‘சாதனை படைக்க எதுவுமே தடையில்லை’ - ஷூட்டிங்கில் பதக்கங்கள் குவிக்கும் ஒரு கை, காலற்ற பூஜா அகர்வால்!
2012-ம் ஆண்டு நடந்த விபத்தில் மூன்று மூட்டுகளை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டும் மனம் தளராமல் பாரலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பூஜா அகர்வால்.
வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு செயலையும் முறையாக திட்டமிட்டு செயல்படுத்தி வந்தாலும் அடுத்த நொடி என்ன நடக்கப்போகிறது என்பது புரியாத புதிராக இருப்பதே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது.
பூஜா அகர்வாலின் வாழ்க்கையை இப்படித்தான் ஒரு சம்பவம் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.
2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம். பரபரப்பான புதுடெல்லி ரயில் நிலையத்தில் மற்ற அனைவரையும்போல் பூஜா அகர்வாலும் அவரது கணவரும் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தனர். பூஜாவின் கணவர் வெளியூருக்குப் புறப்பட இருந்தார். அவரை வழியனுப்பச் சென்றிருந்தார் பூஜா.
ரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் அருகே நடைமேடையில் சென்று கொண்டிருந்தார் பூஜா. கூட்ட நெரிசல் அதிகம். அந்த நெரிசலில் சிக்கிய பூஜா திடீரென்று நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் தள்ளப்பட்டார். ரயில் அவர்மீது ஏறியது. இந்த கோர விபத்தில் பூஜாவின் கை, கால்களில் மூன்று மூட்டுகள் துண்டிக்கப்பட்டன. வலது கையை மட்டுமே அவரால் இயக்கமுடிந்தது.
வாழ்க்கை தலைகீழாக மாறியது
27 வயதில் கல்லூரி பேராசிரியையாக மகிழ்ச்சியாகவும் கனவுகளுடனும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தார் பூஜா. இந்த விபத்து அவரது உறுப்புகளையும் சிறகுகளையும் ஒருசேர துண்டித்தது.
இருப்பினும் பூஜா சோர்ந்துவிடவில்லை. எதார்தத்தை ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டார். அதுமட்டுமல்ல இன்று இவர் பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
”கை, கால்கள் முடங்கிவிட்டதே என்று நான் ஸ்தம்பித்துவிடவில்லை. இடதுகைக்கு பதிலாக வலது கை துண்டிக்கப்பட்டிருந்தால் நிலைமை மேலும் மோசமாகியிருக்குமே என்று யோசிக்க ஆரம்பித்தேன். சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டேன். சின்னச் சின்ன வேலைகளை நானே செய்துகொள்ள கற்றுக்கொண்டேன். எப்படியாவது ஒரு வேலை தேடி சுயமாக சம்பாதிக்கவேண்டும் என்று நினைத்தேன்,” என்கிறார் பூஜா.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக ஆரம்பித்தார். அவரது கடின உழைப்பிற்குப் பலன் கிடைத்தது. பேங்க் ஆஃப் அலகாபாத் (இந்தியன் வங்கி) குஜ்ரன்வாலா டவுன் கிளையில் வேலை கிடைத்தது. 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வேலையில் சேர்ந்தார்.
“விபத்து ஏற்படுவதற்கு முன்பிருந்த தன்னம்பிக்கையை மீட்டெடுப்பது கஷ்டமாக இருந்தது. சக ஊழியர்கள் எனக்கு துணை நின்றார்கள். இவர்களது உதவியுடன் வாடிக்கையாளர்களை கையாளக் கற்றுக்கொண்டேன்,” என்றார்.
பிரக்யா என்பவர் பூஜாவின் தோழி மட்டுமல்ல நல்ல ஆலோசகரும்கூட. பூஜாவை விளையாட்டில் கவனம் செலுத்தும்படி ஆலோசனை கூறியுள்ளார். இதைக்கேட்டதும் பூஜாவிற்கு முதலில் சிரிப்பு வந்துள்ளது.
பூஜா ஒருமுறை Indian Spinal Injuries Centre (ISIC) சென்றிருந்தார். அங்கு சக்கர நாற்காலியில் இருந்தவாறே பலர் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்ததை கவனித்தார்.
“எல்லோரும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் டேபிள் டென்னிஸ் விளையாட்டைத் தேர்ந்தெடுத்தேன். பாரா தடகள வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டை அறிமுகப்படுத்தும் முகாம் ஒன்றில் கலந்துகொண்டேன். சுவாரஸ்யமாக இருந்ததால் எனக்கு அது பிடித்திருந்தது,” என்றார்.
