'யூ ஆர் கிரேட்’ – மரியா ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடும் கேரள ரசிகர்கள்!
மரியா ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்ட ரசிகர்கள்!
மரியா ஷரபோவா பேட்டி ஒன்றில், தனக்கு சச்சின் டெண்டுல்கர் யாரென்று தெரியாது என பதிலளித்திருந்தார்.
ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிடம் கேரளா நெட்டிசன்கள் மன்னிப்பு கேட்டு வருகின்றனர். இதுதான் இன்றைக்கு சோசியல் மீடியாவில் டிரென்டிங்கில் உள்ளது. சரி என்ன காரணம் பார்ப்போம்.
இதற்கான காரணத்தை ஆராய வேண்டும் என்றால் நாம் சில ஆண்டுகள் பின்னோக்கி போகவேண்டும்.
ஆம்! கடந்த 2015ம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா பேட்டி ஒன்றில், தனக்கு சச்சின் டெண்டுல்கர் யாரென்று தெரியாது என பதிலளித்திருந்தார். உடனே பற்றி எரிந்தனர் கிரிக்கெட் ரசிகர்கள். ’எப்படி என் தலைவனை தெரியாது எனச் சொல்லலாம்’ என டென்னிஸ் வீராங்கனைக்கு எதிராக கொந்தளித்தது சச்சின் ரசிகர் பட்டாளம். கண்டனங்கள் பறந்தன.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வெளிநாட்டு பிரபலங்கள் விவசாயிகள் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும். இந்தியர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு தேசமாக இணைந்திருப்போம்,” என்று பதிவிட்டிருந்தார்.
இது அவரது ஆதரவாளர்களிடையே சற்று நெருடலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள சச்சின் ரசிகர்கள், மரியா ஷரபோவா-வின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளில் டேக் செய்து,
’நீங்க சொன்னது கரெக்ட் தான். எங்கள மன்னிச்சுடுங்க’ என்று மன்றாடி வருகின்றனர். சர்காஸிட்டிக்கான அவர்களது இந்த செயல்பாடுகள் டிரென்டாகி உள்ளது.
மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல், ஒருபடி மேலே போய், “மரியா நீங்கள் கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்கு கண்டிப்பாக வர வேண்டும். கொரோனா தொற்று குறைந்த பின் திருச்சூர் பூரம் பண்டிக்கைகு வாருங்கள்...” என அன்புடன் அழைப்பும் விடுத்துள்ளனர்.
கேரள நெட்டிசன் ஒருவர்,
“ஷரபோவா உங்களுக்கு ஷவர்மாவும், குழிமந்தி பிரியாணியும் தந்து மன்னிப்பு கோருகிறேன். ஒரு லாரி நிறைய மன்னிப்பு ஏற்றி வருகிறேன்,” என நகைச்சுவையாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
மலையாள நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தில், “ஷரபோவா, நீங்கள் சச்சினைப் பற்றி சரியாகத்தான் கூறியுள்ளீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்பதை அறிந்த ஷரபோவா தனது ட்விட்டர் பக்கத்தில்,
“யாருக்கேனும் ஆண்டுகள் பற்றி ஏதேனும் குழப்பம் வந்துவிட்டதா?” எனக் கேட்டுள்ளார். அவருக்கு இந்த விவகாரம் புரியவில்லை போல!
மரியா ஷரபோவாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தில்,
“மன்னித்துவிடுங்கள் மரியா. நீங்கள் பெரிய லெஜண்ட். சச்சினை எங்களுக்கு வீரராகத்தான் தெரியும். ஆனால், ஒரு மனிதராகத் தெரியாது. ஆனால், நீங்கள் சரியாகத்தான் கணித்தீர்கள். உங்களைத் தவறாகப் பேசியதற்கு மன்னிக்கவும்,” எனத் தெரிவித்திருந்தார்.
இப்படியாக நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் போய்கொண்டிருக்கிறது இணைய உலகம்!