இன்று முதல் 1 ரூபாய்க்கு 'சானிட்டரி பேட்' மலிவு விலை மருந்தகங்களில் அறிமுகம்!
பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இன்று முதல் நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்களில் ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு முன்பை விட இப்போது மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அந்த சமயங்களில் பெண்கள் துணிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்த அறிவுரை கூறப்படுகிறது. ஆனால், அதிக விலை காரணமாக சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவது அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை.
எனவே தான், 'ஜன் அவுஷாதி' எனப்படும், மலிவு விலை மருந்தகங்களில் குறைந்த விலைக்கு அதாவது உற்பத்தி விலைக்கே சானிட்டரி நாப்கின்கள் விற்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நான்கு நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விலை இன்னமும் அதிரடியாகக் குறைக்கப்பட்டு, மானியத்துடன் ஒரு நாப்கின் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர், மான்சுக் மாண்டவியா டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,
“பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சில திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும், மத்திய அரசால், 'ஜன் அவுஷாதி' எனப்படும், மலிவு விலை மருந்தகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த மருந்தகங்களில், மிகk குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒரு சானிட்டரி நாப்கின், 2.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி, மலிவு விலை மருந்து கடைகளில், இது, 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
நான்கு நாப்கின்கள் அடங்கிய பாக்கெட், தற்போது, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; இனி, 4 ரூபாய்க்கு விற்கப்படும். இன்று முதல் (ஆகஸ்ட் 27) இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது.
’கடந்த லோக்சபா தேர்தலின் போது, பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும், வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றில், இதுவும் அடக்கம்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,
“மக்கள் மருந்தகங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.2 கோடி சானிட்டரி நாப்கின்கள் விற்பனை ஆகியுள்ளது. தற்போதைய இந்த அதிரடி விலைக் குறைப்பின் மூலம் இந்த விற்பனை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தரத்திலும் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது,” என மான்சுக் கூறியுள்ளார்.
மத்திய அரசின் இந்தப் புதிய உத்தரவு மூலம் கிராமப்புறங்களில் இருக்கும் மிகவும் ஏழ்மையான பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின்கள் சென்று சேரும் என நம்பலாம்.