59 நிமிடங்களில் MSME நிறுவனங்கள் வணிகக் கடன் பெறுவது எப்படி?

By YS TEAM TAMIL|14th Jan 2021
எம்.எஸ்.எம்.ஈ நிறுவனங்கள் 59 நிமிடங்களில் PSB கடன் திட்டத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து 8.5 சதவீத வட்டியுடன் 1 லட்ச ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் கடன் பெறுவதில் கடும் சிரமங்களை சந்திக்கின்றன. இந்தத் துறை இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று போற்றப் பட்டாலும் நடைமுறை மூலதனம் தொடர்பான நெருக்கடி முக்கியப் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தத் துறை இந்தியாவின் ஜிடிபி-யில் 31 சதவீதமும் ஏற்றுமதியில் 48 சதவீதமும் பங்களிப்பது குறிப்பிடத்தக்கது.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அளவு, செயல்படும் விதம் போன்றவை வணிகச் சூழல் மேம்படுவதற்குத் தடையாக இருக்கிறது. இந்தியச் சந்தையில் செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களும்கூட மூலப்பொருட்களுக்கும் தயாரிப்பிற்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களையே சார்ந்துள்ளன. இருப்பினும் இந்தத் துறை அதிக முக்கியத்துவம் பெறவில்லை.


2018-ம் ஆண்டில் ஸ்டார்ட் அப் சூழல் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவான சூழலும் இருந்ததைப் பார்க்கமுடிந்தது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் வசதி பெறவும் இந்தத் துறையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் உதவும் வகையில் ஏராளமான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அந்த வகையில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற உதவும் போர்டலை பிரதமர் அறிமுகப் படுத்தியுள்ளார். 2019ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வரம்பு 5 கோடி ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.

2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 35,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக் கடனாக வழங்கப்பட்டு, இந்த போர்டல் நாட்டிலேயே ஆன்லைன் கடன் வழங்கும் மிகப்பெரிய தளமாக உருவாகியுள்ளது.

பெருந்தொற்று பிரச்சனைகள்

கொரோனா பெருந்தொற்று இந்திய வணிகங்களைக் கடுமையாக பாதித்திருந்தாலும்கூட ஒருவகையில் வணிகங்கள் விரைவாக டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு மாறவும் வழிவகுத்துள்ளது.


இந்தப் பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடியான சூழலில் டிஜிட்டல் முறைக்கு மாறுவது மட்டுமே வணிகச் செயல்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்ள உதவியுள்ளது.


கொரோனா சூழலில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டன. கடுமையான பணத் தட்டுப்பாடு காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள கடும் போராட்டத்தை சந்திக்க நேர்ந்தது.


தொழில்முனைவோர் இந்தச் சூழலை எதிர்கொள்ள அரசாங்கத் திட்டங்கள் பேருதவியாக இருந்தது.

59 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 2,12,091 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 66,991 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அரசாங்க அறிக்கை சுட்டிக்காட்டுகின்றன.

இருப்பினும் இந்தத் திட்டத்தை இன்னமும் ஏராளமான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை.


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்தத் தளம் இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால் இத்திட்டம் குறித்த போதிய விழிப்புணர்வு இன்னமும் பலரைச் சென்றடையவில்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் குறிப்பிட்டிருந்தார்.

1

59 நிமிடங்களில் பிஎஸ்பி கடன் – ஓர் அறிமுகம்

எம்.எஸ்.எம்.ஈ-க்கள் நிதி திரட்டும் செயல்முறையை PSB web portal எளிதாக்குகிறது. இந்தப் போர்டல் ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகளுடன் இதை சாத்தியப்படுத்துகிறது.


வணிக விரிவாக்கம், இயந்திர கொள்முதல், தொழில்நுட்ப மேம்பாடு, மூலப்பொருட்கள் கொள்முதல், வளர்ச்சித் திட்டங்கள், சேவை விரிவாக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த விரும்பும் தொழில்முனைவோர் இந்தக் கடன் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

1 லட்ச ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. 8.5 சதவீதத்திலிருந்து வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் பெற விரும்புபவர்கள் இத்திட்டத்தின் மூலம் பலனடைய தகுதியானவர்களா என்பதை சரிபார்க்க இந்தத் தளம் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உறுதி நிதி அறக்கட்டளை (CGTMSE) உடன் இணைந்துள்ளது.

MSME 59 நிமிட கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி?

இந்த விண்ணப்பத்தைப் பெற வங்கிக்கு நேரடியாக செல்லவேண்டிய அவசியமில்லை. டிஜிட்டல் முறையிலேயே விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:


1. psbloansin59minutes.com என்கிற வலைதளத்திற்கு செல்லவும்.

2. உங்கள் முழுப்பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் எண், ஓடிபி உள்ளிட்ட முக்கியத் தகவல்களுடன் உங்கள் கணக்கை பதிவு செய்யவேண்டும்.

3. பதிவு செய்த பிறகு ஸ்கீரினில் கேட்கப்படும் அடிப்படைக் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும்.

4. உங்கள் ஜிஎஸ்டி எண்ணைப் பதிவு செய்யவேண்டும்

5. அடுத்த ஸ்கிரீனில் XML ஃபார்மட்டில் வருமான வரி தாக்கல் செய்த விவரங்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். அல்லது பான் எண், நிறுவனம் நிறுவப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களுடன் லாக் இன் செய்யவேண்டும்.

6. அடுத்ததாக கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கிக் கணக்கு அறிக்கையை பிடிஎஃப் வடிவில் பதிவேற்றம் செய்யவேண்டும். உங்கள் வங்கியைத் தொடர்பு கொண்டோ அல்லது இணைய வங்கி கணக்கில் லாக் இன் செய்தோ இந்த அறிக்கையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

7. இயக்குநர் அல்லது உரிமையாளரின் விவரங்கள், உரிமைக்கான விவரங்கள், நிறுவனம் அல்லது வணிக முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யவேண்டும்.

8. கடன் பெற விரும்புவதற்கான நோக்கம், வணிகம் சார்ந்து ஏற்கெனவே பெற்றுள்ள கடன் பற்றிய விவரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யவேண்டும்.

9. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் வழங்கிய பிறகு உங்களுக்கு விருப்பமான வங்கியைத் தேர்வு செய்யவேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் மாறுபடும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியது முக்கியம்.

10. இறுதியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கன்வீனியன்ஸ் கட்டணம் 1,000 ரூபாயையும் வரியையும் செலுத்தவேண்டும்.


இந்த செயல்முறை முடிந்து கட்டணம் செலுத்தப்பட்டதும் 59 நிமிடங்களில் கடனுக்கு அனுமதி கிடைக்கும். கடன் பெற விரும்புவோர் சமர்ப்பித்துள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். கடன் தொகை வழங்கப்பட வழக்கமாக ஏழு முதல் எட்டு வேலை நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.


SIDBI, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, யூகோ வங்கி, கோடாக் வங்கி, ஃபெடரல் வங்கி, கனரா வங்கி போன்ற முன்னணி வங்கிகள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.


ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா