பொருளாதாரத்தை வலுப்படுத்த 9 கூடுதல் நடவடிக்கைகளை அறிவித்த ரிசர்வ் வங்கி!

கோவிட்-19 பெருந்தொற்றால், நிலையற்றத் தன்மை ஏற்பட்டிருக்கும் காலத்தில், நிதி ஓட்டத்தை சுலபமாக்கவும், நிதி நிலைத்தன்மையைக் காக்கவும் கூடுதலாக ஒன்பது நடவடிக்கைகளை அறிவித்த இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்.

23rd May 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
"அடிவானம் மிகவும் இருட்டாக இருக்கும் போதும், மனித உணர்வுகள் தரையோடு நசுக்கப்பட்டிருக்கும் போதும் தான் நம்பிக்கை பிரகாசித்து நம்மை மீட்க வரும்," என்றார் மகாத்மா காந்தி.

கோவிட்-19 பெருந்தொற்றால் குழப்பமான, நிலையற்றத் தன்மை ஏற்பட்டிருக்கும் காலத்தில், நிதி ஓட்டத்தை சுலபமாக்கவும், நிதி நிலைத்தன்மையைக் காக்கவும் கூடுதலாக ஒன்பது நடவடிக்கைகளை அறிவித்த இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், தேசத் தந்தை 1929ஆம் ஆண்டு சொன்ன மேற்கண்ட வரிகளில் இருந்து தான் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் உள்வாங்கிக் கொண்டார்.

ரிசர்வ் வங்கி

மார்ச் 27, 2020 அன்றும், ஏப்ரல் 17, 2020 அன்றும் இந்திய ரிசர்வ் வங்கியால் ஏற்கனவே செய்யப்பட்ட அறிவிப்புகளின் தொடர்ச்சியாக இன்றைய அறிவுப்புகள் அமைந்தன.


இணைய உரை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்புகளை செய்த ஆளுநர், அனைத்துத் தடைகளையும் தாண்டி வெளியில் வருவதற்கு, இந்தியாவின் எதிர்த்து நிற்கும் சக்தியின் மீதும், திறமையின் மீதும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.


கடினமான இன்றைய சோதனைகளை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்று அவர் நம்பிக்கையுடன் பேசினார்.

"பொருளாதாரத்தை முன்னணியில் நின்று பாதுகாப்பதற்கான அறைகூவலுக்கு மத்திய வங்கிகள் பதிலளிக்க, இது தான் தருணம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

ரெப்போ விகிதம் 40 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பு


வளர்ச்சிக்குப் புத்தாக்கம் அளித்து கோவிட்-19 பாதிப்பைக் குறைக்கும் அதே சமயத்தில், பண வீக்கமும் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், முக்கியக் கொள்கை விகிதங்களின் குறைப்பை ஆளுநர் அறிவித்தார்.


ரெப்போ விகிதம் 40 புள்ளிகள், அதாவது 4.4 சதவீதத்தில் இருந்து 4.0 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கிடையிலான தினசரி வணிகத்தின் போது, சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சரிசெய்வதற்காக அறிமுகப்படுத்தப்ட்ட விளிம்பு நிலை வசதி விகிதமான எம் எஸ் எஃப் 4.65 சதவீதத்தில் இருந்து 4.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ரிவெர்ஸ் ரெப்போ விகிதம் 3.75 சதவீதத்தில் இருந்து 3.35 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

"வளர்ச்சிக்கான ஆபத்துகள் அதிகமாகவும், பணவீக்கத்துக்கான ஆபத்துகள் குறுகிய கால அளவிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நம்பிக்கையை ஊட்டுவதும், நிதி நிலைமைகளை மேலும் சுலபமாக்குவதும் அவசியம் என நிதிக் கொள்கைக் குழு கருதுகிறது.

இது நிதி ஓட்டத்தைக் கட்டுப்படியாக்கக்கூடிய விகிதங்களில் வைப்பதோடு முதலீட்டு எண்ணங்களையும் மீண்டும் உருவாக்கும். இதைக் கருத்தில் கொண்டு தான் ரெப்போ விகிதத்தை 40 புள்ளிகள், அதாவது 4.4 சதவீதத்தில் இருந்து 4.0 சதவீதமாகக் குறைக்க நிதிக் கொள்கைக் குழு வாக்களித்தது," என்று ஆளுநர் தெரிவித்தார்.

பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளையும் அறிவித்த தாஸ், கொள்கை விகிதங்கள் குறைப்பை இவை ஆதரிப்பதோடு, ஒன்றுக்கு ஒன்று பலம் சேர்ப்பதாகவும் தெரிவித்தார்.


அறிவிக்கப்படும் நடவடிக்கைகளின் இலக்குகள் என்று கீழ்கண்டவற்றை அவர் மீண்டும் தெரிவித்தார்:


* நிதி அமைப்பையும், நிதிச் சந்தைகளையும் வலுவாகவும், பணப்புழக்கத்துடனும், எளிதாக இயங்கும் வகையிலும் வைக்க,

* அனைவரும், குறிப்பாக நிதிச் சந்தைகளால் இணைத்துக் கொள்ளப்படாதோர், அணுகும் விதத்தில் நிதி இருப்பதை உறுதி செய்ய,

* நிதி நிலைத்தன்மையைப் பாதுகாக்க,


சந்தைகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகள்-


* சிட்பிக்கான மறுக்கடன் வசதி இன்னொரு 90 நாட்களுக்கு நீட்டிப்பு. கட்டுப்படியாகக் கூடிய கடனின் அதிகரித்த விநியோகம் சிறு நிறுவனங்களை அடைவதை உறுதி செய்யும் விதமாக, இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை ரெப்போ விகிதத்தில் சிறப்பு மறுகடன் வசதியாக ரூ.15,000 கோடியை 90 நாட்களுக்கு ஏப்ரல் 17, 2020 அன்று சிட்பிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இது தற்போது இன்னொரு 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


* தாமாக முன்வந்து தக்கவைத்துக் கொள்ளும் (VRR) முறையில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகளுக்கு விதிகள் தளர்த்தல்.


அதிக முதலீடுகளுக்காக வழங்கப்படும் உத்தரவாதங்களுக்கு எளிமையான விதிகளை அளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் ஒரு வசதி தான் VRR ஆகும். முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஒதுக்கப்பட்ட முதலீட்டு அளவில் குறைந்தது 75 சதவீதத்தை மூன்று மாதத்தில் முதலீடு செய்ய விதிகள் கோருகிறது. இது தற்போது ஆறு மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளை ஆதரிக்க நடவடிக்கைகள்


  • ஏற்றுமதியாளர்கள் தற்போது அதிகக் காலத்துக்கு வங்கிக் கடன்களைப் பெறலாம்.


  • ஜூலை 31, 2020 வரை மேற்கொள்ளப்படும் பட்டுவாடாக்களுக்கு, வங்கிகளால் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தையக் கடனுக்கான அதிகபட்ச அனுமதிக் காலம் ஒரு வருடத்தில் இருந்து 15 மாதங்களாக அதிகரிக்கப்படுகிறது.


  • எக்சிம் வங்கிக்குக் கடன் வசதி


இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு கடன் அளித்து, வசதிகள் வழங்கி மேம்படுத்துவதற்கு, ரூ.15,000 கோடி கடனை எக்சிம் வங்கிக்கு ஆளுநர் அறிவித்தார். 90 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கடன் வசதி, ஒரு வருடம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். வங்கியை அதன் வெளிநாட்டுப் பண வளத் தேவைகளை, குறிப்பாக அமெரிக்க டாலராக மாற்றிக் கொள்ளும் வசதியை, பூர்த்தி செய்துக் கொள்வதற்காக இந்த வசதி அளிக்கப்படுகிறது.


  • இறக்குமதிகளுக்கு செலுத்துவதற்காக இறக்குமதியாளர்களுக்கு அதிக நேரம்.


இந்தியாவில் சாதரண இறக்குமதிகளுக்கான இறக்குமதிக் கட்டணத்துக்கான கால அளவு (தங்கம்/வைரம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள்/நகைகள் தவிர) சரக்குத் தேதியில் இருந்து ஆறு மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 31, 2020க்கு முன்பு செய்யப்பட்ட இறக்குமதிகளுக்குப் பொருந்தும்.


நிதிச் சுமையை எளிதாக்க நடவடிக்கைகள்


  • அடுத்த 3 மாதங்களுக்கு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நீட்டிப்பு.


ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில ஒழுங்குமுறை நடவடிக்கைகளை, இன்னொரு மூன்று மாதங்களுக்கு, அதாவது ஜூன் 1, 2020இல் இருந்து ஆகஸ்டு 31, 2020 வரை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.


