'போதும் பொண்ணு': மாற்றுத் திறனாளி அல்ல; மற்றவர் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் திறனாளி!
தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மதித்து, வாழ்க்கையில் சோதனைகளை சாதனையாக்கி, மாற்றத்தை விரும்பும் மாற்றுத்திறனாளிகளுள் ஒருவராகவும், தங்கள் வாழ்வில் மட்டுமின்றி தன்னைப்போன்ற உடற்குறையுடன் இருப்போர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது இந்த மாற்றுத் திறனாளி ஜோடி. ஆம், கடந்த ஓராண்டில் 400க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டு உபயோகப்பொருள்கள் பழுது பார்க்க கற்றுக் கொடுத்து, அவர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தை அடுத்த கலைக்குளத்தை சேர்ந்த தம்பதியினர் ’போதும்பொண்ணு - கண்ணன்’. எல்லாக் குழந்தையையும் போல் ஆரோக்கியமாக பிறந்தவர் தான் போதும் பொண்ணு. மூணு வயதுவரை தத்தி தவழ்ந்து அக்கம் பக்கத்து வீட்டார் குழாய்களில் வைத்துள்ள பானைகளில் கல்லை நிரப்பி விளையாடும் சேட்டைக்காரியாக இருந்துள்ளார். அப்போது, ‘தவக்கையிலே இம்புட்டு சேட்டை செய்றாளே, நடந்து ஓட ஆரம்பித்துவிட்டானா... இவளைதனியா ஆள்போட்டு தான் பாத்துக்கணும்’ என்பதே, அப்போது போதும்பொண்ணுனின் சேட்டையை பார்த்தவர்களின் எண்ணம். ஆனால், வாழ்க்கை முழுவதும் தவழ்ந்து கொண்டு மட்டுமே இருக்கப்போகிறோம் என்பதை அப்போது போதும் பொண்ணும் அறிந்திருக்கமாட்டார், அவருடைய பெற்றோரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அதுதான் நிகழ்ந்தது.
மூன்று வயதில் போலியோவினால் பாதிக்கப்பட்டு கால்கள் செயல்பாடற்று போயுள்ளது. இரு மகள்களுக்கு பின், அடுத்தும் பெண் பிறந்த விரக்தியில் ‘போதும் பொண்ணு’ என்று மூன்றாவது மகளுக்கு போதும்பொண்ணின் பெற்றோர்கள் பெயர்சூட்டினாலும், அவரை கூட்டிக் கொண்டு கோயில், குளம் என்றும் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக காண்பித்துள்ளனர். அதற்கு மேல், வைத்தியம் பார்க்க குடும்பச் சூழல் ஒத்துழைக்காமல் போயுள்ளது.
“நான் இன்னும் எங்க அம்மா, அப்பாட்ட கேட்பேன். எனக்கு ஏன் போதும் பொண்ணுனு பேரு வச்சீங்கனு. ஆனா, அவங்க குழந்தையே போதும் என்ற எண்ணத்தில் தான் எனக்கு போதும் பொண்ணுனு பேர் வச்சதா சொல்லுவாங்க.
எனக்கு என்னன்னா, நல்லா மாடர்ன் பெயரா இல்லைன்னு தான் வருத்தம். ஏன்னா, பொண்ணா பொறந்திட்டியேனு அவங்க என்கிட்ட எந்த வருத்தத்தையும் காண்பித்தது இல்லை, என்பவர் தன்னால் நடக்க முடியாததை எண்ணியோ, ஊனமாக பிறந்துவிட்டோம் என்றோ எக்கணத்திலும் எண்ணி மனம் வருந்தியதில்லை என்கிறார். அதுவே அவருடைய பேச்சிலும் பிரதிபலிக்கிறது.
“ஊனம் ஒரு தடை என்றெல்லாம் நான் என்னிக்குமே நினைச்சது இல்லை. என்ன, மத்தவங்க நின்னு பாக்குற வேலையை நாங்க உட்கார்ந்து பார்க்கிறோம்.”
