தீபிகா முதல் நயன்தாரா வரை - புடவை கட்டுவதில் அசத்தும் டாலி ஜெயின்!
டாலி ஜெயின் ஸாரி டிரேப்பர். அதாவது புடவை கட்டிவிடுபவர். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், இஷா அம்பானி ஆகிய மூன்று முக்கியப் பிரபலங்களின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகளில் டிரேப்பராக அசத்தியதற்காக சமீபத்திய செய்திகளில் இவர் இடம்பெற்றுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த டாலி; ஆண், பெண் இருபாலருக்கும் வேட்டி, துப்பட்டா, புடவை என வெவ்வேறு வகை ஆடைகளை கட்டி விடுவதற்குப் பிரபலமானவர். மணப்பெண்களே இவரது முக்கிய க்ளையண்டுகள் என்ற போதும் முன்னணி மாடல்களும் இதில் அடங்குவர். ஃபேஷன் ஹவுஸ், டிசைனர்கள், பிரபலங்கள் போன்றோருடனும் பணியாற்றியுள்ளார்.
இஷா அம்பானியின் திருமணத்தில் அவரது அம்மாவின் திருமண புடவையை அவரது டிசைனர் லெஹங்காவுடன் துப்பட்டாவாக டாலி அணிவித்தார். அண்மையில் நடந்த நயன் - விக்கி திருமணத்திலும் அவர்கள் இருவருக்கும் புடவை மற்றும் வேட்டி கட்டிவிட்டு அதை தனது இன்ஸ்டாவிலும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார் டாலி ஜெயின்.
டாலி டிரேப்பராக செயல்படுவதற்கு முன்பு குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்பியதால் இல்லத்தரசியாக இருந்தார். இன்று உலகம் முழுவதும் பயணம் செய்கிறார். இந்தியாவின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இவரது க்ளையண்ட் பட்டியலில் அடங்குவர்.
புடவை மீதான விருப்பம்
”என்னுடைய அம்மா புடவை அணிந்துகொள்வார். ஒரே பாணியில் அணிந்துகொண்டாலும் அதை உடுத்தியவாறே சமைப்பார்; தூங்குவார்; பயணம் செய்வார். குழந்தைப் பருவத்திலேயே என் பொம்மைகளுக்கு புடவை கட்ட எனக்குப் பிடிக்கும்,” என்கிறார் டாலி.
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த டாலி, திருமணம் முடிந்த பிறகு குடும்பத்துடன் கொல்கத்தாவிற்கு மாற்றலானார். ”எங்கள் வீட்டில் நாங்கள் புடவை மட்டுமே கட்டவேண்டும்,” எனும் அவர் திருமணத்திற்குப் பிறகு வெவ்வேறு விதங்களில் புடவை அணியத் துவங்கினார்.
”நான் புடவை அணியும் விதத்தைப் பார்ப்பவர்கள் பாராட்டினர். நான் மாறுபட்ட விதத்தில் புடவை கட்டும்போதெல்லாம் எனக்கு அதிக பாராட்டு கிடைத்தது. பெண்கள் என்னைப் போன்றே புடவை அணிய விரும்பினர். அவர்களுக்கும் கற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.”
ஃபேஷன் பின்னணி ஏதுமின்றி தனது ஆர்வத்தில் ஈடுபட்டார். பொம்மைகளுக்கு புடவை கட்டுவதில் கவனம் செலுத்தினார். ஒவ்வொரு முறை புதிதாக புடவை கட்டும்போதும் அதை புகைப்படம் எடுத்து வைப்பார்.
டாலி ஸாரி டிரேப்பர் ஆவது குறித்து தன்னுடைய அப்பாவுடன் கலந்துரையாடினார். திடமான முடிவெடுத்த பிறகு செயலில் இறங்குமாறு அவர் அறிவுரை வழங்கினார். பல ஆண்டுகளாக அவர் பல்வேறு பாணியில் புடவை கட்ட பயிற்சி செய்தது உதவியது. அதை ஒரு சிடி-யில் பதிவு செய்து பகிர்ந்தார். விரைவில் 18.5 நொடிகளில் புடவையை கட்டி லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்தார். அத்துடன் பல்வேறு விதங்களில் புடவை கட்டியதற்காகவும் அங்கீகரிக்கப்பட்டார்.