இந்த நடவடிக்கைகள் தற்போது மொத்தமாக இன்னொரு ஆறு மாதங்களுக்கு பொருந்தும் (அதாவது, மார்ச் 1, 2020இல் இருந்து ஆகஸ்டு 31, 2020 வரை) மேற்சொன்ன ஒழுங்குமுறை நடவடிக்கைகள் வருமாறு:


(அ) கால எல்லைக்குள்ளான கடன் தவணைகளுக்கு 3 மாதத் தடை.

(ஆ) பணி மூலதன வசதிகளுக்கு வட்டி செலுத்துவதில் இருந்து 3 மாதம் தள்ளிவைப்பு,

(இ) விகிதங்களைக் குறைப்பதன் மூலமாகவோ அல்லது பணி மூலதன சக்கரத்தை மறுமதிப்பீடு செய்வதன் மூலமாகவோ பணி மூலதன நிதித்தேவைகளை சுலபமாக்குதல்,

(ஈ) கடன் தகவல் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கண்காணிப்புத் தகவல் மற்றும் தகவலில் 'கடன் கட்டத் தவறியவர்' என்று வகைப்படுத்தப்படுவதில் இருந்து விலக்கு,

(உ) அழுத்தத்தில் உள்ள சொத்துகளுக்கான தீர்வு காலகெடுக்களில் நீட்டிப்பு, மற்றும்

(ஊ) மூன்று மாதத் தடைக் காலத்தை சொத்து வகைப்படுத்துதலில் இருந்து நிறுத்திவைப்பு மற்றும் விலக்குதல் இன்னும் பல.

பணி மூலதன விகிதங்களை அவற்றின் பழைய நிலைகளுக்கு மாற்ற மார்ச் 31, 2021 வரை கடன் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே போல், பணி மூலதன சக்கரத்தை மறுமதிப்பீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளும் மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
  • பணி மூலதனம் மீதான வட்டியை வட்டியுடன் கூடிய காலக்கெடுவுள்ள கடனாக மாற்றும் வசதி.


பணி மூலதனம் மீது சேர்ந்துள்ள வட்டியை நிதி வசதி அளிக்கப்பட்ட வட்டியுடன் கூடிய காலக்கெடுவுள்ள கடனாக மாற்றிக் கொள்ள ஆறு மாதங்களுக்கு (மார்ச் 1, 2020இல் இருந்து ஆகஸ்ட் 31, 2020 வரை) கடன் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதை மார்ச் 31, 2021 வரையிலான இந்த நிதி ஆண்டுக்குள் முழுவதுமாகத் திருப்பி செலுத்தி விட வேண்டும்.

பெருநிறுவனங்களுக்கு நிதி ஓட்டத்தை அதிகரிக்கக் குழு வெளிக்காட்டுதல் அளவு அதிகரிப்பு.


குறிப்பிட்ட ஒரு பெருநிறுவனக் குழுமத்துக்கு வங்கிகள் அளிக்கும் அதிகபட்சக் கடன் வங்கியின் தகுதி மூலதன அளவில் 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் இருந்து பணத்தைப் புரட்டுவதற்கு பெருநிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தங்களது நிதித் தேவைகளை பெருநிறுவனங்கள் பூர்த்தி செய்து கொள்ள இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 30, 2021 வரை இந்த அதிகரிக்கப்பட்ட அளவு செல்லுபடியாகும்.


மாநில அரசுகள் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களை எளிதாக்க நடவடிக்கைகள்.


ஒருங்கிணைந்த மூழ்கும் நிதியில் இருந்து கடன் பெற மாநிலங்களுக்கு அனுமதி.


தங்களது கடன்களைத் திரும்பச் செலுத்தும் வசதிக்காக மாநில அரசுகளால் பராமரிக்கப்படுவது ஒருங்கிணைந்த மூழ்கும் நிதி ஆகும். சந்தைகளில் இருந்துப் பெறப்பட்ட கடன்களை 2020-21இல் திரும்பச் செலுத்த மாநிலங்களுக்கு வசதி அளிக்கும் விதமாக, இந்த நிதியில் இருந்து பணத்தை எடுப்பதற்காக இதை நிர்வகிக்கும் விதிகள் தற்போது தளர்த்தப்படுகின்றன. உடனடியாக அமலுக்கு வரும் திரும்ப எடுக்கும் விதிகளின் மாற்றம், மார்ச் 31, 2021 வரை அமலில் இருக்கும். மிச்சமுள்ள நிதி குறைதலை புத்திசாலித்தனமாக சமன்படுத்தி இந்த தளர்வு செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.


