சுயநிதியில் இயங்கி உலக அளவில் ரூ.200 கோடி பிசினஸ் செய்யும் சென்னை நிறுவனம்!
கேமரா பிரிவில் சர்வதேச அளவில் பல நாடுகளில் மற்றும் பல துறையைச் சேர்ந்த நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் இ-கான் சிஸ்டம்ஸ் நிறுவனம் (e-Con systems) சென்னையில் செயல்பட்டு வருகிறது. சொந்த முதலீட்டில் மட்டுமே செயல்படும் இந்த நிறுவனம் கவனிக்கத்தக்க வகையில் வளர்ந்து வருகிறது.
இந்தியாவில் சேவை நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன, புராடக்ட் நிறுவனங்கள் அவ்வளவாக இல்லை என்னும் கருத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. ஆனால், தற்போது அந்த கருத்துக்கு அர்த்தம் இல்லை என்னும் அளவுக்கு புராடக்ட் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
கேமரா பிரிவில் சர்வதேச அளவில் பல நாடுகளில் மற்றும் பல துறையைச் சேர்ந்த நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் இ-கான் சிஸ்டம்ஸ் நிறுவனம் (
) சென்னையில் செயல்பட்டு வருகிறது. சொந்த முதலீட்டில் மட்டுமே செயல்படும் இந்த நிறுவனம் கவனிக்கத்தக்க வகையில் வளர்ந்து வருகிறது.ரூ.200 கோடிக்கும் மேலான விற்பனையுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான மகாராஜன் வீரபாகு உடன் நேரில் உரையாடினேன். நிறுவனத்தின் செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அவர்.
e-Con Systems உருவானது எப்படி?
சொந்த ஊர் தூத்துக்குடி, தந்தை பெரியார் கல்லூரியில் பொறியியல் படித்தேன். படிக்கும்போதே நாம் பயன்படுத்தும் எந்த பொருளும் இந்திய பொருளாக இருக்காது. வாக்மேன், லைட் என எல்லாமே வெளிநாட்டு பொருட்கள்தான். ஏன் எலெக்ட்ரானிக்ஸில் இந்திய பொருட்கள் இல்லை என்பது படிக்கும்போதில் இருந்து எங்களுடைய விவாவதமாக இருக்கும்.
கல்லூரி சீனியர் ஹரிசங்கர், அவருடன் பணியாற்றியவர் அசோக் பாபு. இவர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு இந்தியா திரும்பினர். அப்போது நானும் படித்து முடித்தவிட்டதால் அவர்களுடன் சேர்ந்து அவ்வப்போது பேசிக்கொண்டிருப்போம்.
அப்போது எலெக்ட்ரானிக் புராடக்ட் தொடங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். நாங்கள் நிறுவனம் தொடங்கிய ஓர் ஆண்டுக்குப் பிறகு எங்களுடன் மகேஷ்வரி இணைந்துகொண்டார். நாங்கள் நால்வர் இணைந்து உருவாக்கிய நிறுவனமே ’இ-கான் சிஸ்டம்ஸ்.’
சர்வீஸ் டு புராடக்ட்
எலெக்ட்ரானிக்ஸ் புராட்டக்ட் செய்ய வேண்டும் என்பதுதான் திட்டமாக இருந்தாலும் நாங்கள் சர்வீஸில் இருந்துதான் தொடங்கினோம்.
இதற்கு முன்பு ஒரு சிறிய டெக்னாலஜி விஷயத்தை பற்றி பேசினால் அடுத்தடுத்து உரையாடுவதற்கு வசதியாக இருக்கும் என டெக்னாலஜி குறித்து பேசினார். புரிதலுக்காக இவ்வாறு வைத்துக்கொள்வோம், ஒவ்வொரு ஹார்ட்வேர் சிஸ்டம் எடுத்துக்கொண்டாலும் அதில் சாப்ட்வேர் இருக்கும். இரண்டும் சேர்ந்தால்தால் எலெக்ட்ரானிக்ஸ். இதனை எம்பெடட் சிஸ்டம் (Embedded Systems) என்று அழைப்பார்கள்.
