ரெடிமேட் பூஜை, இ-அர்ச்சனை, கூரியரில் பிரசாதம்; ஆன்மீக சேவைகள் வழங்கும் தஞ்சை நிறுவனம்!
பரிகார பூஜைகள், ஹோமம், இ-அர்ச்சனை, புனித யாத்திரை, கோயில்களில் தரிசன டிக்கெட் புக்கிங் என பல சேவைகளை வழங்கும் ‘27 Mantraa'
கையில் ஸ்மார்ட்போனும், நண்பர்கள், உறவினர்களுடன் ஃபேஸ்புக்கில் உரையாடினாலும், பாரம்பரியம் மற்றும் குடும்ப வழக்கங்களை அந்தந்த நேரத்தில் செவ்வனே செய்துவிடும் அன்பர்களும் இந்த நவீன உலகத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பூஜை, ஹோமம், கோயில்கள் சம்மந்தமான விஷயங்களும் இந்த இணைய காலத்தில் அதிகரித்துத்தான் உள்ளது. மற்ற விஷயங்களுக்கு உள்ளதைப் போலவே இவற்றுக்கும் மவுசு அதிகமாகத்தான் இருக்கிறது. அதன் விளைவாகவே பல நிறுவனங்களும், தொழில்முனைவோரும் இத்துறையில் கால் பதித்து வெற்றிகரமாக தலையெடுத்துள்ளனர்.
பரிகார பூஜைகள், ஹோமம், இ-அர்ச்சனை, புனித யாத்திரை, கோயில்களில் தரிசன டிக்கெட் புக்கிங், புனித கோயில்களில் இருந்து பிரசாதம் வழங்குதல் என ஆன்மீகம் தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்கும் தளமாக துவங்கப்பட்டதே ’27 மந்த்ரா’ (27 Mantraa). இதுவே இந்தியாவில் இத்தகைய முழுமையான சேவையை வழங்கும் முதல் தளம் ஆகும்.
அஜய், ஆத்மிகா இருவரும் இணைந்து இந்நிறுவனத்தை நிறுவியுள்ளனர். இவர்கள் இருவரும் மேலாண்மை பட்டதாரிகள். அத்துடன் ஆராய்ச்சி அறிஞர்களான இவர்கள் முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவர்.
ஸ்டார்ட் அப் துவங்குவதற்கு முன்பு ஆன்லைன் ட்ராவல் ஏஜென்சி சேவை வழங்கும் முக்கிய நிறுவனங்களின் ஹோட்டல் ஒப்பந்தம் மற்றும் மார்கெட்டிங் பகுதியில் பணியாற்றி வந்தனர். சந்திரசேகர் குப்பேரி வங்கியாளர். அவரது நிதி சார்ந்த நிபுணத்துவத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அவர் 27 மந்த்ரா சிஎஃப்ஓ-வாக இணைத்துக்கொள்ளப்பட்டார்.
அதென்ன 27 மந்திரா?
27 நட்சத்திரங்களையும் 27 முக்கிய மூல மந்திரங்களையும் குறிக்கும் விதமாகவே ’27 Mantraa’ என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 27 மந்த்ரா நிறுவனத்தின் ஆரம்பகட்டத்தில் நேடிவ் லீட் நிறுவனத்தின் சிவராஜா ராமநாதன் வழிகாட்டி ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் ANOVA கார்ப்பரேட் சர்வீசஸ் ஆலோசனை வழங்கியது.
”இந்தியாவில் ஆன்மீக சுற்றுலா மிகப்பெரிய சந்தையாகும். இருப்பினும் பல்வேறு பகுதிகள் இன்னமும் கவனம் செலுத்தப்படாமல் உள்ளது. 30 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்தச் சந்தை ஒழுங்கு படுத்தப்படாமல் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கோயில்கள் நம்மூரில் பல உள்ளன. ஆனால் மக்களுக்கு வெகு சில கோயில்களே பரிச்சயமாக உள்ளது. எனவே நாங்கள் இந்தக் கோயில்கள், அதன் கலாச்சாரம் மற்றும் கட்டமைப்புப் பின்னணி குறித்து மக்களிடையே, எடுத்துரைக்கிறோம்,” என்றார் அஜய்.
