கொரோனா இருளை அகற்ற தீபம் ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!
இருளில் இருந்து ஒளியை நோக்கி நகரும் வகையிலும், கொரோனா வைரசை வீழ்த்த உதவும் வகையிலும், ஏபரல் 5 ம் தேதி இரவு 9 மணிக்கு தீபம் ஏற்றுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள தேசிய ஊரடங்கின் போது, பாராட்டத்தக்க மற்றும் முன் எப்போதும் இல்லாத ஒழுங்கை கடைப்பிடித்து வருவதற்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 21 நாள் ஊரடங்கில் இன்று10 வது நாளாகும்.
“நம்மில் சிலர், ஒருவரால் தனியே எப்படி போராட முடியும் என்றும் இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருக்கப் போகிறது என்றும் நினைத்துக்கொண்டிருக்கலாம். நாம் அனைவரும் வீட்டில் இருக்கிறோம், இதில் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கொரோனா வைரசின் இருளை நீக்கி நாம் பிரகாசமான நாளையை நோக்கி நகர வேண்டும். ஏழைகளுக்கு ஆதரவு அளித்து, அவர்களுக்கு உதவ வேண்டும்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
நாட்டு மக்களின் ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தி, ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி, ஏப்ரல் 5ம் தேதி ஞாயிறு அன்று மக்கள் தங்கள் நேரத்தில் 9 நிமிடங்களை செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வதை மற்றும் இந்தியா கொரோனா வைரசை வீழ்த்த உதவும் வகையில், 9 மணிக்கு மக்கள் தங்கள் வீட்டு விளக்குகளை அனைத்துவிட்டு, பால்கனியில் அல்லது வீட்டின் முன் நின்று அகல் விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது மொபைல் விளக்கை ஒளிரச்செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்த மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்வின் போது மக்கள் சமூக விலகை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஜனதா ஊரடங்கின் போது, கொரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதில் மக்கள் முன்மாதிரியாக நடந்துகொண்ட விதத்தையும் பிரதமர் பாராட்டினார். நீங்கள் நன்றி தெரிவித்த விதம் மற்ற நாடுகள் பின்பற்றுவதற்கான மாதிரியாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வேர்ல்டோமீட்டர்ஸ் (Worldometers ) அண்மை தகவல் படி உலகில், பத்து லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,543 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
மார்ச் 24ம் தேதி நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்து, மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மார்ச் 28ம் தேதி, பிரதமர் கொரோனா பாதிப்பு மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்வதற்கான புதிய நிதியை ஏற்படுத்துவதாக அறிவித்தார்.
PM Cares என அழைக்கப்படும் இந்த நிதிக்கு பிரதமர் தலைவராக இருப்பார். பாதுகாப்பு அமைச்சர், உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர்.
“கொரோனா பரவல் கவலை அளிப்பதாகவும், நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார மற்றும் சுகாதாரச் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்த நெருக்கடியின் போது, அரசுக்கு உதவ தாராளமாக நிதி உதவி அளிப்பதற்கான கோரிக்கைகள் பிரதமர் அலுவலகத்திற்கு அதிகம் வந்தது,” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில்: சைபர்சிம்மன்