‘நமக்கென்று ஒரு காலம் வரும்’ - ஒன்றரை வருடத்தில் 18 கடைகள்: கோடியில் டர்ன் ஓவர் செய்யும் ‘காப்பி 2.0’ சத்யன்!
கொரோனாவால் வேலை பறிபோய், முதல் தொழில்முயற்சி தோல்வியில் முடிந்த போதும், மனம் தளராமல் ‘காப்பி 2.0’ என்ற காபிஷாப்பை ஆரம்பித்து, ஒன்றரை வருடங்களில் அதனை 18 அவுட்லெட்டாக விரிவு செய்து, 2.0 பேக்ஹவுஸ், 2.0 கிளவுட் கிச்சன், 2.0 ஆன்வீல்ஸ் என புதிது புதிதாக சிந்தித்து அசத்தி வருகிறார் கோவையை சேர்ந்த சத்யன்.
கை நிறைய சம்பளம், மன நிறைவான வேலை, பிரச்சினையில்லாமல் செல்லும் வாழ்க்கை.. என வாழ்க்கை நிம்மதியாக போய்க் கொண்டிருக்கையில், அதை விட்டுவிட்டு தொழில்முனைவோர் ஆக வேண்டும் என ரிஸ்க் எடுக்க நினைப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனால், அந்த விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையிலானவர்கள்தான், பெரும்பாலும் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு புதிய தொழில்பாதை அமைத்துக் கொடுப்பவர்களாய் இருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கோவையைச் சேர்ந்த சத்யன் பாலமாணிக்கம். இவரை வெறும் சத்யன் என்று சொல்வதைவிட ‘காப்பி 2.0’ சத்யன் என்றால் கோவை மக்களுக்கு டக்கென அடையாளம் தெரியும். அந்தளவிற்கு கோவையில் குறுகிய காலத்தில் சுமார் 18க்கும் மேற்பட்ட காப்பி 2.0 அவுட்லெட்களை திறந்துள்ளார் சத்யன்.
"முதல் தலைமுறையாக தொழில் தொடங்குவது ஒரு சவால் என்றால், ஏற்கனவே வீட்டில் அப்பா, அண்ணன் என இரண்டு பேர் தொழில் தொடங்கி தோல்வி அடைந்த நிலையில், நன்றாக கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கும் நான், வேலையை விட்டு விட்டு தொழில் தொடங்குவது எவ்வளவு சவாலாக இருந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள். ஆனால், கொரோனா காலத்தில் இரண்டு மாதங்கள் சம்பளம் இல்லாமல் அவதிப்பட்ட நாட்கள்தான் என்னை இன்று இப்படி ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராக்கி இருக்கிறது,” என தன் ஆரம்ப நாட்கள் குறித்து மனம் திறக்கிறார் சத்யன்.
நடுத்தரக் குடும்பம்
சேலம் அருகே தாரமங்கலம் என்ற கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் சத்யன். சென்னையில் ஹோட்டல் மேலாண்மை பிரிவில் டிப்ளமோ படிப்பும், அதனைத் தொடர்ந்து எம்பிஏ-வும் முடித்துள்ளார். சில்லறை வர்த்தக மேலாண்மை, உணவு மற்றும் பானங்கள் ஆகிய பிரிவில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க இவர், ஜிஆர்டி ஹோட்டல்ஸ், தாஜ் குழுமத்தின் ஹோட்டல்கள், கேஎஃப்சி, எஸ்பிஐ சினிமாஸ், ஹாஷ் சிக்ஸ் ஹோட்டல்கள் என முன்னணி நிறுவனங்கள் பணியாற்றியுள்ளார்.
வெயிட்டராக தன் கேரியரை ஸ்டார்ட் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக பணியில் உயர்ந்து, மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் ஜிஎம் ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, மற்றவர்களைப் போலவே கொரோனா ஊரடங்கால் சத்யனின் வேலைக்கும் பிரச்சினை உண்டானது.
இரண்டு மாதங்கள் சம்பளமே இல்லாமல் வேலை பார்த்துள்ளார். அப்போதுதான், மாதச் சம்பளத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் இரண்டாவதாக ஒரு வருமானம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என யோசித்திருக்கிறார் சத்யன்.
தோல்வியில் முடிந்த முயற்சி
தனது யோசனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், நண்பருடன் சேர்ந்து தன் சேமிப்பு, மனைவியின் நகைகளை அடகு வைத்து கொஞ்சம் பணம், மீதத்திற்கு கடன் என ரூ.5 லட்சம் முதலீட்டில், நண்பர் ஒருவருடன் சேர்ந்து காபி ஷாப் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் சத்யன்.
ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே சத்யனின் காபி ஷாப்பிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு கடை அடுத்தடுத்து 8 கடைகளாக விரிவடைந்தது. சரி, நாம் தொழிலில் வெற்றி பெற்று விட்டோம் என சத்யன் பெருமூச்சு விடுவதற்குள், அடுத்த இடியாக நண்பரின் துரோகம் அமைந்தது.
“30% லாபத்தில் பங்கு தருகிறோம் என்றார்கள். ஆனால் தரவில்லை. இதனால் அந்த காபி ஷாப் தொழிலில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. உணவுத் துறையில் எனக்கிருந்த 15 வருட அனுபவம், அந்த 8 கடைகள் ஆரம்பித்ததில் கிடைத்த பாடங்கள் இவற்றைக் கொண்டு மீண்டும் அடித்தட்டிலிருந்து தொழில் தொடங்குவது என முடிவு செய்தேன். முதல் முறை போல் இல்லாமல் இம்முறை காபி ஷாப் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஆடிட்டரை சந்தித்தேன், உரிய சட்ட ஆலோசனைகள் பெற்றேன். அதன் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டதுதான் காப்பி 2.0 காபி ஷாப்.”
எதிர்பார்த்ததைப் போலவே எங்களது கடையின் காபி சுவை மக்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. ஆரம்பித்த ஒன்றரை வருடங்களுக்குள், கோவையில் மட்டும் 18 அவுட்லெட்கள் திறந்து விட்டோம். வெறும் காபிக்கடையாக மட்டும் இல்லாமல், என் பிரான்சைஸிகளுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேக்கரி ஒன்றையும் ஆரம்பித்துள்ளேன்.
ஆரம்பத்தில் வங்கிக் கடனுக்காக சென்ற போது, எந்த வங்கியுமே எனக்கு லோன் தர முன்வரவில்லை. ஆனால், என் வியாபாரம் பெருகியபோது, சில வங்கிகள் தாமாகவே என்னைத் தேடி லோன் தர முன்வந்தார்கள்.
அடுத்தடுத்த முயற்சிகள்
இப்போதிருக்கும் தொழில் போட்டியில் வெறும் டீ, காபியை மட்டும் தொழில் நடத்துவது மிகவும் சவால். கடைக்கு வரும் பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவுப் பொருட்கள் இருந்தால்தான் அங்கு வியாபாரமும் நல்லபடியாக நடக்கும் என்ற வியாபார நுணுக்கத்தை கண்டுபிடித்த சத்யன், அடுத்ததாக தனது கடைகளுக்குத் தானே ஸ்நாக்ஸ் சப்ளை செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேக்கரி ஒன்றையும், க்ளவுட் கிச்சன் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
“10 லட்சம் லோன் வாங்கினேன். பேக்கரியில் இருந்து என் 15 கடைகளுக்கு மட்டுமல்லாமல், மற்ற கடைகளுக்கும் சப்ளை செய்கிறேன். சில அலுவலகங்களுக்கும் நேரடியாக சப்ளை செய்கிறோம். கிளவுட் கிச்சன் இருப்பதால், டீ, காபி மட்டுமில்லாமல் எல்லாவகையுமான ஸ்நாக்ஸ்களுமே நாங்கள் தயாரிக்கிறோம்,” என்கிறார் சத்யன்.
என் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்றுதான் காப்பி 2.0 ஆரம்பித்தேன். இப்போது கோவையைத் தாண்டி வெளியூர்களில் இருந்தும் என் கடைக்கான பிரான்சைசிஸ் கேட்டு அணுகுகிறார்கள். ஆனால், இது மட்டும் போதாது என யோசித்தேன்.
“தொழில் போட்டி நிறைந்த உலகத்தில், நமது பிராண்டை மக்களிடம் கொண்டு சேர்க்க மேற்கொண்டு என்ன செய்யலாம் என யோசித்த போது உதித்த யோசனைதான் 2.0 பேக் ஹவுஸ். 1000 சதுர அடியில் ஆரம்பித்து இங்கு ஸ்நாக்ஸ் வகைகளைத் தயாரிக்கிறோம்,” என்றார்.
மாணவர்களுக்காக ‘காப்பி ஆன் வீல்ஸ்’
அதன் தொடர்ச்சியாக, காப்பி 2.0 கிளவுட் கிச்சனும் ஆரம்பித்தோம். அங்கு பீட்சா, பாஸ்தா போன்ற உணவுப் பொருட்களைத் தயாரித்து எங்கள் கிளைகளுக்கு சப்ளை செய்கிறோம். இதற்கிடையே, கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் என்னைச் சந்தித்து வேலை கேட்டனர். அப்போது அவர்களும் கல்வி பாதிக்காத வகையில், பார்ட்டைமில் வேலை பார்த்து மாதம் 20 முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கும் வகையில் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என நினைத்தேன். அப்போது தோன்றிய திட்டம்தான் ’காப்பி 2.0 ஆன் வீல்ஸ்.’
தினமும் மாணவர்கள் 1000 முதல் 3000 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் வகையில் ஆன் வீல்ஸை டிசைன் செய்திருக்கிறோம். குறைந்த முதலீட்டில் நிச்சயம் கை நிறைய சம்பளம் கிடைக்கிறது எனும் போது, அது மாணவர்களின் படிப்புச் செலவிற்கும், குடும்பச் செலவிற்கும் தாராளமாக இருக்கும், என தன் புதிய புதிய தொழில் முயற்சிகளைப் பற்றிக் கூறுகிறார் சத்யன்.
கோடியில் டர்ன் ஓவர்
ஒரு நாளைக்கு 70 முதல் 80 ஆயிரம் வருவாய் ஈட்டும் என்ற கணக்கில் வருடத்திற்கு கோடியில் டர்ன் ஓவர் செய்வதாகக் கூறுகிறார் சத்யன். பிரைவேட் லிமிடேட் கம்பெனி ஆரம்பித்தபிறகு, தனது தொழிலின் மதிப்பு 8 கோடி ரூபாய் என்கிறார். 40 பேர் நேரடியாகவும், பிரான்சைசிஸ் எல்லாம் சேர்த்து மொத்தம் 120 பேர் தற்போது சத்யனிடம் வேலை பார்க்கிறார்கள்.
“என்னிடம் பிரான்சைசிஸ் எடுப்பவர்களுக்கு எங்கள் தரப்பில் இருந்து எவ்வளவு சப்போர்ட் செய்ய முடியுமோ அந்தளவிற்கு செய்கிறோம். என் 15 வருட பணி அனுபவம்தான் என் மிகப்பெரிய பலமே. கடின உழைப்பு எப்போதுமே வீண் போகாது,” என்கிறார் உறுதியாக.
நமக்கென்று ஒரு காலம் வரும் போது நிச்சயம் ஜெயிக்கலாம். எண்ணம் போல் வாழ்க்கை. இதுதான் அடிக்கடி எனக்கு நானே கூறிக் கொள்வது. என்னிடம் பணி புரிபவர்களுக்கும் இதையே சொல்லித் தருகிறேன்.
குவாலிட்டியான சர்வீஸ், குவாலிட்டியான புராடக்ட், இதோடு என்னை நம்பி என்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு என்னால் அடுத்தடுத்து என்ன மாதிரியான நல்லது செய்ய முடியும் என்ற சிந்தனையும்தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என நம்புகிறேன், என சத்யனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நம்பிக்கைக் கொட்டிக் கிடக்கிறது.
நம்பிக்கைகள் எப்போதுமே தோற்பதில்லை. அதற்கு சத்யனின் காப்பி 2.0 ஒரு சாட்சி.
$120,000 நிதி திரட்டி வளர்ச்சிப் பாதையில் கோவை நண்பர்கள் தொடங்கிய ‘ticket9'