அப்போதிருந்து டாலி தனது பணியைத் தொடர்ந்து ஸாரி டிரேப்பராக (Saree Draper) செயல்படத் துவங்கினார்.
படைப்பாற்றல் நிறைந்த பணி வாழ்க்கை
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அவரை ஒரு கலைஞராக ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றவருக்கு புடவை கட்டிவிடுவதில் அதிக ஈடுபாடு கொண்ட நபராகவே பார்க்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் உள்ளூரில் இருக்கும் அழகுக் கலை நிபுணர்களே மணப்பெண்ணுக்கு புடவை கட்டிவிடுவார்கள். ஆனால் டிரேப்பரின் கைவண்ணத்தில் எவ்வாறு ஆடைகளின் தோற்றம் மாறிவிடும் என்று மணப்பெண்களுக்கும் வடிவமைப்பாளர்களுக்கும் காட்டத் துவங்கினார்.
அத்துடன் மணப்பெண்ணுக்கு அவரது வாழ்வில் மிகவும் விசேஷமான தினமான திருமண நாளில் அனைத்தும் கச்சிதமாக இருப்பதை உறுதி செய்தார்.
இன்று புடவை கட்ட எத்தனை கஜம் தேவைப்படும் என்பதைத் தெரிந்துகொள்ள பேஷன் டிசைனர்கள் அவரை அணுகுகின்றனர். ஏனெனில் அவர் ஸாரி டிரேப்பர் மட்டுமல்ல இன்று அவர் ஒரு கலைஞர். எந்த வகை துணியாக இருந்தாலும் அதற்கு ஒரு மாறுபட்ட தோற்றதை அவரால் வழங்கமுடியும்.
”எந்த வகை துணியாக இருந்தாலும் மாறுபட்ட தோற்றத்தை வழங்கும் வகையில் என்னால் கட்டமுடியும்,” என்றார்.
க்ளையண்டுகளின் ஸ்டைல் தேவை, வடிவமைப்பாளரின் நோக்கம் இரண்டிற்கும் ஈடுகொடுக்கும் வகையில் தன்னால் செயல்பட முடியும் என்பதை டாலி கண்டறிந்தார். தீபிகா படுகோனின் திருமணத்தின்போது புடவை கட்டிவிட்டது மிகவும் பிடித்திருந்ததாக டாலி தெரிவித்தார். தீபிகா படுகோன் தனது ஆடை அலங்காரம் தொடர்பாக டாலிக்கு அளித்த சுதந்திரத்தை அவர் நினைவுகூர்ந்தார். இருப்பினும் அவரது செயல்பாடுகளுக்கே உரிய சவால்கள் இருந்தன.
“தீபிகாவின் ஸ்டைலையும் சப்யசாசியின் வடிவமைப்பையும் பொறுத்தவரை நான் ஏதும் அதிகம் செய்யவேண்டிய தேவை இருக்கவில்லை. தீபிகாவின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு புடவையை கட்டி, அதே நேரம் சப்யாவின் வடிவமைப்பிற்கும் ஏற்றதாக இருக்குமாறு கவனமாக பார்த்துக்கொண்டேன்,” என்றார்.
புடவையை கண்களைக் கவரும் வகையில் மாற்றுதல்
கடந்த சில ஆண்டுகளாக புடவை மீண்டும் ஃபேஷனாக மாறத் துவங்கியுள்ளது. டாலி 357 வகையில் புடவை கட்டக்கூடியவர். இவர் டேபிள் மீது வைக்கப்படும் புகைப்படங்களுடன்கூடிய ஒரு மிகப்பெரிய புத்தகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் புடவையை கட்டுவதில் 365 வகைகளை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். ஒரு வருடத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றலாம். எனவே போதுமான ஆடைகள் இல்லை என்கிற கவலை இனி மக்களுக்கு இருக்காது.
”உங்கள் அலமாரியைத் திறந்து ஒரு ஆடையைக் கையில் எடுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தோற்றத்துடன் இருக்க எப்படி வெவ்வேறு விதமாக உடுத்தலாம் எனப் பாருங்கள் என மக்களிடம் சொல்ல விரும்புகிறேன்,” என்றார்.
