கைகுலுக்கினாலே நொறுங்கும் எலும்புகள்; அரிதான நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கலெக்டர் கனவு!
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுத ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுதினார் லத்திஷா!
ஜூன் 2ம் தேதி நடந்துமுடிந்தது யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு. ஒவ்வொரு ஆண்டும் பல லட்ச மக்கள் பல மாத பயிற்சிக்கு பின் பற்பல கனவுகளோடு இத்தேர்வுக்காக காத்திருப்பர். அவர்களில் ஒருவரே லத்தீஷா அன்சாரி. ஆனால், மற்றவர்களை போலல்ல லத்தீஷா. தேர்தல் ஹாலுக்குள் அவர் நுழைகையிலே, உடன் சற்று பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்றையும் எடுத்துச் சென்றார். ஏனெனில், லத்தீஷாவால் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் சுவாச உபகரணங்களின்றி சுவாசிக்க இயலாது...
ஆனால், கடந்த ஓராண்டுகளாக தான் இந்த பாதிப்பு... பிறக்கையிலே எளிதாய் எலும்புகள் முறிவுறும் ஆஸ்டியோஜெனெஸிஸ் இம்பெர்பெக்டா (Osteogenesis Imperfecta) எனும் அரிய நோயினால் பாதிக்கப்பட்டார் அவர். 16 கிலோ எடையும், 2 அடி உயரமும் உடைய அவரால், மற்றவர்கள் உதவியின்றி எந்தவேலையும் செய்ய இயலாது. ஆனால் இத்தடைகள் எதையுமே லத்தீஷா, அவருடைய இலக்கை நோக்கிய பயணத்தின் தடங்கல்களாக கருதியதில்லை. கேரள மாநிலம் கோட்டயத்தின் எருமேலி பகுதியைச் சேர்ந்த லத்தீஷா அன்சாரி ஒரு எம்.காம் பட்டதாரியும், கீ போர்டு பிளேயரும் கூட... கூடவே துணிச்சல்மிகு பெண்ணும்!
“நான் ஆஸ்டியோஜெனெஸிஸ் இம்பெர்பெக்டா என்ற நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளேன். பொதுவாக எளிதில் எலும்பு முறிவுறும் நோய் (Brittle Bone Disease) என்று அறியப்படுகிறது. இதனால், எனக்கு கை கொடுப்பவர்கள் சற்று வேகமாக குலுக்கினாலே என் எலும்புகள் உடைந்துவிடும். அதுபோன்ற முறிவுகள், கடந்த 23ஆண்டுகளில் பலமுறை நடந்துள்ளது. நான் பிறந்தவுடனே எனக்கு இப்படியொரு நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்துவிட்டனர்.
அப்போதிருந்தே, என் பெற்றோர்கள் எப்படி ஒரு உடையக்கூடிய கண்ணாடியை பத்திரமாக பொத்தி பார்த்து கொள்வார்களோ, அப்படி என்னை கவனித்து கொள்ள தொடங்கிவிட்டனர். எங்க அப்பாவுக்கு என் மீது அளவற்ற அக்கறை உண்டு. ஸ்கூலுக்கு தூக்கிக் கொண்டே போயிட்டு வருவார். மற்ற குழந்தைகள் போல எல்லாத்தையும் எனக்கு வழங்கி வளர்த்த என் பெற்றோர்களுக்கு தான் நன்றியை தெரிவிக்க வேண்டும்.”
கிராமத்தில் எங்க அப்பா நடத்திவரும் சின்ன டீ கடையிலிருந்து வரும் மொத்த பணத்தையும் என் படிப்புக்காகவே செலவழித்தார்” என்று மனமுருகி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் லத்தீஷா.
ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது, லத்தீஷாவுக்கு இசை மீதான ஆர்வம் பெருக, அவருடைய தந்தை உடனடியாக குருவை நியமித்து முறைப்படி கீபோர்டு இசைக்க கற்று கொடுத்துள்ளார். இப்போது லத்தீஷாவால் சொந்தமாக ஒரு மெட்டு இசைக்க முடியும். கேரள டிவி இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளார். இசை மட்டுமல்லாது லத்தீஷாவின் கைவண்ணத்தில் வரையப்பட்டுள்ள அவரது கிளாஸ் பெயிண்டிங் அனைத்தும் அடிப்பொலி ரகம். விரைவில், ஓவிய கண்காட்சி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர்.
“குழந்தைகள் கடவுள்களின் பரிசு என்பதை மக்கள் உணர வேண்டும். ஸ்பெஷல் குழந்தைகளும் பரந்த உலகத்தை பார்த்து வளர்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். தவிர்த்து, அவர்களை மூலையில் முடக்கி வைக்ககூடாது,” என்று இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்துள்ளார் அன்சாரி.
தன்னம்பிக்கை நாயகியின் அடுத்த இலக்கே யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு. கடந்தாண்டே சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்க தயாராகினார் அவர். ஆனால், நுரையீரல் ரத்த அழுத்தம் இருப்பது அச்சமயத்தில் தான் கண்டறிப்பட்டதால், அப்போதிருந்தே ஆக்ஸிஜன் உதவியுடன் வீட்டிலே அதிகபடியான நேரத்தை செலவழித்துள்ளர். ஆனால், இம்முறை தேர்வில் உறுதியாயிருந்து பங்கேற்றார்.
“அன்றாட தேவைக்காக ஆக்ஸிஜன் கான்சென்ரேட்டரும் சிலிண்டரும் பயன்படுத்தி வருகிறேன். தொடக்கத்தில் 24மணிநேரமும் ஆக்ஸிஜன் சப்ளை தேவைப்பட்டது. இப்போது, சிறிது நேரத்திற்கு சாதரணமாக சுவாசிக்க முடிகிறது. ஆனால், தேர்வில் கலந்து கொள்ள நான் ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லவேண்டும். இதற்காகவே கடந்த ஆண்டு என் சிவில் சர்வீஸ் கனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது.” என்று முன்னதாக தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் கூறிய லத்தீஷா,
தேர்வுக்கு செல்லும் முன்னே கோட்டயம் கலெக்டரின் உதவியும் கிடைத்தது. ஆம், கோட்டயம் கலெக்டர் சுதீர் பாபுவின் தலையீட்டால், தேர்வு அறைக்குள் ஆக்ஸிஜன் கான்சென்ரேட்டர் லத்தீஷாவுக்கு இலவசமாக வழங்கப்பட்டு தேர்வை வெற்றிகரமாய் எதிர்கொண்டார் அவர்.
வென்றிட வாழ்த்துகிறோம் வருங்கால கலெக்டரே!
படங்கள் உதவி: லத்தீஷா அன்சாரி பேஸ்புக் பக்கம்