தென்மாவட்டங்களில் களைக் கட்டும் பொங்கல், காலியாகும் சென்னை: சோகத்தில் வியாபாரிகள்!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் சென்னையில் பொங்கல் பொருட்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளைக் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை வேலை நாளில் வந்துள்ளதால், தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறைக் கிடைத்துள்ளது. திங்கட்கிழமை மட்டும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை எடுத்தால் ஒன்பது நாட்கள் விடுமுறை வருகிறது.
இதனாலேயே வெளியூர்களில் வசித்து வரும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு பொங்கல் கொண்டாட புறப்பட்டு விட்டனர். அதிலும் குறிப்பாக சென்னையில் இருப்போரில் அதிகமானோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான். எனவே பொங்கலுக்கு கிடைத்த விடுமுறையை வீணாக்காமல், அவர்கள் சொந்த ஊர் செல்ல முன்கூட்டியே திட்டமிட்டு விட்டனர்.
ரயிலில் முன்பதிவுகள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், கடைசி நேரத்தில் பலர் சிறப்புப் பேருந்துகளிலும், கார்களிலும் சொந்த ஊர் செல்லத் தொடங்கி விட்டனர். சிலர் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், இருசக்கர வாகனத்திலேயே சொந்த ஊருக்கு பயணப்பட்டு வருகின்றனர்.
போகியை சொந்த ஊரில் தான் கொண்டாட வேண்டும் என நேற்றிரவு ஏராளமானோர் ஊருக்குப் புறப்பட்டதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் தாம்பரம் சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி, கேகே நகர், கோயம்பேடு ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு மூன்றாவது நாளான நேற்று இரவு வரை 11 ஆயிரத்து 724 பேருந்துகளில் 5 லட்சத்து 86 ஆயிரம் பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர்.
சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மக்கள் படையெடுப்பதால் ரயில்களிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. முன்பதிவு டிக்கெட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நின்று கொண்டே சென்றாவது சொந்த ஊரில் தான் பொங்கல் கொண்டாடுவோம் என மக்கள் குடும்பத்துடன் ஊருக்குச் செல்வதை நேற்றுக் காண முடிந்தது.
வேலைக்காக, கல்விக்காக என சென்னை சென்ற மக்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்பி விட்டதால், மதுரை, நெல்லை, கன்யாகுமரி என தென்மாவட்டங்களில் இன்றே கொண்டாட்டங்கள் களைக் கட்டத் தொடங்கி விட்டது. போகிப் பண்டிகையை இன்று சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர் மக்கள்.
ஆனால் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் சென்று விட்டதால், வழக்கமாக பரபரப்பாக காணப்படும் சென்னை சாலைகள் அதிக போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. அதோடு பொங்கல் பொருட்கள் விற்பனையும் குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு மற்றும் காய்கறிகளை படையிலிட்டு வழிபடுவது வழக்கம். அதன்படி தென்மாவட்ட சந்தைகளில் பூ, பழம் மற்றும் காய்கறிகளின் விற்பனைக் களைகட்டியுள்ளன. நெல்லை பாளையங்கோட்டை உழவர் சந்தையில் 3 நாட்களில் 200 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.
பூ மார்க்கெட்டுகளிலும் விற்பனை களைகட்டியுள்ளது. பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டபோதும், வேறு வழியின்றி இல்லத்தரசிகள் பூக்களை வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஆனால் சென்னையில் மட்டும் பொங்கல் பொருட்கள் மற்றும் பூ விற்பனை மந்தமாக உள்ளது.
அதிகளவிலான மக்கள் சொந்த ஊர் சென்றுவிட்டதால், சென்னையில் பொங்கல் விற்பனை சற்று மந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.