சரவண பவன் ராஜகோபால் மறைவு: பிரபல தொழிலதிபர் ஆயுள் தண்டனைக் கைதியாகி முடிந்த சகாப்தம்!
கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற சரவண பவன் ராஜகோபால் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த சரவண பவன் உரிமையாளர் பி.ராஜகோபால் இன்று காலமானார். இவர் பிரபல சரவண பவண் ஹோட்டலை நிறுவி இன்று அது உலகெங்கிலும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜகோபாலின் உதவி மேலாளரின் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால். உடல் நிலை மோசமாக இருந்ததால் கோர்ட்டு உத்தரவின்படி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நிலை இருதினங்களாக கவலைக்கிடமானது. அதைத்தொடர்ந்து ராஜகோபாலின் மகன் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் தனது தந்தை ராஜகோபாலை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க சிறைத்துறை தலைவருக்கு மனு அளித்தது குறித்து விளக்கி, ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி வாதாடினார்.
இதனையடுத்து நீதிபதிகள், ராஜகோபாலை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்ற உத்தரவிட்டனர். மனுதாரர் தனது சொந்த செலவிலேயே தந்தையை இடமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இதனால் ஏற்படும் எந்தவித அசம்பாவித்துக்கும் தமிழக அரசு பொறுப்பு ஏற்காது என்றும் உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சரவண பவன் ராஜகோபால் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சரவணபவன் ராஜகோபால் காலமானார்.
வழக்கு பின்னணி
தன்னிடம் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தவரின் மகள் ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்ய நினைத்த ராஜகோபால், ஜீவஜோதியின் காதல் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை, கொடைக்கானல் மலைப்பாதைக்கு கடத்திச் சென்று கொலை செய்தார். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் முடிவில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தை நாடினார். அங்கு உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, ஜூலை 7ஆம் தேதிக்குள், ராஜகோபால் சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் அண்மையில் உத்தரவிட்டனர்.
உடல்நிலையைக் காரணம் காட்டி, சரணடைய விலக்கு பெற முயற்சித்தார் ராஜகோபால். ஆனால் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, சரணடைந்த அவர், செயற்கை சுவாசக் கருவிகள் உதவியோடு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இன்று காலை காலமானார்.