Online Prasad, epuja.co.in, shubhbakthi, harivara, saranam ஆகிய ஐந்து நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பிரிவில் தற்போது செயல்படும் பிரபல நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றின் செயல்பாடுகளும் வெவ்வேறாகும். ஆன்லைன் பிரசாத் நிறுவனம் கோயில்களின் பிரசாதத்தை விநியோகிக்கும் பணியில் கவனம் செலுத்துகிறது. E.puja, harivara, saranam ஆகிய நிறுவனங்கள் பூஜை மற்றும் ஹோமம் பகுதியில் செயல்படுகிறது. ஆனால் ஆன்மீக சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி முழுமையான சேவையளிக்கும் ஒரே நிறுவனம் 27 மந்த்ரா மட்டுமே, என்கிறார் அதன் நிறுவனர்.
இந்நிறுவனம் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதியில் இருந்து செயல்பட்டு வருகிறது இதன் கூடுதல் சிறப்பு. தற்சமயம் தமிழ்நாடு முழுவதும் உள்ள தன்னார்வலர்களின் உதவியுடன் ’27 மந்த்ரா’ செயல்பட்டு வருகிறது. விரைவில் தொழில்நுட்பம் மற்றும் மார்கெட்டிங் நடவடிக்கைகளுக்கு தகுந்த ஊழியர்களை நியமிக்க உள்ளனர்.
”ஆன்மீகம் தொடர்பான பிரத்யேக சேவையளிப்பதிலேயே நாங்கள் முக்கிய கவனம் செலுத்துகிறோம். தற்போது 50 கோயில்களில் சேவையளித்து வருகிறோம். விரைவில் இந்தியா முழுவதும் 200 கோயில்களில் சேவையை விரிவடையச் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றார் அஜய்.
சேவைக்கான உரிமையை வழங்கி ஃப்ரான்சைஸ் மாதிரி வாயிலாக ஆஃப்லைனில் செயல்படுதல், கைவினை பூஜை மண்டபம் போன்ற பொருட்களை 27 மந்த்ரா பிராண்டின் கீழ் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. விசேஷ தினங்களில் ஒருவர் தனக்கு விருப்பமானவர்களின் பெயரில் பூஜை செய்து பிரசாதத்தை அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்க உதவும் வகையிலான சேவையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்குச் செல்ல இயலாத நிலையில் இருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், வட இந்தியர்கள், கோயில்களுக்கு பயணம் செய்யமுடியாத மூத்த வயதினர், போன்றோரை இலக்காகக் கொண்டே இந்நிறுவனம் செயல்படுகிறது.
2016-ம் ஆண்டு முதல் இதுவரை 900-க்கும் மேற்பட்ட பூஜைகளையும் ஹோமங்களையும் நிறைவு செய்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் 10 சதவீத வளர்ச்சியடைந்து வருகிறது நிறுவனம். லாபமோ நஷ்டமோ இல்லாத ’ப்ரேக் ஈவன்’ நிலையை விரைவில் எட்ட உள்ளோம்,” என்கிறார் அஜய்.
வளைகுடா நாடுகளுக்குப் பிரசாதத்தை அனுப்பி வைப்பதில் இந்நிறுவனம் சவால்களைச் சந்திக்கிறது. 2016-ம் ஆண்டு நிறுவனர்களின் சுயநிதி கொண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் சமீபத்தில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் குழுவிடமிருந்து வெளியிடப்படாத நிதித்தொகையை உயர்த்தியுள்ளது.
ரத்தன் டாடா, ஃப்ரெஷ்டெஸ்க் நிறுவனத்தின் கிரீஷ் மாத்ருபூதம், பி.வி சிந்து போன்றோர் எங்களது முன்மாதிரிகள். மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த சில ஆரம்பக்கட்ட ஸ்டார்ட் அப்களுக்கு நாங்கள் வழிகாட்டி வருகிறோம், என்றார்.
”உங்களிடம் இல்லாத விஷயத்தைத் தடையாகக் கருதாதீர்கள். உங்களிடம் இருப்பதைக் கொண்டு இல்லாததைப் பெற முயற்சி செய்யுங்கள்,” என்பதே மற்ற தொழில்முனைவோர்களுக்கு இவர்கள் வழங்கும் ஆலோசனை.
வலைதள முகவரி: 27 mantraa