ஏழ்மை; வறுமை; 1 ஆண்டு தடை; முழங்கால் சர்ஜரி; சின்னப்பம்பட்டி டூ ஐபிஎல் அடைந்த நடராஜன்!

By jayashree shree|8th Oct 2020
ஐபிஎல் தொடர் நெடுக கவனம் பெற்றுவரும் டி.நடராஜனை பற்றிய ஒரு குறிப்பிட்ட அம்சம் இணையவெளியில் படுவைரலாகியது. அது வேறு எதுவுமில்லை அவருடைய ஜெர்சியிலிருந்த பெயரான ‘J.P. நட்டு'! நடராஜன் காலிங் நடு...பட், வாட் இஸ் தி மீனிங் ஆப் J.P?
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

டி. நடராஜன் - கொரோனாவின் கோரதாண்டவத்துக்கு மத்தியில் நடக்கும் இந்தாண்டு ஐபிஎல் ஆட்டத்தில் முதல் பந்தை வீசியவர் இவரே. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில், பல உலக கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் கனவு விக்கெட்டான இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை வீழ்த்தியதன் மூலம் அனைவரது மனதிலும் நின்றார்.


டெல்லிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை அருமையாக வீசி வெறும் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நடராஜனின் பவுலிங்கால் ஈர்க்கப்பட்ட, உலகின் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான பிரெட் லீ, நடராஜனை பாராட்டி டுவிட்டிட்டார்.

அந்த போட்டியில் ஒரே ஓவரில் 5 யாக்கரும், கடைசி பந்தில் விக்கெட்டும் எடுத்தும் ஐபிஎல் லவ்வர்களால் ‘யாக்கர் ராஜா' என அன்போடு அழைக்கப்பட்டார்.

இப்படியாக, இந்த ஐபிஎல் தொடர் நெடுக கவனம் பெற்றுவரும் டி.நடராஜனை பற்றிய ஒரு குறிப்பிட்ட அம்சம் இணையவெளியில் படு வைரலாகியது. அது வேறு எதுவுமில்லை அவருடைய ஜெர்சியிலிருந்த பெயரான J.P. நட்டு' நடராஜன் காலிங் நட்டு... பட், வாட் இஸ் தி மீனிங் ஆப் J.P? என்று கிரிக்கெட் ரசிகர்கள் அலசத் தொடங்கியுள்ளனர்.

உண்மையில், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமமான சின்னப்பன்பட்டி பிறந்த தங்கராசு நடராஜன் எனும் டி.நடராஜன் ஐபிஎல்-ல் ஜொலிக்கும் J.P. நட்டுவாக மாறியதற்கு பின்னாலுள்ள ஏகப்பட்ட வலிகள் மற்றும் உழைப்பில் உறுதுணையாய் உடன் நின்றவர் தான் J.P எனும் ஜெயப்பிரகாஷ். நட்டுவின் கிரிக்கெட் பயணம் ‘எதுவும் சாத்தியமில்லை' என்பதை மெய்பிக்கும் மற்றொரு உத்வேக கதையாகும்...
J.P. Nattu

என் குடும்பம் ரொம்ப ஏழ்மையானது தான். சேலத்திலிருந்து 36கி.மீ உள்ளயிருக்கும் எங்க கிராமத்தின் பெயர் சின்னப்பம்பட்டி. 3 சகோதரிகள், 1 தம்பி. நான் தான் வீட்டில் பெரியவன்.

அப்பா நெசவுத் தொழில் செய்கிறார். அம்மா தெருவோரத்தில் சிக்கன் கடை வச்சிருக்காங்க.


ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து நான் இந்த நிலைக்கு வந்திருக்கேனு நினைக்கும் போது பெருமையா இருக்கு. கவர்மென்ட் ஸ்கூலில் படிச்சும், சாதாரணமான நோட்டு, பென்சில், புத்தகம், வாங்கிறதுக்கே எங்களால முடியாது. அந்த சமயத்தில் எங்க அண்ணா தான் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணாரு. என் கூட பிறந்தவரு கிடையாது. ஆனா, எனக்கு எல்லாமே அவர் தான். காட்ஃபாதர் மாதிரி எனக்கு.