ஒரு கட்டத்தில் பூஜா அலுவலகம், டேபிள் டென்னிஸ், துப்பாக்கிச் சுடுதல் என பரபரப்பாகிவிட்டார். ஒரு நாள் வங்கியில் வேலை செய்துகொண்டிருந்த சமயத்தில் மயங்கிவிட்டார். ஏதேனும் ஒரு விளையாட்டுடன் நிறுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பூஜா துப்பாக்கிச் சுடுதலைத் தேர்வு செய்துள்ளார்.
துப்பாக்கிச் சுடுதலில் தேசிய அளவிலான போட்டிக்கு முந்தைய போட்டியில் பங்கேற்றார். 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி தங்கப் பதக்கம் வென்றார்.
”அந்த சமயத்தில்தான் பிரதமர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அறிவித்திருந்தார். வங்கியில் வேலை செய்ததால் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டிய சூழல். டிசம்பர் மாதம் நடக்கவிருந்த தேசிய அளவிலான போட்டிக்குத் தயாராக வேண்டியிருந்தது. இதற்கிடையில் என் அப்பா உயிரிழந்தார். மிகவும் வேதனை நிறைந்த காலகட்டமாக அது இருந்தது,” என்று பகிர்ந்துகொண்டார் பூஜா.
இவ்வளவு கடினமான சூழலிலும் பூஜா தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
சவால்கள்
பூஜா எத்தனையோ பதக்கங்களை வென்றபோதும் அவரிடம் சொந்தமாக துப்பாக்கி இல்லை. இரவல் வாங்கியே போட்டியில் கலந்துகொண்டார். பின்னர் Sportscraftz நிர்வாக இயக்குநர் விபின் விக் தனது மகனின் துப்பாக்கியை பூஜாவிடம் கொடுத்துள்ளார். இதைக் கொண்டு 2017ம் ஆண்டு UAE-யில் நடைபெற்ற சர்வதேச உலகக் கோப்பை போட்டியில் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பிறகு வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக துப்பாக்கி வாங்கினார். பாங்காக் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தகுதி பெற்றார். Croatia உலகக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பெரு நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் குழுவாக விளையாடும் பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்றது பூஜாவின் சமீபத்திய சாதனை.
பூஜா துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்காக தினமும் 40 கி.மீட்டர் வரை பயணம் செய்வார்.
”என்னுடைய அலுவலக நேரத்திற்கு ஏற்ப பயிற்சியை திட்டமிட்டுக் கொள்வேன். ஆனால் நான் வேலை செய்யும் வங்கிக் கிளையின் மண்டல தலைவர், உயர்மட்ட அதிகாரிகள் என அனைவரும் எனக்கு ஆதரவளித்தார்கள். எங்கள் வங்கியில் பெண் ஊழியர்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கப்படும்,” என்று உற்சாகமாக பகிர்ந்துகொண்டார்.
மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறார்
பூஜா யூட்யூப் சானல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதில் மாற்றுத்திறனாளிகள் சின்னச் சின்ன வேலைகளை எப்படி செய்துகொள்ளலாம் என்பதை விளக்குகிறார்.
”போட்டி ஒன்றின்போது என்னுடைய டி-ஷர்டை நான் ஒரே கையால் மடித்து வைத்ததை என் பயிற்சியாளர் கவனித்தார். எப்படி இவ்வளவு வேகமாக மடித்து வைக்கிறாய் என்று கேட்டார். என்னுடைய வேலைகளை சுலபமாக செய்துகொள்ளும் வழிமுறையை நானே உருவாக்கிக்கொள்கிறேன்,” என்று யூட்யூப் தொடங்கியதற்காக காரணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“ஊரடங்கு சமயத்தில் அலுவலக நேரமும் பயிற்சியும் முடிந்த பிறகும் ஓய்வு நேரம் கிடைத்தது. என் நண்பர்கள் யூட்யூப் சானல் தொடங்க ஊக்கமளித்தார்கள். என்னால் முடிந்த சமயத்தில் வீடியோக்கள் எடுத்து பதிவு செய்கிறேன்,” என்கிறார்.
பார்வையாளர் ஒருவர் ஒரே கையால் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை எப்படி கட் செய்வது எனக் கேட்டுள்ளார். அதற்கான வீடியோவையும் பூஜா பதிவிட்டுள்ளார்.
”என்னுடைய செயல்பாடுகள் மூலம் நான் எதை நிரூபிக்க விரும்புகிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு. எனக்குப் பிடித்தவற்றை நான் செய்கிறேன் என்பதே என்னுடைய பதிலாக இருக்கும்,” என்கிறார்.
மேலும் பல துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்று இந்தியன் வங்கியையும் நாட்டையும் பெருமைப்படுத்தவேண்டும் என்பதே பூஜாவின் நோக்கம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா