‘டீக்கடையில் படித்தும் கலெக்டர் ஆகலாம்’ - விடாமுயற்சியால் வென்ற ஹிமான்ஷு குப்தா!
உத்தரப்பிரதேச மாநிலம் பரைலியைச் சேர்ந்த ஹிமான்ஷு குப்தா என்பவர் டீ விற்றபடியே எவ்வித கோச்சிங்கும் இல்லாமல், யுபிஎஸ்சி தேர்வில் பாஸாகி மாவட்ட ஆட்சியராக வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த ஹிமான்ஷு குப்தா என்பவர் டீ விற்றபடியே எவ்வித கோச்சிங்கும் இல்லாமல், யுபிஎஸ்சி தேர்வில் பாஸாகி மாவட்ட ஆட்சியராக வெற்றி பெற்றுள்ளார்.
டீ கடை டூ கலெக்டர் - சாத்தியமானது எப்படி?
'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும்' என்பதை மெய்பித்திருக்கிறார் ஹிமான்ஷு குப்தா. உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த இவர், ஐஏஎஸ் கனவு போராடிய வசதியற்ற இளைஞர்.
டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்ற ஹிமான்ஷு குப்தா, அரசுக் கல்லூரியில் ஆராய்ச்சி ஸ்காலராக சேர்ந்தார். ஸ்காலர் என்றாலே மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்கும். அதனை வைத்து தனது ஐ.ஏ.எஸ். கனவுக்காக பயன்படுத்தியுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல, லட்சக்கணக்கில் பணத்தை சுரண்டும் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டியது கட்டாயமாக கருதப்படுகிறது. ஆனால், ஹிமான்ஷுவின் நிலையோ வேறு. அவரது தந்தை ஒரு தினக்கூலி தொழிலாளி, தன்னுடைய கடின உழைப்பால் ஒரு சிறிய டீ ஷாப்பை அப்பகுதியில் திறந்து நடத்திவருகிறார்.
தனது குடும்பத்தின் வறுமை நிலையால், ஹிமான்ஷுவின் தன்னால் ஆன பொருளாதார உதவியை செய்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது.
எனவே தினமும் டீ கடையில் அப்பாவுக்கு உதவிய படியே, இமாயலய இலக்கான ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறவும் படித்து வந்துள்ளார்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக கோச்சிங் சென்டர் போய் படிக்க முடியாததால் சுயமாக ஆன்லைன் வீடியோக்கள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் நோட்ஸ்களைக் கொண்டு படிக்க ஆரம்பித்துள்ளார். தினமும் எல்லா செய்தித்தாள்களை, ஒன்று விடாமல் படித்து விடுவாராம்.
அடுத்தடுத்து தோல்விக்கு பின் பரிசாக கிடைத்த வெற்றி:
எப்படியாவது ஐ.ஏ.எஸ் ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் பயணித்து வந்த கனவு, வெறி, லட்சியம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு களத்தில் இறங்கினார். என்ன தான் கோச்சிங் செல்லாமல் கண்ணும் கருத்துமாக படிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தாலும் ஹிமான்ஷுவுக்கு முதல் முயற்சியே வெற்றியாக அமையவில்லை.
2 முறை ஐஏஎஸ் தேர்வை எதிர்கொண்டு தோல்வி அடைந்தார். ஒவ்வொரு தோல்வியையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக நினைத்து, விடாமுயற்சியுடன் உழைத்து வந்த ஹிமான்ஷு மூன்றாவது முறையாக 2019-ம் ஆண்டு 304வது ரேங்கில் பாஸ் செய்து மாவட்ட ஆட்சியராக வென்றுள்ளார்.
வெற்றிக்காக உழைக்கும் இளைஞர்களுக்கு ஹிமான்ஷு சொல்வது என்னவெனில்,
“தேர்வுக்குத் தயாராக பெரிய நகரத்துக்குச் செல்ல வேண்டியதில்லை, யுபிஎஸ்சி தேர்வை மட்டுமல்ல மிக முக்கியமான பெரிய பரீட்சைகள் எதுவாக இருந்தாலும் நாம் இருக்கும் இடத்திலிருந்தே படிக்கலாம். உலகம் நம் கையில் இருக்கிறது, இருந்த இடத்தில் இருந்து படித்தே பரீட்சைகளை கிளியர் செய்யலாம். நகரத்தில் தான் எல்லா வசதியும் உள்ளது என்பதெல்லாம் ஒன்றுமில்லை,” என்கிறார்.
டீ கடையில் உழைத்து எவ்வித கோச்சிங் கிளாஸுக்கும் செல்லாமல் விடாமுயற்சியோடு வெற்றி கண்டிருக்கும் ஹிமான்ஷு குப்தா, 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தாலே தற்கொலையைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு சிறந்த உதாரணம்.
தகவல் உதவி - நியூஸ் 18.காம் | தமிழில் - கனிமொழி