ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளம்: ஜப்பான் நிறுவனத்தால் வேண்டும் எனத் தேர்வான ‘வேண்டாம்’
பெற்றோரால் 'வேண்டாம்' எனப் பெயர் சூட்டப்பட்டு, பல்வேறு கேலி கிண்டல்களுக்கு ஆளான இளம்பெண் ஒருவர், ஜப்பான் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 22 லட்சம் சம்பளம் பெறும் வேலைக்கு தேர்வாகி, இப்படி ஒரு பெண் தான் வேண்டும் என எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
இன்றும் கிராமங்களில் உள்ள மூடப்பழக்கவழக்கங்களில் ஒன்று, பிறந்த பெண் குழந்தைக்கு, ‘வேண்டாம்’ அல்லது ’போதும் பொண்ணு’ எனப் பேர் வைத்தால், அதற்கு அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்பதே. இப்படித்தான் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ளது நாராயணபுரத்தில் நிறைய ’வேண்டாம்’ பெண் குழந்தைகள் உள்ளனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நம் கட்டுரையின் நாயகி வேண்டாம். நாராயணபுரத்தைச் சேர்ந்த அசோகன் - கௌரி தம்பதிக்கு பிறந்த இரண்டாவது பெண் குழந்தை தான் இந்த வேண்டாம். அடுத்ததாவது ஆண் குழந்தையாக பிறக்கட்டும் என்ற எதிர்பார்ப்பில், தங்களது இரண்டாவது மகளுக்கு வேண்டாம் எனப் பெயர் வைத்தனர்.
பெற்றோர் ஏதேதோ காரணங்களால் இப்படி பேர் வைத்து விடுகின்றனர். ஆனால், பெயர் என்பது ஒருவரின் அடையாளம். அந்த அடையாளத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் பாவம், சம்பந்தப்பட்டவர்கள் படும் பாடுகள் ஏராளம். வளர்ந்து பெரியவனான பிறகு நியூமராலஜியைக் காரணம் காட்டி சிலர் தங்களது பெயர்களை மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், அதற்குள்ளாக பள்ளியில், கல்லூரியில் என அவர்கள் பெயரால் சந்திக்கும் கேலிகளும், கிண்டல்களும் ஏராளம்.
வேண்டாமும் அப்படித் தான் தன் வாழ்வில் நிறைய பிரச்சினைகளை பேரால் சந்தித்திருக்கிறார். அதேப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்தவர், சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் உதவியோடு பொறியியல் படிப்பில் சேர்ந்தார். தற்போது மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் ’வேண்டாம்’.
எப்போதும் தன் பெயரை வைத்து சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்.
இந்நிலையில் தான், சமீபத்தில் அவரது கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடைபெற்றது. இதில், ஜப்பான் நிறுவனம் இவரை பணிக்கு தேர்வு செய்தது. ஆண்டு சம்பளம் ரூ.22 லட்சம்.
தான் உருவாக்கிய தானாகவே இயங்கக்கூடிய கதவின் விளக்கத்தை ஜப்பான் நாட்டின் தனியார் நிறுவனத்திடம் எடுத்துச் சொல்லி தான் இந்த வேலைக்கு தேர்வானார் வேண்டாம்.
இது தொடர்பாக வேண்டாம் கூறுகையில்,
“ஜப்பான் நிறுவனத்தில் ரூபாய் 22 லட்சத்திற்கு சம்பளத்தில் வேலை கிடைத்ததால் நான் பிரபலமாகவில்லை. 'வேண்டாம்' என்ற பெயர் கொண்ட என்னை ஜப்பான் நிறுவனம் வேண்டும் எனத் தேர்வு செய்ததால் தான் பிரபலமாகி உள்ளேன். என்னைப் போலவே எங்கள் ஊரான நாராயணபுரத்தில் நிறைய வேண்டாம்கள் இருக்கின்றனர். அவர்களும் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை,” எனத் தெரிவித்துள்ளார்.
சரி, கேம்பஸ் இண்டர்வியூ மூலம் எத்தனையோ பேர் நல்ல நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்துடன் வேலைக்கு தேர்வான போதும், வேண்டாம் என்ற பேர் மூலம் தானே நீங்கள் இப்போது பிரபலமாகி இருக்கிறீர்கள்? இன்னமும் அந்தப் பேரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா எனக் கேட்டால், ‘ஆமாம்’ எனச் சிரித்துக் கொண்டே கூறுகிறார் வேண்டாம்.
வேண்டாம், ஜப்பான் நிறுவனத்தின் வேலைக்குத் தேர்வான விஷயத்தை கேள்விப்பட்டதும், திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் இந்த சாதனை பெண்ணைக் கூப்பிட்டு, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கூடவே, ’பெண் குழந்தை காப்போம்’ என்று குழந்தைகள் அமைப்பின் மாவட்ட சிறப்புத் தூதுவராகவும் நியமித்துள்ளார்.