'ஐன்ஸ்டனை மிஞ்சும் அறிவாற்றல்' - 8 வயது ஆன்ட்ராய்டு டெவலப்பருக்கு ‘பால புரஸ்கார் விருது’

By Gajalakshmi Mahalingam
January 26, 2023, Updated on : Thu Jan 26 2023 06:13:14 GMT+0000
'ஐன்ஸ்டனை மிஞ்சும் அறிவாற்றல்' - 8 வயது ஆன்ட்ராய்டு டெவலப்பருக்கு ‘பால புரஸ்கார் விருது’
தனது அசாத்திய அறிவாற்றலால் 8 வயதில் 3 ஆன்ட்ராய்டு செயலிகளை உருவாக்கி வியத்தகு சாதனையைச் செய்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த ரிஷி ஷிவ் பிரசன்னா. 2023ம் ஆண்டிற்கான பாலபுரஸ்கார் விருதையும் வென்றுள்ளார் இவர்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

குழந்தைகளின் சிறப்பான சாதனைகள் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த உந்து சக்தியாக இருக்கும் என்கிற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் மத்திய அரசு 'பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார்' விருதை வழங்குகிறது.


தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.


2023ம் ஆண்டிற்கான விருதிற்கு 11 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி பாராட்டியுள்ளார். விருது பெற்றவர்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ரிஷி ஷிவ் பிரசன்னா.

rishi

பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறுவன் ரிஷி ஷிவ் பிரசன்னா

புதுமை படைப்பு பிரிவின் கீழ் இந்தச் சிறுவனுக்கு பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. அப்படி என்ன innovation படைப்பை செய்திருக்கிறார் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம் ரிஷி ஆச்சரியப்படத் தான் வைக்கிறார்.


சராசரி அறிவாற்றலை விட அதிக அறிவாற்றலான 180 மதிப்பீடு iQ கொண்டிருக்கிறார் ரிஷி. ஐன்ஸ்டின் அறிவாற்றலான 130ஐயும் தாண்டிய iQ உள்ள இந்தச் சிறுவன் நுண்ணறிவு அதிகமாக இருக்கும் நபர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அமைப்புகளில்‌ மிகப் பெரியது, மற்றும் மூத்த அமைப்பான 'மென்சாவில் (Mensa)' 4 வயது 5 மாதக் குழந்தையாக இருக்கும் போதே உறுப்பினராகிவிட்டார்.

rishi

மற்ற குழந்தைகளைப் போலவே பிரசன்னாவும் சூரியக்குடும்பம், பிரபஞ்சம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்திருக்கிறார். 3 வயதிலேயே இவற்றைப் பற்றி பேசும் அறிவாற்றலைக் கொண்டிருந்தான் ரிஷி. எப்படி படிப்பது என்பதை 2 வயதிலேயே கற்றுக் கொண்டான் என்கிற செய்தி நம்மை எல்லாம் பிரமிப்பில் ஆழ்த்தும்.

5 வயதிலேயே கோடிங் கற்றுக் கொண்டு பல்வேறு எளிய பயன்பாட்டு செயலிகளை உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறார் ரிஷி. கூகுளின் இளம் ஆன்ட்ராய்டு டெவலப்பர் சான்றிதழை பெற்றிருக்கும் இவர் 3 செயலிகளை உருவாக்கி இருக்கிறார்.

6 வயதிலேயே பிளே ஸ்டோரின் தன்னுடைய செயலிகளான TEST App, IQ Test app மற்றும் CHB (Covid Help for Bengalurians) பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்திருக்கிறார். இது தவிர Learn Vitamins with Harry Potter மற்றும் Elements Of Earth என்று இரண்டு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார் ரிஷி.


ஜனாதிபதி மாளிகையில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பால புரஸ்கார் விருதை பெற்றுக்கொண்ட ரிஷி, மிகுந்த உற்சாகத்துடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கலந்துரையாடலிலும் பங்கேற்றார்.

Bal Purashkar award

ரிஷி ஷிச் பிரசன்னாவைத் தொடர்ந்து கலை மற்றும் இலக்கிய பிரிவிற்கான பால புரஸ்கர் விருது கேரளாவைச் சேர்ந்த ஆதித்யா சுரேஷிற்கு வழங்கப்பட்டது. இதே பிரிவில் 17 வயது கௌரவி ரெட்டி, ஒடிசாவைச் சேர்ந்த 16 வயது ஷம்பப் மிஷ்ரா, அசாமைச் சேர்ந்த 12 வயது ஷ்ரேயா பட்டாசார்ஜி உள்ளிட்டோருக்கும் பால புரஸ்கார் வழங்கப்பட்டது.


துணிச்சலுக்கான பிரிவில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ரோஹன் ராமசந்திர பஹிர், புதுமைப் படைப்பிற்கு சத்தீஸ்கரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆதித்ய பிரதாப் சிங் சௌஹான், சமூக சேவைக்கு டெல்லியைச் சேர்ந்த 14 வயது அனுஷ்கா ஜாலிக்கம், விளையாட்டுப் பிரிவில் குஜராத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சூர்யஜித் ரஞ்ஜித்குமார், ஆந்திராவைச் சேர்ந்த 11 வயது கோலகட்லா அலானா மீனாட்சி மற்றும் ஜம்முவைச் சேர்ந்த 16 வயது ஹனயா நிசாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.