கொரோனா வார்டுகளில் கைக்கொடுக்கும் திருச்சி நிறுவன ரோபோக்கள்!
தமிழக பொறியாளர்களின் இந்த எளிமையான தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு கொரோனா சமயத்தில் உற்ற நண்பனாக உதவி வருகிறது!
தொழில்நுட்பம் என்பது விஞ்ஞான அறிவியலின் வளர்ச்சியாக மட்டும் இல்லாமல் பேரிடர் காலங்களில் தக்க உதவியும் செய்ய வேண்டும். அப்படி வடிவமைக்கப்படும் தொழில்நுட்பமே மனித வாழ்க்கையின் உண்மையான நண்பன்.
தொழில்முனைவுகளில் இளைஞர்கள் புதுப்புது ஸ்டார்ட் அப்’களை முயன்று பார்க்க தமிழக பொறியாளர்கள் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய நிறுவனம் இப்போது உலகமே கண்டு மிரண்டு கொண்டிருக்கும் கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவ வந்திருக்கிறது.
யார் இவர்கள், என்ன ஸ்டார்ட் அப் இவர்களுடையது?
திருச்சியைச் சேர்ந்த முகமது ஆஷிக் ரஹ்மானிடம் அவருடைய ஸ்டார்ட் அப் குறித்து நேர்காணல் கண்டது யுவர் ஸ்டோரி தமிழ்.
கொரோனா வார்டுகளுக்காக ரோபோக்களைத் தயாரிக்கும் பணிக்கு இடையே நம்மிடம் பேசியவர், நான் சென்னை கிரசென்ட் கல்லூரியில் 2016ம் ஆண்டு ஈசிஈ படித்தேன். படிக்கும் காலத்தில் இருந்தே ரோபோடிக்ஸ்ல் மிகுந்த ஆர்வம் இருந்தது. எங்களுடைய கல்லூரி இறுதியாண்டு ப்ராஜெக்ட்டாக DRDOவிற்கு ஒரு வடிவமைப்பை உருவாக்கினோம்.
இந்த ஆர்வத்தின் தொடர்ச்சியாக படித்து முடித்தவுடன் நானும் எனது நண்பர்கள் பவித்ரன், சல்மான்3 பேரும் சேர்ந்து 2016 ஜூலை மாதத்தில் Propeller technologies என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினோம்.
இந்த நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனர்கள் ஆசிக் மற்றும் சல்மான், இவர்களுடன் பணியாற்றும் பங்குதாரர் பவித்ரன்.
“தொடக்கத்தில் பொறியியல் மாணவர்களுக்கு ப்ராஜெக்ட்டுகளை செய்து கொடுத்து வந்தோம். நாங்கள் 3 பேருமே பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் தொழில்நுட்பத்தை பயிற்றுவிப்பதில் சிறந்தவர்கள். எவ்வளவு கடினமான தொழில்நுட்பமாக இருந்தாலும் அதனை வெகுஜன மக்களுக்கும் புரியும் விதமாக எங்களால் விளக்கிக் கூற முடியும்,” என்றார்.
இவையெல்லாம் சிறு சிறு திட்டங்கள் என்றாலும் ஸ்டார்ட் அப்’பின் இலக்கு என்ன என்று தொடர்ந்து சிந்தித்து வந்தோம். பல தேடல்ளின் முடிவாக பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை எளிய முறையில் கற்றுத் தருவது குறித்த ஆய்வைத் தொடங்கினோம்.
பள்ளியில் மாணவர்கள் பயிலும் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் அறிவை நிஜ வாழ்வில் எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்று ஆராய்ந்தோம். இந்த அறிவியல் அறிவின் மூலம் மாணவர்கள் புதிய படைப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தோம். அறிவியல் பிடிக்காத மாணவர்களுக்கும் அதனை பிடித்தவையாக மாற்ற கார்ட்டூர் கேரக்டர்கள் மூலம் பாடத்தை தொடர்பு படுத்தத் தொடங்கினோம். அது மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்கிறார் ஆஷிக்.
5ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு டாப் 5 தொழில்நுட்பங்களான ட்ரோன், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் 3டி பிரிண்டிங் பற்றி கற்றுத் தரத் தொடங்கினோம். ‘கிட்ஸ் டெக்னோப்ரூனர்களை உருவாக்குதல்’ என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சியை நடத்தினோம். இதன் மூலம் பள்ளி மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே ஒரு புதிய வடிவமைப்பை உருவாக்கி ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக எப்படி ஆக முடியும் என்பதே இதன் முக்கிய அம்சம்.
இந்தத் திட்டத்தை பள்ளிகளிடம் எடுத்துக் கூறி சில பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றினோம். தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் தொழில்நுட்பக் கூடங்களை வடிவமைத்துத் தரும் பணியையும் எடுத்து செய்து வந்தோம்.
நாங்கள் இந்தத் திட்டத்தை தொடங்கிய காலத்தில் மத்திய அரசும் பள்ளிகளில் தொழில்நுட்பக் கூடங்களை ‘அடெல் டிங்கரிங் லேப்’ என்ற பெயரில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. அந்தக் கூடங்களை அமைத்துத் தர தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக propeller technologies மாறியது.
தொழில்நுட்பக் கூடங்கள் அமைப்பதற்கான பொருட்களை நாங்களே வாங்கி சிறப்பானவற்றை அமைத்துக் கொடுப்பதோடு அங்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சிகளையும் நாங்களே வழங்கினோம். சென்னை முதல் நாகர்கோவில் வரை தமிழகத்தில் சுமார் 35 பள்ளிகளுக்கு தொழில்நுட்பக் கூடங்களை அமைத்துத் தந்ததன் மூலம் பல்வேறு இளம் படைப்பாளர்கள் உருவாகியுள்ளனர் என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் ஆஷிக்.
தொழில்நுட்பத்தை எளிதில் புரிந்து கொண்ட மாணவர்கள் தாங்களே சிறு சிறு ப்ரொஜெக்ட்டுகளை உருவாக்கி அதனை பள்ளிகளுக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ விற்கும் சில இளம் தொழில்முனைவர்களும் பள்ளிக்குள்ளேயே உருவாகியுள்ளனர்.
மேலும் தொழில்நுட்ப அறிவு பெற்ற மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுள்ளனர். வாழ்வாதாரம், ப்ரொபெல்லர் விங்ஸ் என்ற பெயர்களில் பள்ளிகளில் கண்டுபிடிப்பாளர்கள் குழு இயங்கி வருகிறது. வாழ்வாதாரம் குழுவின் சிறப்பு அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு தருவது. உதாரணத்திற்கு திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பனியன் மடிக்க இயந்திரம், மணப்பாறை முறுக்கு சுட சிறப்பு இயந்திரம் என பல புதிய படைப்புகளை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை புகட்டுவதோடு தொழிற்சாலைகளுக்கு ரோபோ மற்றும் 20 கிலோ எடை சுமந்து செல்லக்கூடிய ட்ரோன்களையும் உருவாக்கினோம். ஆந்திராவில் ஸ்ரீ விஷ்ணு டெக்னாலஜி கல்லூரியுடன் இணைந்து ட்ரோன் தொழில்நுட்ப ஆராய்ச்சியை செய்து வருகிறோம். அங்கு இதற்காக சிறப்பு தொழில்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களில் தொடங்கி தொழிற்சாலை வரையிலான தெளிவான தொழில்நுட்ப அறிவை எங்களால் கொடுக்க முடியும்.
