2023-24-ல் 42,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - வல்லுனர்கள் கவலை!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 42,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது, இதன் மூலம் அதன் பணியாளர்கள் எண்ணிக்கை 11% குறைந்துள்ளது.
2023-24-ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 42,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளதாக எக்கானமிக் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அங்கு பணியாளர்கள் எண்ணிக்கை 11% குறைந்துள்ளது. அதிகரிக்கும் செலவுகளைக் குறைப்பதற்காக ஆட்குறைப்பு என்று கூறும் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை ஆட்குறைப்புக்குப் பிறகு 3.47 லட்சமாக உள்ளது. மேலும், புதிய வேலை வாய்ப்புகளும் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் குறைந்துள்ளது.
ரிலையன்ஸின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை அதன் வர்த்தக சரிசெய்யும் உத்தி என்று நிறுவனம் கூறினாலும் இது கவலைகளை அதிகரித்துள்ளது. ரிலையன்ஸின் சில்லரை விற்பனை வர்த்தகம் மட்டுமே அதன் ஒட்டுமொத்த ஊழியர்களில் 60%-ஐக் கொண்டுள்ளது. இந்த சில்லரை விற்பனைப்பிரிவுதான் இந்த ஆட்குறைப்பில் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகப்பிரிவில் ஊழியர்களின் எண்ணிகை 2.45 லட்சத்திலிருந்து ரூ.2.07 லட்சமாகக் குறைந்துள்ளது.
இதனுடன் ரிலையன்ஸ் ஸ்டோர்களின் மூடல்கள் மற்றும் சில்லறை நெட்வொர்க் விரிவாக்கத்தின் மந்த நிலையும் சேர்ந்து கொண்டன. ரிலையன்ஸ் ரீடெய்ல் FY23 இல் 3,300 க்கும் மேற்பட்ட புதிய கடைகளைச் சேர்த்தது, FY24ல் சுமார் 800 ஸ்டோர்களை மட்டுமே சேர்த்தது, மொத்த எண்ணிக்கையை 18,836 ஆக ஆக்கியது.
தலைத்தொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோவும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது, ஊழியர்களின் எண்ணிக்கை FY23 இல் 95,326 லிருந்து FY24 இல் 90,067 ஆகக் குறைந்துள்ளது. இந்த குறைப்புக்கள் இருந்தபோதிலும், RIL இன் ஒட்டுமொத்த ஊழியர் நலன்களுக்கான செலவு ஆண்டுக்கு ஆண்டு 3% அதிகரித்து ரூ.25,699 கோடியாக உள்ளது.
ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இது போன்று ஆட்குறைப்பை மேற்கொள்ளும் போது அது பரந்துபட்ட பொருளாதாரத்திற்கு சவால்களை ஏற்படுத்தும். நுகர்வோர் செலவினங்களை பெரிதாகக் கொண்டுள்ள சில்லரை விற்பனைத் துறையில் இதன் பாதிப்பு அதிகமானால் பொருளாதார ஸ்திரத்தன்மையும் ஆட்டம் காணலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏற்கெனவே இந்தியாவின் வேலை வாய்ப்பு உருவாக்க விகிதம் சரிவடைந்து வேலை உருவாக்கத் தேவைகள் அதிகரித்தவண்ணம் உள்ள நிலையில் ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்களின் ஆட்குறைப்பு இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்திற்கு கடும் சவால்களை அளிப்பதாகும்.
இது குறித்து ஷாதி டாட் காம் இணையதள நிறுவனர் அனுபம் மிட்டல் தன் சமூக வலைத்தளத்தில் கூறும்போது,
“42 ஆயிரம் வேலைகள் பறிபோனதா? இந்தச் செய்தி ஏன் மவுனப்படுத்தப்படுகிறது? இது பொருளாதார மற்றும் அரசியல் வட்டாரங்களில் எச்சரிக்கை மணியை ஒலித்திருக்க வேண்டுமே. பெரு நிறுவனங்கள் இப்படி ஊழியர்களை பணி நீக்கம் செய்தால் நாட்டின் வேலை வாய்ப்புச் சூழல் இன்னும் மோசமாகிவிடும். நம் நாட்டுக்கு ஆண்டுக்கு 80 லட்சம் முதல் 1 கோடி வரை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. ரிலையன்ஸின் முடிவை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. மாறாக நமக்கு தைரியமான சில திட்டங்கள் தேவை என்கிறேன்,” என்றார்.
கார்ப்பரேட் வரிகளைக் குறைப்பதற்குக் காரணம் அவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குகிறார்கள் என்பதற்காகத்தான் என்று நிதித்துறை விளக்கம் அளித்து வந்தாலும் அதற்கு மாறான சூழ்நிலைகளைத்தான் உருவாகி வருகிறது. கார்ப்பரேட் வரிச்சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு வேலைகளையும் குறைப்பதில்தான் போய் முடிந்துள்ளது, என்று ரிலையன்ஸ் உள்ளிட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர்.