பகிரும் முன் அச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி அப்படங்களில் இடம்பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட உரிமையை மீறாமல் இருக்க, வீடியோக்களை பகிர்வதைத் தவிர்த்து, செய்திக்கான கண்டனத்தை மட்டும் தெரிவித்துக்கொள்ளலாம்.
சமூக வலைத்தளம் மூலம் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தவிர்க்க:
தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் அந்நியர்களிடம் பேசக் கூடாது, பழகக் கூடாது என நம் பெற்றோர்கள் பெரியவர்கள் கூறுவர் அந்த கோட்பாடை வலைத்தளத்திலும் பயன்படுத்துங்கள். அதாவது ஆணோ, பெண்ணோ இரு பாலினத்தைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளத்தை பயன்படுத்தும்பொழுது, நேர்முகத்தில் பின்பற்றும் அதே கட்டுப்பாடுகளை பின்பற்றலாம்.
சமூக வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ’Privacy Setting’ ஐ பயன்படுத்துவது நிச்சயம் நன்மை பயக்கும். இணையத்தில் இருக்கும் எல்லா அந்நியர்களும் நம் நண்பர்கள் அல்ல. அதே நேரம் அந்தரகப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரிட்சயமில்லாத தனிநபரிடம் பகிர்வதை தவிர்க்கலாம். ஏனெனில் அவை பொது வெளியில் பகிரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
முகம் தெரியாத நண்பர்களை உங்களது இணைப்பில் இணைத்துக்கொள்ளாதீர்கள். முடிந்த வரை உங்கள் புகைப்படங்கள், தகவல்கள் அனைத்தையும் உங்கள் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும் படி உங்கள் ’Privacy Setting’ ஐ மாற்றிக்கொள்ளுங்கள். முகநூல், இன்ஸ்டாகிராம், டிக் டாக் என அனைத்திலும் இந்த அமைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் நீங்கள் பகிரும் விவரங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சென்றடையுமே தவிர, வெளியாட்கள் அதை பயப்படுத்தும் வாய்ப்பைக் குறைக்கும்.
ஏன் நாம் இதை செய்ய வேண்டும்? ஏன் தவறு செய்பவர்களை இதைச் செய்யாதீர்கள் என கூறுவதில்லை? என நீங்கள் கேட்கலாம். ஈரமில்லா இச்சமூகத்தில் இருக்கும் நாம்தான் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நம் பாதுகாப்பையும் முன்னிறுத்துவோம் மறுபக்கம் கேள்விகளை எழுப்புவோம்.
இந்த சுதந்திர இந்தியாவில் நாம் எந்த பயமின்றி எதையும் பகிரும் காலம் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றை பலர் மறந்து விடுகின்றனர். நேரடி வாழ்வில் இன்றும் நாம் சில பழக்கங்களை பின்பற்றித்தான் வருகிறோம். நம் சுய விவரங்களை புதிதாக சந்திக்கும் நபர்களிடம் கொடுப்பத்தில்லை, தெரியாவர்களிடம் நம் போட்டோவை கொடுக்கமாட்டோம். நம்மைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை தயக்கமின்றி ஷேர் செய்யமாட்டோம். இங்கே இணையத்திலும் அதையேத்தான் பின்பற்றச் சொல்கிறோம்.
பொள்ளாச்சி விவகாரத்தில் நடந்தது வேறுவிதம். பெண்களுடன் நட்பாகப்பழகி ஏமாற்றி அவர்களை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதற்கு அப்பெண்களை குறைக்கூற முடியாது, இருப்பினும் இணைய உலகில் இதற்காகவே உலாவரும் கொடூரன்களை கண்டறிவது கடினமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்:
ஆண் பிள்ளைகளுக்கு சம உரிமை, பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டிய மரியாதைப் பற்றி தொடர்ந்து போதிப்போம். அதேபோல் பெண்களுடன் நண்பர்களாக பழகி நம்பிக்கைத் துரோகம் செய்த காமூகன்களை தண்டிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம். இணைய வளர்ச்சியில் இதுபோன்ற சவால்களை எச்சரிக்கையுடன் கையாள்வோம்.