பொருளாதார மதிப்பீடு


உலகப் பொருளாதாரத்தைப் பற்றிய மதிப்பீட்டை வெளிப்படுத்திய ஆளுநர், பெரும் பொருளாதார மற்றும் நிதி நிலைமைகள் அனைத்து விதங்களிலும் மிகவும் கடினமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். உலகப் பொருளாதாரம் தடுக்க முடியாத அளவுக்கு மந்தநிலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.


இரண்டு மாத பொது முடக்கத்தின் காரணமாக உள்நாட்டுப் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

"தொழிற்சாலை உற்பத்தியின் 60 சதவீதத்துக்கு பொறுப்பேற்கும் முதல் ஆறு தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்கள் பெரும்பாலும் சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலங்களில் உள்ளன. தேவை குறைந்து விட்டது, உற்பத்தி குறைந்து விட்டது, இவை நிதி வருவாயை பாதித்துள்ளன. தனியார் நுகர்வு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.”

சூழ்ந்துள்ள இந்த இருளுக்கு நடுவிலும், விவசாயமும் அதை சார்ந்த நடவடிக்கைகளும் ஒரு நம்பிக்கை ஒளியைத் தருவதாக ஆளுநர் தெரிவித்தார். இந்திய வானிலைத் துறையால் கணிக்கப்பட்டுள்ள இயல்பான தென்மேற்குப் பருவமழையும் நம்பிக்கைக் கீற்றைத் தருகிறது.


தேவை குறைந்துள்ள போதிலும், ஜனவரி 2020 உச்சத்தில் இருந்து தொடர்ந்து இரண்டாவது மாதமாக மார்ச்சில் குறைந்த உணவுப் பணவீக்கம், ஏப்ரலில் திடீரென்று 8.6 சதவீதத்துக்கு விநியோக சிரமங்களால் ஏறியுள்ளதாக, முழுமைப் பெறாத தகவல்களின் அடிப்படையில் ஆளுநர் சுட்டிக்காட்டினார். உலக உற்பத்தியையும், தேவையையும் கொவிட்-19 முடக்கி உள்ளதால், இந்தியாவின் பொருள் ஏற்றுமதியும் இறக்குமதியும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது.


பணவீக்கக் கண்ணோட்டம் மிகவும் நிலையற்று இருப்பதாக நிதிக் கொள்கைக் குழு கணித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். பொது முடக்கத்தின் நிலையைப் பொறுத்தும், கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு பின்னர் விநியோகச் சங்கிலிகள் பழைய நிலைக்கு வர எடுத்துக் கொள்ளும் நேரத்தைப் பொறுத்தும், உணவு விலைகள் ஏப்ரலில் சந்தித்துள்ள விநியோக அதிர்ச்சி அடுத்த சில மாதங்களுக்குத் தொடரும். பருப்புகளின் விலை உயர்வு கவலை அளிப்பதாக உள்ளதால், இறக்குமதிக் கட்டணங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட சரியான நிர்வாக இடையீடுகள் சரியான நேரத்தில் தேவைப்படுகிறது.


பொருளாதாரம் பயணிக்கப் போகும் பாதையைப் பற்றி பேசிய ஆளுநர், குறைந்தத் தேவையும், விநியோகச் சிக்கல்களும் இணைந்து ஆண்டின் முதல் பாதியில் பொருளாதார நடவடிக்கையை பாதிக்கும் என்று தெரிவித்தார். குறிப்பாக வருடத்தின் இரண்டாவது பாதியில் பொருளாதார நடவடிக்கை படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையிலும், சாதகமான அடிப்படை விளைவுகளைக் கருத்தில் கொண்டும், தற்போது எடுக்கப்பட்டுள்ள நிதி சார்ந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் 2020-21ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் படிப்படியாக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.


இந்த அனைத்து நிலையற்றத் தன்மைகளையும் கருத்தில் கொண்டு, 2020-2021இன் இரண்டாம் பாதியில் வளர்ச்சியில் சில சாதகமான தன்மைகளோடு, 2020-2021இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட் தாக்கம் எந்த அளவுக்கு சமமாகி, சரியாகிறது என்பதைப் பொறுத்தே பெரும்பாலானவை அமையும்.


தகவல்: பிஐபி

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

Our Partner Events

Hustle across India