சின்ன வயசுல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சிட்டேன். 5வது படிக்கும் போது டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடுவேன். கிரிக்கெட் கேரியர் எப்ப ஆரம்பிச்சதுனா, 2011ம் ஆண்டுவாக்கில் என்னோட 20 வயசுல தான் எனக்கு கிரிக்கெட் பந்துனா என்னனே தெரியும். அண்ணாவின் நண்பர் மூலமாக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. சென்னையில ஃபோர்த் டிவிஷன் விளையாடினேன். அங்கு இருந்து தான் கிரிக்கெட் கேரியர் தொடங்கியது.

கிரிக்கெட் விளையாடணும்னு ஷூ வாங்கணும், டிரஸ் வாங்கணும். எங்கயாச்சும் மேட்ச்சுல விளையாட கூப்பிட்டாங்கனா, அங்க போறதுக்குகூட என்ட காசு இருக்காது. அந்தமாதிரி நேரத்தில், போட்டிகளில் ஜெயிக்கிற காசை வச்சு தேவைப்படுறதை வாங்கிட்டு, போக்குவரத்து செலவை பாத்துக்குவேன். நிறைய போராட்டம் இருந்தது. நான் பவுலர் என்பதால், எனக்கு ஷூ தான் முக்கியமான தேவையா இருந்தது. எந்த டீமுக்கு விளையாடப் போறனோ, அவங்களே ஷூவை ஸ்பான்சர் பண்ணியிருவாங்க. அந்த ஒரு ஷூவை பத்திரமா பாத்து பாத்து ஒரு வருஷத்தை ஓட்டிருவேன்.

தமிழ்நாட்டு அணி சார்பில் ரஞ்சிக் கோப்பை விளையாடவேண்டும் என்பது தான் என்னுடைய இலக்காக இருந்தது. மற்ற பிளேயர்கள் 16,19 மற்றும் 23 வயதுக்குட்பட்ட மாநில கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பிறகே, ரஞ்சிக் கோப்பை விளையாடுவாங்க. நான் எந்தவொரு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியா ரஞ்சிக் கோப்பையில் விளையாடினேன்.

T natarajan
ரஞ்சிக்கோப்பைக்கு செலக்ட்டாகிய போது, செம ஹாப்பி. ஊரிலே ஒரே கொண்டாட்டம். 28 ஆண்டுகளுக்குப்பின் சேலத்திலிருந்து ரஞ்சிக்கோப்பையில் விளையாட நான் செலக்ட் ஆகினேன். 2014ம் ஆண்டு ரஞ்சியில் விளையாடினேன். எல்லாம் ஹாப்பியா போயிட்டு இருந்தப்போ என்னோட பந்து வீசும் முறை விதிகளுக்கு மாறா இருக்கிறதா சொல்லி என்னை தடை பண்ணிட்டாங்க. என் வாழ்நாள் முழுக்க என்னால் அதை மறக்கமுடியாது. ஏன்னா, ஒரு வருஷம் தடையை நீக்கி கம்பேக் கொடுக்குறதுக்குள்ள ரொம்ப கஷ்டப்பட்டேன்.

எல்லோரும் மனம்வலிமையுடன் இருக்க அட்வைஸ் பண்ணாங்க. எனக்கு மோட்டிவேட் செய்து பேசினால் ரொம்பப் பிடிக்கும். என்கிட்ட ஊக்கப்படுத்தி யாரும் பேசினாங்கனாலே, எனக்கே பெரிய நம்பிக்கை வரும்.