திருச்சியில் ஒரு சிறிய அறையில் எந்த முதலீடும் இல்லாமல் மூளையை மட்டுமே நம்பி தமிழக பொறியாளர்கள் தொடங்கிய Propeller technologies இன்று சென்னை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் ஆந்திரா, கேரளாவிலும் செயல்படுகிறது. 3 பொறியாளர்களுடன் தொடங்கிய ஸ்டார்ட் அப் பயணத்தில் இன்று 20 பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்காக இவர்கள் கண்டுபிடித்த ரோபோ தான் Zafi, இதனை டெலிவரி கொடுப்பதற்குள் கொரோனோ நம்மை பிடித்து உலுக்கி எடுக்க இதே ரோபோக்களை பேராபத்தில் உதவும் நண்பனாக மாற்றியிருக்கின்றனர் இந்த படைப்பாளிகள்.
கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுடன் மருத்துவப் பணியாளர்கள் அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டியள்ளது.
நோயாளிகளுக்கு உணவு, தண்ணீர், மருந்து மாத்திரைகள் வழங்குவதற்காக பணியாளர்கள் செல்லும் போது இவர்களுக்கும் நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. நோயாளி உதவியாளர்கள் இடையேயான சந்திப்புகளை குறைக்கும் விதமாக Zafi ரோபோக்களை மருத்துவமனைகளில் செயல்படுத்த தமிழக சுகாதாரத்துறை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 3 ரோபோக்களும், திருச்சி அரசு மருத்துவமனையில் 2 ரோபோக்களும் சேவையில் களமிறங்கியுள்ளன.
Zafi ரோபோக்களை யார் வேண்டுமானாலும் எளிதில் இயக்கலாம். செயலி மூலம் அவற்றை பொறியாளர்கள் கட்டுபடுத்துகின்றனர். நோயாளிகளின் அறைக்குச் சென்று அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி விட்டு வரும்.
Zafi ரோபோவை செயலோட்டம் செய்து பார்த்த போது மருத்துவர்களுக்கு அவை திருப்தியளிப்பதாக இருந்தது எனினும் நாங்கள் மேலும் சில அம்சங்களை அதில் சேர்க்க விரும்பியதால் 2 நாட்களில் Zafi medic, Zafi go என்ற 2 ரோபோக்களை வடிவமைத்தோம்.
Zafi 4 அடி உயரத்தில் இருக்கும் ரோபோ 8 கிலோ எடை வரை சுமந்து செல்லும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும். 250 மீட்டர் வரை நோயாளிகளுக்குத் தர வேண்டிய உணவு, தண்ணீர் பாட்டில் மற்றும் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து அனுப்ப முடியும். மருத்துவர்கள் நோயாளிகள் அடிக்கடி சந்திக்கும் சந்திப்பைக் குறைத்து மருத்துவப் பரிசோதனைகளுக்காக மட்டுமே கொரோனா பாதித்தவர்களை சந்திக்கும் வாய்ப்பை இந்த ரோபோ வழங்குகிறது. Zafi go-ல் பல ட்ரேகள் பொருத்தப்பட்டிருக்கும்.
ரோவர் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ள Zafi medic 1.5 கி.மீட்டர் தூரம் வரை 20 கிலோ எடை சுமந்து செல்லும். இதில் கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது, வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டிருப்பவர்களுக்கு மனிதர்களே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் Zafi medic உதவும் என்கிறார் ஆஷிக்.
ரோபோக்களின் தேவை அதிக அளவில் இருப்பதால் திருச்சியில் இருக்கும் பொறியாளர்களின் உதவியைக் கேட்டுள்ளனர் இவர்கள். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றினால் அதிக அளவிலான ரோபோக்களை தயாரித்து பேரிடர் காலத்தில் பேருதவி அளிக்க முடியும் என்ற உத்வேகத்துடன் இயங்கி வருகின்றனர் இந்த பொறியாளர்கள்.
திருச்சியில் இருக்கும் பொறியாளர்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பினால் www.propellertechnologies.in என்ற முகவரிக்கு உங்களது விவரங்களை அனுப்பினால் அவர்களே உங்களை தொடர்பு கொள்வார்கள்.