மணக்கும் சேலத்து மஞ்சளை மருத்துவ குணம் மாறாமல் தரத்துடன் மக்களுக்கு விற்பனை செய்யும் கிருபாகரன்!
பெருகி வரும் நாகரிக மோகத்தால் இன்று பாக்கெட்டுகளில் விற்கப்படும் வேதிப் பொருளைத்தான் பெரும்பாலானவர்கள் மஞ்சள் என நினைத்து பயன்படுத்தி புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியக் கேடுகளுக்கு வழிவகுத்து வருகிறோம் என்கிறார் சேலத்தைச் சேர்ந்த THE DIVINE FOOD நிறுவனரான கிருபாகரன் மைக்கேபிள்ளை.
அம்மன் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் ஆன்மிகத்தின் அடையாளமான மஞ்சள், அழகூட்டியாக தமிழக மகளிர் பூசிக் குளிக்கும் மஞ்சள், சமையலில் சுவை, ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்திக்காக உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் மஞ்சள், காயங்களில் கிருமிநாசினியாக தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து மருந்தாக பத்து போடப்படும் மஞ்சள் என, மஞ்சள் இயற்கையாகவே நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது.
ஆனால், பெருகி வரும் நாகரிக மோகத்தால் இன்று பாக்கெட்டுகளில் விற்கப்படும் வேதிப் பொருளைத்தான் பெரும்பாலானவர்கள் மஞ்சள் என நினைத்து பயன்படுத்தி புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியக் கேடுகளுக்கு வழிவகுத்து வருகிறோம், என்கிறார் சேலத்தைச் சேர்ந்தவரான கிருபாகரன் மைக்கேபிள்ளை.
சேலம், ஆத்தூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கிருபாகரன், அமெரிக்காவில் எம்பிஏ முடித்துவிட்டு, அங்கு 5 வருடங்கள் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள சூப்பர் மார்க்கெட்களில் உள்ள மஞ்சள் தூள் மிகவும் தரமாக இருப்பதைப் பார்த்துள்ளார்.
மஞ்சள் தூள் பாக்கெட்டுகளின் பின்புறமுள்ள விலாசத்தைப் பார்த்தபோது அவையனைத்தும் இந்தியத் தயாரிப்புகள் எனத் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் ஏன் இந்தளவுக்கு தரமான மஞ்சள் கிடைக்கவில்லை என அவரின் சிந்தனை சென்றுள்ளது. இதையடுத்து இந்தியா திரும்பிய கிருபாகரன், மஞ்சள் தொழிலில் கால்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் தெரிவித்ததாவது, நான் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் எனது சொந்த மாவட்டமான சேலத்தில்தான் மிகத் தரமான மஞ்சள் கிடைக்கிறது எனத் தெரியவந்தது. இதையடுத்து, இங்குள்ள விவசாயிகள், அவர்களின் விவசாய முறை, பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவற்றை 8 மாதங்களாக ஆய்வு செய்தேன்.
அப்போதுதான் தெரிந்தது, விவசாயிகள் மிகத் தரமான மஞ்சளைத்தான் விளைவிக்கின்றனர் என்று. ஆனால், அந்த தரமான மஞ்சள் மக்களைச் சென்றடைவதில்லை. இதையடுத்து, நானே தரமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள் பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கினேன் என்கிறார்.
The Divine Food தொடக்கம்
CURCUMIN என்பது மஞ்சளில் உள்ள அத்தனை நற்குணங்களுக்குக் காரணமான ஓர் மூலப் பொருள். இந்த மூலப்பொருள்தான் மஞ்சளின் உயிர்நாடி எனலாம். இந்த CURCUMIN எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு மஞ்சளும் தரமானதாக இருக்குமாம். பொதுவாக சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் மஞ்சளில் இயற்கையாகவே இந்த CURCUMIN அளவு அதிகமாக இருக்கிறது என கிரு (கிருபாகரன்) தெரிவிக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக புற்றீசல் போல பெருகிவரும் மசாலா கம்பெனிகளின் வரவால் மஞ்சள் தனது தரத்தை இழந்து விட்டது. இவர்கள் CURCUMIN அளவைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சாம்பார் பொடி, ரசப் பொடி போல நிறமூட்டி உள்ளிட்ட பல்வேறு வேதிப் பொருள்களை மஞ்சளுடன் கலந்து மஞ்சள் பொடியை விற்பதால்தான் மஞ்சள் தனது தரத்தை இழந்துவிட்டதையும், மஞ்சளின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, இந்த பொருள்களே பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பதைக் கண்டறிந்தேன். இதையடுத்து தரமான மஞ்சளை மக்களுக்கு வழங்க முடிவு செய்து நான் தொடங்கியதுதான் THE DIVINE FOODS என்கிறார்.
