டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பாடகி ரிஹானா, க்ரெட்டா துன்பர்க்!
டெல்லி விவசாயிகள் போராட்டம் வலுபெற்று வரும் நிலையில் உலகப் பார்வைக்கு அதை கொண்டு வந்த பாப் பாடகி ரிஹானா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டா துன்பர்க்.
உலகப் பிரபல பாப் பாடகி ரிஹானா, டெல்லியில் நடைப்பெறு விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்ட ட்விட்டர் உலக ட்ரென்டிங் ஆனது.
10 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட அமெரிக்க பாடகி ரிஹானா உலகமெங்கும் பிரபலமானவர். பல கோடி இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர். இந்தியாவிலும் அவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து போட்ட ட்வீட் லைக்குகள், ரீட்வீட்களை அள்ளிக்குவித்து ட்ரெண்டிங் ஆனது.
“நாம் ஏன் இதைப் பற்றி பேச மறுக்கிறோம்...?” #FarmersProtest
என்று பதிவிட்டு சிஎன்என் செய்தியை ட்வீட்டுடன் இணைந்திருந்தார்.
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ரிஹானா ட்வீட் போட்டிருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்திருந்தாலும், பிஜேபி மற்றும் அதைச் சார்ந்தவர்கள் மற்றும் நடிகை கங்கனா ரனாவத் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டனர்.
”விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி யாரும் பேசாததற்குக் காரணம் அவர்கள் விவசாயிகளே அல்ல, தீவிரவாதிகள் என்றும், சீனா இந்தியாவை பிளவுப்படுத்த செய்யும் செயல் இது...” என்று பதிவிட்டு ரிஹானாவை திட்டி ட்வீட் செய்தார் கங்கனா.”
கங்கனாவின் இந்த பதிவிற்கும் பதிலடி கொடுத்து பலர் விவசாயிகளுக்கு சார்பாக பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகி ரிஹானவைத் தொடர்ந்து, பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் இளம் பெண் க்ரெட்டா துன்பர்கும் டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்டார்.
அதில் அவர்,
“இந்தியாவில் நடைப்பெறு விவசாயிகள் போராட்டத்துக்கு நாம் உறுதுணையாக இருப்போம்...” என்றார்.
இவரது இந்த பதிவிற்கு நேர்மறை மற்றும் எதிர்மறைக் கருத்துகள் குவிந்து வருகின்றன. பலரும், ”உங்கள் நாட்டுப் பிரச்சனையை முதலில் பாருங்கள், பின்னர் இந்தியா பற்றி பேசலாம் என்பது போல் பதிவிட்டு வருகின்றனர்.”
விவசாயிகள் போராட்டம் நடைபெறும் டெல்லி பார்டர்களான சிங்கு, காசிபூர் மற்றும் திக்ரியில் இணையச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வந்த செய்தியை மேற்கோள் காட்டியே ரிஹானா மற்றும் க்ரெட்டா, விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
அதற்கு முன்னதாக, குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து டெல்லி மற்றும் அதன் எல்லை ஊர்களில் பதற்றம் நிலவி வருகிறது. டெல்லி போலீசார் அந்த இடங்களில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், விவசாயிகள் டெல்லிக்குள் முன்னேறி வராமல் தடுக்க சக்திவாய்ந்த தடுப்பணைகளை போட்டுள்ளனர் டெல்லி காவல்துறையினர்.
இந்தியாவிற்குள் இருந்த விவசாயிகள் போராட்டம் தற்போது ரிஹானா, க்ரெட்டா பதிவுகளால் உலக அளவில் செய்தியாகி பலரின் பார்வைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.