காரைக்குடியில் உள்ள ஊனமுற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பத்தாவதுவரை படித்தேன். மேற்கொண்டு படிக்க வசதி, வாய்ப்பு இல்லை. ஆனா, நல்லா படிப்பேன். வீட்டிலயே கிடக்கிறது வேஸ்ட்டுனு, வேலைக்கு போகமுடிவு செய்தேன். முதல் முதலா ஈரோடில் உள்ள கோ- ஆப்டெக்சில் 5,000ரூ வேலைக்கு சேர்ந்தேன்” என்னும் போதும் பொண்ணுவை, அங்கு தான் சந்தித்துள்ளார் கண்ணன். மெக்கானிக் ஆன அவரும் ஒரு மாற்றுத் திறனாளி. இருவருக்கும் மனம் ஒத்துபோகினும், மாற்று சாதியை சேர்ந்தவர் என்று மணம் முடிக்க இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களது எதிர்ப்பை மீறி, மணம் முடித்து கொண்ட இருவரும் இன்று சிறப்பான ஜோடியாக திகழ்கின்றனர்.
“எங்க வீட்டுக்காரு மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்காரு. மிக்சி, கிரைண்டரிலிருந்து ஏசி, வாஷிங்மெஷின்னு சகலமும் ரிப்பேர் செய்வார். வீடியோகான், சாம்சாங் சர்வீஸ் சென்டர்களில் வேலை செய்துள்ளார். அவரிடம் இருந்து நானும் எல்லாவற்றையும் பழுது பார்க்க கற்றுக் கொண்டேன்.”
அப்போது தான், நமக்கே எல்லா வேலையும் தெரியும் ஏன் நாம சொந்தமா செய்யக்கூடாதுனு யோசித்து, இருக்கிற நகையெல்லாம் வித்திட்டு சொந்த ஊரிலே கடையை திறந்தோம்,” என்னும் போதும்பொண் மற்றும் கண்ணனின் உழைப்பை பாராட்டாதோர் இல்லை. சிவகங்கை கலெக்டர் மலர்விழி கடைக்கு வந்து இருவரையும் பாராட்டியுள்ளார்.
அச்சமயத்தில் கிடைத்த வாய்ப்பு தான் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் கற்பித்தல். தமிழக கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள நலிவுற்றோரை தெரிவு செய்து, அவர்களின் வறுமையை போக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் புதுவாழ்வுத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு அமைப்புகள், நலிவுற்றோருக்கு எம்ப்ராய்டரி, தையல், வாகன ஓட்டுநர் பயிற்சி, அழகுக்கலை, செல்போன் பழுதுபார்ப்பு, அடிப்படை கணினி பயிற்சிகளை வழங்கிவந்தது.
“கம்ப்யூட்டர் அடிப்படை பயிற்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்க பயிற்சி அளிக்குமாறு புதுவாழ்வு திட்ட மேலாளர் அஷோக் எங்களிடம் கேட்டார். நாங்கள் எங்களை போன்றோருக்கு மட்டுமே பயிற்சி அளிப்போம் என்று கூறினோம். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி, கடந்த ஒரு வருஷத்தில் 476 பேருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறோம். அதில் 80 சதவீதம் பேர் சொந்தமாக கடை திறந்துவிட்டனர். சிவங்கை மட்டும் பாத்தீங்கனா, நாங்க 80 மாற்று திறனாளிகளுக்கு பயிற்சி வழங்கினோம். அதுல, 70 பேர் சர்வீஸ் சென்டர் வைத்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
எங்களிடம் பயிற்சி பெற வருவோர்களுக்கு நாங்கள் வேண்டி கேட்டு கொள்வது ஒன்றை தான். எங்களுக்கு தெரிந்தத் தொழிலை நீங்க கற்று கொண்டு தொழில் தொடங்கினால் மட்டும் போதாது. அத்தொழில் நீங்கள் இன்னும் நான்கு மாற்று திறனாளிகளுக்காவது கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்பதே, என்கிறார் கண்ணன்.
குறைப்பாடு உடையவர் என்ற வார்த்தையை உடைத்தெறிய இவர்கள் செய்த பல சாதனைகளின் நீட்சியாய் அமைந்துள்ளது ‘சுயசக்தி விருது’க்கான போட்டியில் கலந்து கொண்டது. பிராண்ட் அவதார் நிறுவனம் நடத்திய இந்தாண்டுக்கான சுயசக்தி விருதுகளில் மாற்று திறனாளிகளுக்கான பிரிவில் விருதை பெற்றுள்ளார் போதும் பொண்ணு.
“என் கணவர் தான் விருது பற்றி தெரிந்து கொண்டு, விண்ணப்பித்தார். எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மட்டுமில்லை இது, எங்களை மேலும் செயல்பட சொல்லும் தூண்டுகோள்...” என்கிறார் இந்த போதும் என்று நின்று விடாது உழைக்கும் பொண்ணு.