புடவையைக் கொண்டு பல்வேறு புதுமைகள் படைக்கமுடியும் என்பதை தன்னைப் போன்றோர் காட்டியுள்ளனர் என்கிறார் டாலி. “நான் 30-45 வயதுடையப் பெண்களை இலக்காகக் கொள்ளவில்லை. என்னுடைய இலக்கு 20-25 வயதுடைய பெண்களே. நீங்கள் அணியும் டாப்ஸ், ஸ்கர்ட் ஆடைகளுடனும் பாண்ட், ப்ளாசோ போன்ற ஆடைகளுடனும், சாதாரண குர்தாவுடனும் எவ்வாறு புடவையை கட்டலாம் என்பதை என்னால் காட்டமுடியும் என பெண்களிடம் கூறுவேன்.
இளம்பெண்களுடன் அவர்களது மொழியிலும் அவர்களது விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டும் உரையாடுவேன். இதுவே அவர்களது கவனம் என் மீது திரும்பக் காரணமாக அமைந்தது,” என்றார்.
டாலியின் சுயகற்றலே அவரது வெற்றிக்கு காரணம் என்கிறார். “சுயமாக கற்கும் சுபாவம் கொண்ட என்னைப் போன்றோருக்கு வானமே எல்லை. என்னால் சுதந்திரமாக புதுமை படைக்க முடிகிறது,” என்றார்.
புன்னகை மலரச் செய்தல்
ஒவ்வொரு மணப்பெண்ணின் திருமண நாள் அன்றும் உடன் இருப்பது கடினமாக இருந்தது. இதை ஏழாண்டுகளுக்கு முன்பு டாலி உணர்ந்தார்.
”ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கமுடியாது என்பதால் அழைப்பை மறுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது,” என்றார்.
அந்த சமயத்தில்தான் பெண்கள் அடங்கிய ஒரு குழுவிற்கு பயிற்சியளிக்கத் துவங்கினார். இன்று புடவை கட்டும் கலையில் நிபுணத்துவம் பெற்ற 25 பெண்கள் அடங்கிய குழு அவரிடம் உள்ளது. ”இன்று மணப்பெண்ணுடன் என்னால் இருக்கமுடியவில்லை என்றாலும் அவர்களது திருமண நாளில் டாலி ஜெயின் டிரேப் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்யும் நிபுணர்கள் என்னிடம் உள்ளனர்,” என்றார். ஒரு மாதத்திற்கு சுமார் 500 டிரேப் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். ஆனால் அவர்கள் வசூலிக்கும் கட்டணம் குறித்த எந்தத் தகவல்களையும் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.
டாலி புடவை கட்டிவிடுவதற்கென அதிக முன்னேற்பாடுகள் ஏதும் செய்வதில்லை. திருமணத்திற்கு ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பு ஆடையைப் பார்ப்பார். பிரபலங்களின் திருமணங்களின் போது மேக் அப் சமயத்தில் மட்டுமே ஆடைகளைப் பார்க்கமுடியும். மணமகளுக்கு ஒரு பாணி பிடிக்கவில்லையெனில் புதிதாக மாற்ற 10-15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்.
இதற்கு முன்பு என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிவிக்க டிசைனர்கள் என்னைச் சுற்றி இருப்பார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது நம்பிக்கையை வென்றெடுத்துள்ளேன். நான் கட்டும் விதம் கச்சிதமாக இருக்கும் என்கிற நம்பிக்கை அவர்களுக்குப் பிறந்தது,” என்றார்.
அதேசமயம் சில நேரங்களில் திட்டமிட்டவாறு நடக்காமல் போவதும் இயல்புதான். அத்தகைய சூழலை சீரமைக்கவேண்டிய நிலை டாலிக்கு ஏற்படும். தாய்லாந்தைச் சேர்ந்த மணமகளுடன் அத்தகைய அனுபவம் ஏற்பட்டதை டாலி நினைவுகூர்ந்தார். அந்த மணமகன் ஆறடி உயரம் இருந்தார். அவரது தோற்றத்திற்கு பொருந்தும் வகையில் மணமகள் லெஹன்கா உடன் ஹை ஹீல்ஸ் அணிய திட்டமிட்டார். ஆனால் மணமகளுக்காக பிரத்யேகமாக தயாரான ஆடையின் நீளம் போதுமானதாக இல்லை. மனமுடைந்து காணப்பட்ட மணமகளை தனது திறமையால் ஆச்சரியப்படுத்தினார் டாலி. மற்ற புடவைகளைப் பயன்படுத்தி தேவையான நீளத்தை கொடுத்து அசல் வடிவமைப்பைக் காட்டிலும் சிறப்பான தோற்றத்தை மணமகளுக்கு வழங்கினார்.
பலர் தன்னிடம் அன்பு காட்டுவதை டாலி அறிந்திருந்தார். அவரது பயணத்தில் ஒரு சிலருடனான இணைப்பு அவர் மனதில் நீங்காமல் இடம்பெற்றுள்ளது.
பிலாஸ்பூரில் இருந்து ஒருவர் டாலியை அழைத்துள்ளார். அவரது மகள் தனது திருமணத்திற்கு டாலி புடவை கட்டிவிடவேண்டும் என விரும்பியுள்ளார். டாலிக்கு செலுத்தவேண்டிய தொகையை அவரால் வழங்க முடியாத நிலை இருந்தும்கூட மகளின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் டாலியை அழைத்துள்ளார். உணர்வுப்பூர்வமான அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட டாலி தனது சொந்த செலவில் பிலாஸ்பூர் சென்றுள்ளார்.
”மணப்பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டதும் என்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்ததை உணர்ந்தேன். அவரது உணர்ச்சியை என்னால் வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. இன்று வரை அவருடன் தொடர்பில் இருக்கிறேன். இது போன்ற தருணங்கள் நம் வாழ்நாள் முழுவதும் மனதில் நீங்காமல் இடம்பெற்றிருக்கும்,” என்றார்.
வெற்றியை முறையாகவே கைப்பற்றமுடியும்
டாலி தன்னுடைய ஆர்வத்தையே தொழிலாக மாற்றியுள்ளார். ”நான் எப்போதும் மனம் தளர்ந்துவிட மாட்டேன். அதனால் என்னை யாரும் தோற்கடிக்கமுடியாது,” என்றார். தான் தேர்வு செய்த வாழ்க்கைப் பாதையானது அதற்கே உரிய சவால்களுடன் இருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.
தனது வெற்றிக்கு தனது குடும்பம்தான் காரணம் என்கிறார் டாலி. அவரது இரண்டு வயது குழந்தைக்கு ஒரு முறை காய்ச்சல் ஏற்பட்டபோது அவர் பயணம் மேற்கொள்ளவேண்டிய சூழல் நிலவியது. அவரது மகள் போனில் தொடர்பு கொண்டு மருந்துகள் எடுத்துக்கொண்டதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“மணமகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை கவனித்துவிட்டு வருமாறு என் மகள் என்னிடம் கூறினார். நான் வீடு திரும்பியபோது அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இன்று வரை என் மகள் எனக்கு உறுதுணையாக இருந்த அந்தத் தருணம் என் நினைவில் பசுமையாக உள்ளது,” என்றார்.
டாலி மணப்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. க்ளையண்டுகள் தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்த தருணங்கள் உண்டு. அவரது அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் டாலி அபுதாபி சென்றிருந்தார். அவர் அபுதாபி சென்றடைந்த மறு தினமே அவரது அப்பா இறந்துவிட்டார். ”நான் உடனே கிளம்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. மணப்பெண்ணுடன் இருக்கமுடியாத நிலை ஏற்பட்டதால் முடிவை அவரிடமே விட்டுவிட்டேன். என்னுடைய அப்பாவை இறுதியாக ஒருமுறை பார்ப்பதுதான் முக்கியம் என்று கூறி என்னை வழியனுப்பி வைத்தார். மிகவும் நெகிழ்ந்து போனேன். மற்றொரு நிகழ்விற்கு நிச்சயம் வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றேன்,” என்றார்.
பணியும் பயணமுமாக டாலியின் வாழ்க்கை பரபரப்பாக இருக்கும் நிலையில் குடும்ப நிகழ்வுகள் பலவற்றில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. பெரும்பாலான பிறந்தநாள், திருமண நாள் நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் சில சமயம் தனது பிறந்தநாளையும் திருமண நாளையும்கூட தனது கணவருடன் செலவிடமுடியாமல் போகிறது என்கிறார். இருப்பினும் டாலி தனது சூழ்நிலையை நினைத்து வருந்துவதில்லை.
ஆங்கில கட்டுரையாளர் : தன்வி துபே | தமிழில் : ஸ்ரீவித்யா