‘என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்' - ரஜினி ‘அரசியல் வரவில்லை' ரியாக்சன்கள் என்ன!?
ரஜினியின் ‘அரசியல் வரவில்லை' அறிவிப்புக்கு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களின் ரியாக்சன் என்ன?
நடிகர் ரஜினி தனது உடல்நிலையை கருத்தில்கொண்டு அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #Thalaiva #Rajini #Rajinikanth உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது.
அவரது ரசிகர்கள், ‘நீங்க ஆரோக்கியமா இருந்தாலே போதும்’, ‘உங்கள் உடல்நலம் எங்களுக்கு முக்கியம்’ என பல்வேறு பதிவுகளை பதிவிட்டு, அவரது முடிவை வரவேற்றுள்ளனர். இந்நிலையில், ரஜினியின் முடிவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரின் ரியாக்ஷன்களை பார்ப்போம்.
கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில்,
“தலைவா ... தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்... உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம்... நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா... உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள், நாங்கள் உங்களை எப்போதும் நேசிப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.
”சரியான முடிவை எடுத்துள்ளார் நடிகர் ரஜினி” - வைகோ எம்.பி
”ரஜினியின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றம்,” என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
”இந்திய திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த். அவர் தன் உடல்நலத்தை கருத்தில்கொண்டு எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். அவர் உடல் நலன் பெற்று கலையுலக பயணத்தை தொடர எனது வாழ்த்துகளையும் பேரன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
”ரஜினி கட்சி தொடங்கப்போவதில்லை என்ற முடிவு நல்ல முடிவு; வறட்டு கௌரவம் பார்க்காமல், உடல்நிலையை கருத்தில் கொண்டு வெளிப்படையாகக் கூறியதை வரவேற்கிறேன்,” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன்,
“நடிகர் ரஜினியை கட்டாயப்படுத்தி தமிழக அரசியல் களத்தில் தனது சித்து விளையாட்டை நடத்திட பேராசையுடன் செயல்பட்ட பாஜகவிற்கு படுதோல்வி கிடைத்துள்ளது,” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா,
“அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்ற ரஜினிகாந்த் முடிவை மமக வரவேற்கிறது. சிலருக்கு அவரது இந்த முடிவு தூக்கமில்லா இரவுகளை அளிக்கும். ஆனால் ரஜினிக்கு மன அமைதியை அளிக்கும். ரஜினிகாந்த் முழுமையான உடல் நலன் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்,” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
”அன்பார்ந்த ரஜினிகாந்த், உங்கள் முடிவு ஒவ்வொரு தமிழரின் இதயத்தையும் நொறுக்கியுள்ளது. ஆனால், உங்கள் ஆரோக்கியத்தை, நலனை விட எதுவும் பெரிதல்ல என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் நல விரும்பியாக, தோழியாக உங்கள் முடிவுக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு மிகவும் விசேஷமான, முக்கியமான நபர். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியுடன் இருங்கள்," என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
”ரஜினி ரசிகர்கள் மனோநிலைதான் எனக்கும்; சற்றே ஏமாற்றம். வருத்தம்தான்; ஆனால், என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்; எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்," என கமல் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவா.. உங்கள் ஆரோக்கியம் தான் எங்கள் அதிசயம், அது தான் அற்புதம். 1000 மடங்கு வரவேற்கிறோம்," என்றுள்ளார்.
”உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ரஜினி அரசியலை விட்டு விலகியிருப்பது நல்லதுதான்” - பொன்முடி
”கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பால் எந்த தாக்கமும் ஏற்பட போவதில்லை” - அமைச்சர் கடம்பூர் ராஜூ
#ரஜினிகாந்த் #RajinikanthPolitics வற்புறுத்தல்களுக்கு இணங்காமலும், வறட்டுக் கெளரவம் பார்க்காமலும், தன் உடல் நலத்திற்கேற்ற முடிவை எடுத்திருக்கும் திரு ரஜினி, வாழும் வரை நலமாக, மற்றவர்க்குத் துணையாக வாழ வாழ்த்திடுவோம்!” என்று சுப.வீரபாண்டியன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.