காலம் தாழ்த்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? - அப்போ உங்க உடலும் உள்ளமும் ‘பத்திரம்’
காலம்தாழ்த்தும் பழக்கம் உடையவர்களுக்கு மன அழுத்த அளவு அதிகரிப்பு, ஆரோக்கியமற்ற வாழ்வியல் சூழல் நிலவுதல், தங்களது உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனே மருத்துவரை அணுகாமல், அவை தீவிரம் அடைந்த பிறகே மருத்துவமனைச் செல்லுதல் போன்ற பல பின்னடைவுகளைத் தருவதாக ஆய்வுபூர்வமாக எச்சரிக்கின்றனர்.
பயங்கரமான பிரச்னையின்போது ‘விக்ரம்’ படத்தில் கமல் கெத்தாகச் சொல்வார்... “பாத்துக்கலாம்...” அவர் அப்படிச் சொல்வது, ‘எந்தப் பிரச்னை வந்தாலும் ஃபேஸ் பண்ணலாம்’ என்ற அர்த்தத்தில்.
ஆனால், நம்மில் பலரும் ‘பார்த்துக்கலாம்’ என்று நமக்குள் சொல்லிக்கொள்வதன் பொருள் ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்ற தள்ளிப்போடுதலே. இப்படி காலம்தாழ்த்தும் பழக்கத்தால் எதிர்காலத்தில் நம் உடல் நலனும் மனநலமும் வெகுவாக பாதிக்கும் என்கிறது ஒரு புதிய ஆய்வு.
“அப்புறம் படிச்சிக்கலாம்”, “நாளைக்குப் படிச்சிக்கலாம்”, “எக்ஸாம் நெருங்கும்போது படிச்சிக்கலாம்” என கல்வி கற்கும் பருவத்தில், குறிப்பாக கல்லூரிக் காலத்தில்தான் நம்மில் பலருக்கும் இந்தத் தள்ளிப்போடும் போக்கு அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால், கற்றலில் பாதிப்பு வருவது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இதுபோல் காலம்தாழ்த்தும் பழக்கத்தால் நாம் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவோம் என்று எச்சரிக்கிறது புதிய ஆய்வு முடிவுகள். குறிப்பாக, காலம்தாழ்த்தும் பழக்கம் உடையவர்களுக்கு மன அழுத்த அளவு அதிகரிப்பு, ஆரோக்கியமற்ற வாழ்வியல் சூழல் நிலவுதல், தங்களது உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனே மருத்துவரை அணுகாமல், அவை தீவிரம் அடைந்த பிறகே மருத்துவமனைச் செல்லுதல் போன்ற பல பின்னடைவுகளைத் தருவதாக ஆய்வுபூர்வமாக எச்சரிக்கின்றனர்.
ஆய்வு நடந்தது எப்படி?
ஸ்டாக்ஹோம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 8 பல்கலைக்கழகங்களில் படிக்கும் 3,525 மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கேள்வித் தொகுப்பு தரப்பட்டு, அவற்றுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என ஓர் ஆண்டுக்கு பதிலளிக்குமாறு பணிக்கப்பட்டது. இந்த டாஸ்கில் காலம்தாழ்த்தியோரின் உடல்நிலை, மனநிலையை பரிசோதித்ததில் கிடைத்த முடிவுதான் ‘காலம்தாழ்த்தும்’ பழக்கத்துக்கும், உடல் - உளவியல் பிரச்சினைகளுக்கும் இடையேயான தொடர்பு.
இப்படி காலம்தாழ்த்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு பின்னாளில் கை, கால் வலிகளும், தோல் வலியும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சரியான தூக்கமின்மையால் மட்டுமின்றி நிதிச் சிக்கலிலும் இவர்கள் சிக்கித் தவிப்பது தெரியவந்துள்ளது. அத்துடன், கவலை கொள்ளுதல், மன அழுத்தம் முதலான மனநலப் பிரச்சினைகளுக்கும் ஆளாவதை அறிய முடிந்துள்ளது. இது ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் முடிவுகள்தான் என்றாலும், இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம் என்கின்றனர் சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள்.