இதில்தான் எங்களுடைய திறமையை வளர்த்துக்கொண்டோம். இதில் எங்களுக்கு வேலை வந்தாலும் எளிமையான அல்லது அதிக வால்யூம் இருக்கக் கூடிய பணிகள் வரவில்லை. மற்றவர்களால் தீர்க்க முடியாத சிக்கலான வேலைகள் மட்டுமே எங்களுக்கு வரும். இருந்தாலும் எங்களுக்கு வேலை கிடைக்கிறதே என அதனை தொடர்ந்து செய்துவந்தோம்.
இந்த சமயத்தில் நாம் வித்தியாசமாக எதாவது செய்யவில்லை என்றால் நம்மால் இத்துறையில் தாக்குபிடிக்க முடியாது என்பது புரிந்தது. அதனால் விண்டோஸ் சிஇ எனும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து பலருக்கும் தெரியாது. ஜாவா, சி++ என்றால் பலருக்கும் தெரியும். ஆனால், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து எதுவும் தெரியாது என்பதால் அது குறித்து நாங்கள் எழுதத்தொடங்கினோம்.
”இப்போது யோசித்தாலும் எப்படி அந்த ஐடியா வந்தது என எங்களுக்கு வியப்பாக இருக்கும். காரணம் அப்போது கூகுள் ஆட்ஸ் கிடையாது, பிளாக் எழுதுவது மற்றும் படிப்பது மிகவும் குறைவு. இணையம் சார்ந்த பயன்பாடு என்பதே மிக மிக குறைவு. இருந்தாலும் எங்களுக்கு தெரிந்த விஷயத்தை தொடர்ந்து எழுதினோம். இதனால் விண்டோஸ் சி.இ. என தேடினாலே நாங்கள் வரத்தொடங்கினோம். இதன் மூலம் நாங்கள் இந்த குறிப்பிட்ட பிரிவில் முக்கிய நபர்களாக மாறினோம்.”
இந்த சமயத்தில் மைக்ரோசாப்ட் கருத்தரங்கு ஒன்று அமெரிக்காவில் நடந்தது. அந்த கருத்தரங்குக்குச் சென்றோம். அப்போதும் மற்றவர்களால் சரி செய்ய முடியாத பிரச்சினையே எங்களுக்கு வந்தது. அதனை சவாலாக எடுத்து அந்த சிக்கலை எட்டு நாட்களுக்குள் சரி செய்து கொடுத்தோம். அதனால் அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி இந்தியாவுக்கே வந்து எங்களை சந்தித்து உரையாடும் அளவுக்கு வளர்ந்தோம். ஆனால், நாம் இன்னும் புராடக்ட் உருவாக்கவில்லை என்னும் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.
இந்த சமயத்தில் ஒருவரை நாங்கள் சந்தித்தோம். உங்களுக்காக நாங்கள் ஒரு புராடக்ட் செய்யட்டுமா என்று கேட்டதற்கு, உங்களுக்கு இந்தத் துறையில் அனுபவம் இருக்கிறது. ஆனால் உங்களால் புராடக்ட் செய்ய முடியும் என்பதை நான் எப்படி நம்ப முடியும் எனக் கேட்டார் அதனால் சிஸ்டம் ஆன் மாடுல் (எஸ் ஒ எம்) சொந்தமாக தயாரிக்க முடிவெடுத்தோம். ஒரு புரிதலுக்காக புரோட்டோடைப் என வைத்துக்கொள்ளலாம்.
அதன் பிறகு, நிறுவன பயன்பாட்டுக்குத் தேவையான பலவற்றை நாங்கள் உருவாக்கிக் கொடுத்தோம். இந்த சமயத்தில்தான் கேமராக்களின் பயன்பாடு உயரத்தொடங்கியது. செல்போனில் கேமரா என்பது தவிர்க்க முடியாததாகி விட்ட சூழலில் மற்ற இடங்களிலும் கேமராவின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கும் என உறுதியாக நம்பினோம்.
அதனால் தொழில்துறைக்குத் தேவையான கேமராக்களை தயாரிக்கத் தொடங்கினோம். கேமரா தயாரிப்பது என்பது படம் பிடிப்பது மட்டுமல்ல. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்த தேவையை அந்த கேமரா செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப கேமராவும் டெக்னாலஜியும் இணைய வேண்டும்.