இவரது THE DIVINE FOODS-ல் CURCUMIN லெவல் அதிகமுள்ள தரமான மஞ்சள் தூள், பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவை சேர்க்கப்பட்ட கோல்டன் மில்க், சோப், கேப்சூல்கள் போன்ற பல்வேறு பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.
2019ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இவரது தொழில் பயணம் அடுத்த 6 மாதத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பிரேக் அடித்து விட்டது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள பொருள்களை மக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு காரணமாக அந்த ஊரடங்கு நேரத்திலும் ஆன்லைனில் இவர்களது பிசினஸ் சூடு பிடித்து, உச்சம் நோக்கி பயணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் விவசாயிகளுடன் கூட்டு
கிரு, நேரடியாக விவசாயிகளைத் தேடிச் சென்று, அவர்களின் மண் வளம் அவர்கள் பயன்படுத்தும் இயற்கை உரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து, ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் இருந்து மட்டும் அவர்கள் கூறும் விலைக்கு ரொக்கமாக பணம் கொடுத்து மஞ்சளை வாங்கி வருவதால் நல்ல தரமான மஞ்சள் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்.
பொதுவாக CURCUMIN லெவல் என்பது 1 கிலோ மஞ்சளில் 10 கிராம் அளவுக்குத்தான் இருக்கும். அதை பரிசோதித்து வாங்கவேண்டும். நாங்கள் அதில் கவனம் செலுத்தி, நல்ல தரமான மஞ்சளை வாங்கி, மதிப்புக்கூட்டி கோல்டன் மில்க், சோப்கள், காப்சியூல்ஸ் போன்றவற்றை தயார் செய்து அமேசான் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் தரம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர்.
மாதமொன்றுக்கு சராசரியாக 800 முதல் 1000 ஆர்டர்கள் வரை வருகின்றன. மேலும், எங்கள் தயாரிப்புகளை USA, UK, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறோம். கடந்த மாதம் நாங்கள் அறிமுகம் செய்த இயர்கை தேன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்கிறார்.
முதல் 2 ஆண்டுகளுக்கு வாடிக்கையாளர் தொடர்பை உறுதிப்படுத்தினோம். சேலத்தில் உள்ள எங்கள் தொழிற்சாலையில்தான் மொத்த பொருள்களும் உற்பத்தியாகிறது. எங்கள் தொழிற்சாலையில் மொத்தம் 6 பேர் பணிபுரிகின்றனர். எங்களின் தயாரிப்புகள் ரூ.250 முதல் ரூ.800 வரை கிடைக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர்.
”பொதுவாக மாதத்திற்கு ரூ. 10 லட்சத்துக்கும் மேல் மஞ்சள் பொருள்கள் விற்பனையாகின்றன. இதில், மூலப்பொருள்கள் வாங்குவது, தயாரிப்புச் செலவு, தொழிற்சாலை செலவுகள், ஊழியர்கள் ஊதியம் போக ஓர் திருப்தியான வருவாய் கிடைக்கிறது. ஆனால், நான் இதனை வருமானத்துக்காக செய்யவில்லை. லாப நோக்கமின்றி நல்ல தரமான பொருட்கள் மக்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதே எனது குறிக்கோள்,” என்கிறார் கிரு.
தமிழ்நாட்டில் ஓவ்வொரு மாவட்டத்திலும் ஓர் சிறப்பான இயற்கை உணவுப் பொருள் கிடைக்கிறது. உதாரணத்துக்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் நல்ல தரமான பனைவெல்லம் கிடைக்கிறது. சேலம் ஆத்தூரில் மஞ்சள் கிடைக்கிறது. இதேபோல தமிழகம் முழுவதும் கிடைக்கும் அனைத்து இயற்கை உணவுப் பொருள்களையும் கண்டறிந்து, அவற்றை ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து பெற்று, மதிப்புக்கூட்டி மக்களுக்கு ஆரோக்கியமான இயற்கையான உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்கால லட்சியம்.
அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நாங்கள் நமது மக்களின் தெய்வீக பாரம்பரிய உணவை மீண்டும் மக்களிடமே கொண்டு சேர்க்கும் பணியை சத்தமில்லாமல் செய்து வருகிறோம் என்கிறார் கிரு.
பல்வேறு தொற்று நோய்கள் உருமாறி வரும் மனித குலத்தை அச்சுறுத்திவரும் வேளையில் நாமும் தரமான மதிப்புக்கூட்டப்பட்ட இதுபோன்ற மஞ்சள் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவது நமது உடலுக்கு நலம் பயக்கும் செயலாகும்.