மேலும், இந்தக் காலம்தாழ்த்தும் பிரச்னையில் இருந்து ஒருவரால் விடுபட முடியும் என்றும், இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நீண்ட கால இலக்குகளுக்கு பதிலாக குறுகிய கால இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது, கவனச் சிதறலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள, நாம் முக்கிய செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது மொபைல் போன்களை ஆஃப் செய்து வைப்பது போன்ற தொடர் முயற்சிகள் மூலம் காலம்தாழ்த்துதல் பிரச்னையில் இருந்து நிச்சயம் மீள முடியும்.
இந்தப் பிரச்சினைகளுக்கு நிபுணர்களைதான் அணுக வேண்டும் என்பது இல்லை. நமக்கு நாமே தீர்வு காண முடியும். ஏதாவது ஒரு விஷயத்தில் முழு கவனத்துடன் செயல்படும்போது, நம் மொபைல்போன்களை ஆஃப் செய்து பக்கத்து அறையில் வைத்துவிடுவது போன்ற சின்னச் சின்ன உத்திகளை தொடர்ச்சியாக பின்பற்றினாலே போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பொதுவான காரணங்களும் தீர்வுகளும்
- என்ன செய்வது என்பதே தெரியாமல் இருப்பது
- எப்படிச் செய்வது என தெரியாமல் இருப்பது
- எதுவும் செய்ய விருப்பமின்றி இருப்பது
- எதன்மீதும் அக்கறையின்றி இருப்பது
- செய்வது ‘மூடு’ இல்லாமல் இருப்பது
- கடைசி நிமிடம் வரை காத்திருக்கும் பழக்கம்
- ஏதோ அழுத்தங்களுடன் இருப்பதாக எண்ணிக்கொள்வது
- கடைசி நேரத்தில் முடித்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கை
- அடிக்கடி மறந்துவிடுதல்
- உடல்நிலை சரியில்லை என ஹெல்த் மீது பழிபோடுதல்
- சரியான நேரம் வரும் என காத்திருத்தல்
- ஒரு செயலில் அதீத ஈடுபாடு காட்டிவிட்டு, இன்னொரு செயலில் கோட்டை விடுதல்
இப்படியான காரணங்களை அடுக்கும் உளவியல் நிபுணர்கள் சில தீர்வுகளையும் முன்வைக்கின்றனர். அவை:
அட்டவணை: என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அட்டவணையில் எழுதி, அது செய்து முடிக்க வேண்டிய டெட்லைனையும் குறிப்பிட்டு, அந்தச் செயல் முடிந்ததும் அதை அழிக்கும் வழிமுறையைப் பின்பற்றலாம்.
பேபி ஸ்டெப்ஸ் போதுமே: பெரிய பெரிய இலக்குகளை நோக்கி பயணிக்காமல், சின்னச் சின்ன டாஸ்குகளை உருவாக்கி, அவற்றை சரியான நேரத்தில் முடித்திட பழகுங்கள். இதில் வெற்றி பெற்றால், எளிதாக பெரிய டாஸ்குகள் பக்கம் ஒதுங்கலாம்.
எச்சரிக்கை மணியை கண்டுகொள்ளுங்கள்: ஒரு டாஸ்க் செய்துகொண்டிருக்கும்போது, காலம்தாழ்த்துவதற்கான சில அறிகுறிகள் தென்படத் தொடங்கலால். அப்போது உடனடியாக உஷாராகி, செய்யும் வேலையில் முழு ஈடுபாட்டைக் காட்டத் தொடங்குங்கள்.
கவனச் சிதறலை அகற்றுங்கள்: சமூக வலைதளங்களில் புழங்குதல் போன்ற மொபைல்போன் வழி கவனச் சிதறல்களை அகற்றுங்கள். அதற்கு போனை ஆஃப் செய்யும் பழக்கத்தைக் கூட்டுவதே சாலச் சிறந்தது.
சுய பாராட்டு: ஒரு டாஸ்கை முடித்துவிட்டால் உங்களை நீங்களே பெருமிதத்துடன் பாராட்டும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான 12 அறிகுறிகள்!
Edited by Induja Raghunathan