புரிதலுக்கு சொல்ல வேண்டும் என்றால் தற்போது நாம் பயன்படுத்தும் செல்போன் கேமராக்கள் நம்மை அழகுபடுத்தி, முகத்தை சீராக்கி, நல்ல வெளிச்சம் இருப்பதுபோல காண்பிக்கும். ஆனால், தொழில் துறையில் உள்ள கேமராவுக்கு அழகு முக்கியமல்ல.
இவற்றை எம்பெடட் விஷன் கேமிரா என்று அழைக்கிறோம். அங்கு பயன்பாடுதான் முக்கியம்.
மருத்துவத் துறையில், ஆட்டோமொபைல் துறை, ரீடெய்ல், தொழில்துறை, விவசாயம், விமான நிலையம் என பல இடங்களில் இதுபோன்ற கேமரா பயன்படுத்தப்படுகிறது. தவிர முழுமையான இருட்டு, அதிக வெளிச்சம், அதிக குளிர், அதிக வெப்பம், அதிக மழை என அனைத்து சீதோஷன நிலையிலும் பயன்பாட்டில் எந்த சிக்கலும் இல்லாத கேமிரா தேவை. கேமிரா மட்டுமல்லாமல் அது பயன்பாட்டையும் சரி செய்ய வேண்டும்.
உதாரணத்துக்கு, 360 டிகிரி கேமிரா எங்களிடம் உள்ளது. இது விளையாட்டில் மட்டுமெ பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் சில இடங்களில் இந்த கேமிரா இருக்கும். பார்வையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பல கேமிராகளில் 360 டிகிரி கோணத்தில் விளையாட்டு போட்டியை பார்வையிட முடியும். இதுபோல ஒவ்வொரு துறைக்கும் ஒருவிதமான தேவை இருக்கிறது. அதனை நாங்கள் பூர்த்தி செய்கிறோம், என விரிவாக விளக்கினார் வீரபாகு.
நிதி சார்ந்த தகவல்கள்
இந்தியாவில் எங்களுடைய வருமானம் என்பது மிகக் குறைவான சதவீதம்தான், பெரும்பாலான வருமானம் வெளிநாட்டில் இருந்ததுதான் வருகிறது. இந்த சமயத்தில்தான் கோவிட் வந்தது. நாங்கள் பரப்பாக ஓடிக்கொண்டிருந்தோம். கோவிட் எங்களை ஒரே இடத்தில் அடைத்தது. நாங்கள் செய்வது ஏற்றுமதி தொழில், டெக்னாலஜியாக இருந்தால் வீட்டில் இருந்து அனுப்ப முடியும்.
அலுவலகத்தில் பணிபுரிவதில் இருந்து கேமிராக்களை ஏற்றுமதி செய்வது வரை பல சிக்கல்கள் இருந்தது. ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்வதே வேலையாக இருந்தோம். அதனைத் தொடரந்து புதிய ஆர்டர்களை புதிய தேவைகள் உருவாகின. அப்போதுதான் நிதி குறித்து யோசிக்கத் தொடங்கினோம்.
18 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தமாக செயல்பட்டுவிட்டோம். எந்தவிதமான நெருக்கடியும் இல்லை. தற்போது நிதி இருந்தால் ’எம்பெடட் விஷன் கேமிரா’ என்னும் பிரிவில் பெரிய சந்தையை அடைய முடியும் எனத் தோன்றியது. இதற்கும் முன்னரே பலமுறை நிதி குறித்து விவாதித்திருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் நாங்கள் கவனம் செலுத்தவில்லை.
அதனைத் தொடர்ந்து எங்கள் வளர்ச்சிக்கு ஏற்ற முதலீட்டாளர்களை (பிரைவேட் ஈக்விட்டி) கண்டறிந்திருக்கிறோம். இன்னும் சில காலத்தில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும், என்றார்.
இத்தனை காலம் சீரான வளர்ச்சியில் இருந்தோம். இனி இந்த வளர்ச்சி இன்னும் வேகமாகும் என மகராஜன் வீரபாகு நம்மிடம் பேசினார்.
தொழில்துறை விஷன் கேமரா பிரிவில் முக்கியமான இடத்தில் சென்னையைச் சேர்ந்த இ-கான் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
'ஃபிட்டர் டூ 30 கோடி டர்ன்ஓவர் செய்யும் உரிமையாளர்' - ஈரோடு ‘ஆண்டவர் லேத் ஒர்க்ஸ்’ வெற்றிக்கதை!