காளிமார்க் நிறுவனத்தை வாங்குகிறதா ரிலையன்ஸ்? விரைவில் முக்கிய ஒப்பந்தம்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல குளிர்பான தயாரிப்பு நிறுவனமான காளிமார்க்கை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல குளிர்பான ப்ராண்ட் ’காளிமார்க்’ நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் கன்சியூமர் புரோடெக்ட் லிமிடெட் (RCPL) சென்னையை தளமாகக் கொண்ட போவோன்டோ குளிர்பான தயாரிப்பு நிறுவனமான ’காளி ஏரேட்டட் வாட்டர் ஒர்க்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸின் ’கேம்பா’ குளிர்பானங்களைத் தயாரித்து விற்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கேம்ப கோலா:
’Campa Cola’ 1970-80’களில் இந்தியாவின் பிரபலமான குளிர்பான பிராண்டாக திகழ்ந்தது. 1990-களில் உலகமயமாக்கல் நடவடிக்கைக்குப் பிறகு கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களின் குளிர்பானங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்த நிலையில், கேம்ப கோலாவின் சந்தை சரிந்தது. இதற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க தீர்மானித்த ரிலையன்ஸ் குழுமம், தனது ரிலையன்ஸ் கன்சியூமர் மூலமாக மீண்டும் கேம்ப் கோலா-வை வாங்கி அதனை இந்தியாவின் பிரதான பிராண்ட்டாக மாற்ற முயற்சித்து வருகிறது.
குளிர்பான விற்பனையிலும் ரிலையன்ஸ் தனது வெற்றிகரமான ஜியோ ஃபார்முலாவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பின்பற்றி வருகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக, தீவிரமான விலை நிர்ணயம் பின்பற்றப்பட்டது.
கோகோ கோலா மற்றும் பெப்சி தயாரிப்புகளின் விலையில் பாதிக்கும் குறைவான விலையில் கேம்ப கோலா விற்கிறது. கூல்டிரிங்க்களுக்கு மிகவும் முக்கியமான கோடை சீசனில் கடும் போட்டி நிலவுவதால், கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை குறைத்து வருகின்றன.
காளிமார்க் - ரிலையன்ஸ்:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேம்ப கோலா நிறுவனத்தை வாங்குவதற்கு முன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காளி ஏரேட்டட் வாட்டர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திகளின் படி,
“சென்னையை தளமாகக் கொண்ட போவோன்டோ குளிர்பானங்கள் தயாரிப்பாளரான காளி ஏரேட்டட் வாட்டர் நிறுவனம், ரிலையன்ஸின் கேம்ப கோலா குளிர்பானங்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்கான உற்பத்தி மற்றும் விநியோக ஒப்பந்தத்தில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது,” என செய்தி வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபலமான கோலா பிராண்டுகளில் ஒன்றான போவோன்டோ, கோகோ கோலா மற்றும் பெப்சிக்கு டப் கொடுக்கும் வகையில் விற்பனையாகி வருகிறது. இதனைத் தவிர காளிமார்க் நிறுவனம் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு சுவை கொண்ட பானங்களையும் தயாரிப்பதோடு, பழச்சாறுகள் மற்றும் தேங்காய் தண்ணீர் விற்பனை செய்கிறது. காளி ஏரேட்டட் வாட்டர் ஒர்க்ஸ் எட்டுக்கும் மேற்பட்ட உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது.
இறுதிக்கட்டத்தில் பேச்சுவார்த்தை:
ரிலையன்ஸ்-காளி ஏரேட்டட் வாட்டர் ஒர்க்ஸ் இடையே உத்தேச ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக யுவர் ஸ்டோரி தமிழ் சார்பில் காளி மார்க் நிறுவன தரப்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது,
“பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இறுதி கட்டத்தை எட்டியதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் காளிமார்க் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், கேம்ப கோலா, காளி ஏரேட்டட் வாட்டர் ஒர்க்ஸ் உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்படும். மேலும், ரிலையன்ஸ், காளி ஏரேட்டட் வாட்டர் ஒர்க்ஸ் உற்பத்தித் திறன் மற்றும் வலுவான விநியோக அமைப்பின் சப்போர்ட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - எக்கனாமிக்ஸ் டைம்ஸ்
நூற்றாண்டை கடந்து குளிர்பானத் தொழிலில் சந்தையை நிலைநாட்டிய ‘காலிமார்க்’ ப்ராண்டின் கதை!