என் மீதிருந்த தடை நீங்கி நான் கம்பேக் கொடுத்த வருஷம், டிஎன்பிஎல் நடந்தனால் தான் நடரஜன்னா யாருனே தெரியவந்தது. அந்த வருஷம் தான் (2017) ஐபிஎல்லில் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தாங்க. பயங்கர சந்தோஷம். ஆனா, எனக்கு ரொம்ப பயம். நான் ஏதோ ஒரு டீம் அடிப்படை விலையில் ஏலம் எடுத்தாபோதும் என்ற எண்ணத்தில தான் இருந்தேன். ஆனா, ரொம்ப பெரிய தொகையில் (ரூ.3 கோடி) ஏலம் எடுத்ததில் எனக்கு பயங்கர ப்ரஷர் ஆகியிருச்சு. ஷேவாக் சார் இப்ப வரை ‘அவனை சீக்கிரம் இந்தி கத்துக்க சொல்லு'னு சொல்லுவாரு.
T Natarajan

அதற்கு அடுத்த வருஷம் ரஞ்சிக்கோப்பை விளையாடுறதுக்கு முன்னாடி முழங்கையில் பிரச்னை வந்துவிட்டது. அதனால, அந்த வருஷம் எந்தவொரு ஸ்டேட் மேட்சும் விளையாடலை, டிஎன்பிஎல் மட்டும் தான் விளையாடியிருந்தேன். முழங்கையில் அறுவைச்சிகிச்சை செய்திருந்தேன். மறுபடியும் ஒருவருஷம் இப்படியாகிருச்சேனு நினைச்ச அப்போ தான் SRH டீம் ஏலம் எடுத்தாங்க. அதுவும் நம்ம டீமில் நிறைய பவுலர்கள் இருந்தாங்க. அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர்குமார் போன்ற பவுலர்கள் இருக்கும் டீமில் ஏலம் எடுத்ததால், ரொம்ப ஹாப்பியா இருந்தேன்.


ஆனா, விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கல. முரளி (சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன்) சாரும் நிறைய சொல்லிக் கொடுத்தாரு. 2 வருஷம் விளையாட சான்ஸ் கிடைக்கலையேனு ஃபீல் பண்ணினேன். அப்போ புவி பாய் (பவுலர் புவனேஷ்வர் குமார்) என்கிட்ட, ‘இதெல்லாம் பிரச்னை கிடையாது. இது நிறைய நடக்கும். நீ இப்போ தான் புதுசா வந்திருக்க. இத நினைச்சு ஃபீல் பண்ணாத, நிறைய கத்துக்க பாரு'னு சொன்னாரு.


அந்த 2 வருஷம் ரஞ்சிக் கோப்பையில் பெஸ்ட்டா விளையாடியிருந்தேன். லக்ஷ்மன் சார் ரொம்ப ஊக்கப்படுத்தி பேசுவாரு. அவரு பேசினாலுமே பாசிட்டிவ்வா தான் பேசுவாரு. அணியின் பயிற்சியாளர் எப்பவுமே என்னிடம் டிஎன்பிஎல்-லிலும், ரஞ்சியிலும் எப்படி விளையாடினியோ, அதே மாதிரி இங்கேயும் விளையாடுனு சொல்லிட்டே இருப்பார்.


பயிற்சியாளர்களுக்கு என்னோட மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கிரிக்கெட் பந்தில் பயிற்சி எடுக்கும்போது பேட்ஸ்மேனுடன் தான் பயிற்சி எடுத்துகொள்வேன்.

பேட்ஸ்மேனுக்கு பதிலா ஷூ வைத்தோ, கோன் வைத்தோ பந்து வீச எனக்கு சத்தியமா வராது. யாராச்சும் பேட்ஸ்மேன் நின்னாங்கன்னா, 6 பந்தில் 6 யாக்கர் போட முடியும். என்னுடைய சீக்ரெட் பெருசா எதுவுமில்லை, டென்னிஸ் பந்து தான்...

இதைவிட ஒரு பெரிய சந்தோஷத்தை எங்க அப்பா, அம்மாவுக்கு கொடுக்க முடியுமானு தெரியாது. அவங்களே, இதை எதிர்பார்த்திருக்கமாட்டாங்க. அடிப்படையில், என் பேமிலிக்கு கிரிக்கெட் பத்தி எதுவும் தெரியாது.

Natarajan

Courtesy: Cricktracker

3 சகோதரிகள் இருங்காங்க. ஒருத்தங்களுக்கு கல்யாணமாகிருச்சு. இன்னும் 2 பேரு இருக்காங்க. தம்பி படிச்சு முடிச்சுட்டான். எல்லோரையும் எவ்ளோ படிக்க முடியுமோ, அவ்ளோ படிக்கங்கடானு சொல்லியிருக்கேன். முன்னால, படிக்க வைக்கிறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது. இப்போ, என்னால எல்லாம் பண்ணமுடியும். 2 சிஸ்டர்சுக்கும் நல்லா கல்யாணம் பண்ணனும்.

J.P ரொம்ப ரொம்ப பிடிச்ச ஆளு. நல்லா ஸ்பீடில் பவுலிங் போடுறனு அவர் தான் முதன் முதலில் என்கிட்ட சொன்னாரு. எங்க வீட்டில் வந்து பேசி, பையனை நான் பாத்துக்கிறேன், என்கிட்ட விட்ருங்கனு சொன்னாரு. எங்க அப்பா, அம்மா எதுவுமே சொல்லல. உன்கிட்ட விடுறதா இருந்தா, தாரளாம விடுறேன், நீயே பாத்துக்கோனு சொன்னாங்க. அன்றிலிருந்து இன்று வரை என்றுமே எனக்கு இவர் தான் காட்ஃபாதர் மாதிரி பாத்திட்டு இருக்காரு. அவரு பேரு தான் ஜெயப்பிரகாஷ். அதனால் தான், அவரு பெயரை ஜெர்சியிலும் போட்டிருக்கேன், கையில் டாட்டூவும் குத்தியிருக்கேன்.
எங்க அண்ணாவுக்கும் எனக்கும் கிரிக்கெட் அகாடமி ஒன்னு ஆரம்பிக்கணும்னு ஒரு ஆசை. எங்கவூர் மக்களுக்கும் எங்க கிராமத்தை சுத்தியுள்ள மக்களுக்கும் கிரிக்கெட்னா என்னனு தெரியப்படுத்தனும்னு தான் நாங்க ஊரிலே கிரிக்கெட் அகாடமி ஆரம்பித்தோம். 50 முதல் 60 பசங்க கோச்சிங் வர்றாங்க. எல்லோருக்கு இலவச கோச்சிங் தான். அங்கிருந்து நிறைய பேரு சென்னை லீக் போட்டியில் விளையாடுறாங்க. டிஎன்பிஎல்&ல் விளையாட 3 பேர் செலக்ட் ஆகியிருக்காங்க.

அதில ஒருத்தன் பெரியசாமி. கடந்த டிஎன்பிஎல்-ல் எல்லா பவுலர் விருதும் அவன் தான் வாங்கினான். நிறைய பேரை ட்ரையின் பண்ணி, என்னை மாதிரி கொண்டுவரணும்னு ஆசை.

நான் தமிழ்நாட்டுக்காக விளையாடணும்னு சின்னதா தான் ஒரு இலக்கை வைத்தேன். சின்ன கோல்-ஆ வையுங்க. அந்த இலக்கை அடைந்து வெற்றி பெறுங்கள். ஆட்டோமெட்டிக்கா, பெரிய கோல் தேடி வரும். எந்த துறையாக இருந்தாலும், கடினமாக உழையுங்கள். கடின உழைப்பு இருந்தால், கண்டிப்பா அதற்கான இடத்தை அடைய முடியும்!


ஐ.பி.எல் மட்டுமல்லாமல் வருங்காலத்தில் இந்திய அணியிலும் சேர்ந்து தமிழகத்துக்கு பெருமைச் சேர்க்க வாழ்த்துகள்!


தகவல் உதவி: சன் ரைசர்ஸ் ஹைதராபாத், படங்கள் உதவி : indiatoday

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world